
கடந்த ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் மே மாத யுபிஐ பணப்பரிமாற்றம் அதிகரித்திருந்தாலும், மறுபக்கம் பணப்புழக்கமும் அதே வேகத்தில்தான் இருக்கிறது என்கின்றன தரவுகள்.
கடந்த மே மாதம், நாடு முழுவதும் யுபிஐ எனப்படும் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறையில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 60 கோடி பணப்பரிமாற்றங்கள் நடந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
அதாவது, கடந்த மே மாதம், யுபிஐ முறையில் பணப்பரிவர்த்தனையானது புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஒரு மாதத்தில் 1868 கோடி யுபிஐ பணப்பரிமாற்றங்கள் செய்யப்பட்டு, அதன் மூலம் ரு.25,1 லட்சம் கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.
இதுவே கடந்த ஏப்ரல் மாதம் 1,789 கோடி பணப்பரிமாற்றங்களாகவும், இதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணப்பரிமாற்ற தொகை ரூ.23.9 லட்சம் கோடியாகவும் இருந்துள்ளது.
அதுபோல, கடந்த மார்ச் மாதம் புழக்கத்திலிருந்த பணத்தின் அளவு ரூ.36.86 லட்சம் கோடி. இதில் 41 சதவீதம் 500 ரூபாய் நோட்டுகள்தான். அதுபோல, பணப்புழக்கத்தில் உள்ள பணமதிப்புத் தொகையில், ரூ.500 நோட்டுகள்தான் 86 சதவீதத்தைக் கொண்டிருக்கின்றன
மேலும், ரூ.20, ரூ.50, ரூ.100 மற்றும் ரூ.200 ஆகியவை மொத்தம் சேர்த்தே 35.6 சதவீத நோட்டுகள் பணப்புழக்கத்தில் இருப்பதாகவும் இதன் ஒட்டுமொத்த மதிப்பும் 10.9 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், நாடு டிஜிட்டல் பணப்பரிமாற்றத்துக்கு வேகமாகப் மாறி வந்தாலும்கூட, பணப்புழக்கத்தின் அளவிலும் அதே வேகம் உள்ளது என்கிறார்கள்.
இந்த நிலையில்தான், குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தையும் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளைக் காட்டிலும் குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வைப்பதும் இலக்காக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு செப்.30ஆம் தேதி நிலவரப்படி, ஏடிஎம்களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த நோட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதும் ஆர்பிஐ திட்டங்களில் ஒன்று.
இதனையெல்லாம் பார்க்கும்போது, எவ்வாறு ரூ.2000 நோட்டின் புழக்கத்தை மெல்லக் குறைத்து, அது மிக எளிதாக செல்லாததாக அறிவிக்கப்பட்டதோ அதுபோல ரூ.500 நோட்டின் புழக்கத்தைக் குறைத்து பிறகு செல்லாததாக அறிவிக்கலாம் என்று பல காலமாகக் கூறிக்கொண்டிருப்பவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது போல உள்ளதாகக் கூறப்படுகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகளை செல்லாதது என அறிவித்தபோது, பெரும்பாலானோரிடம் அந்த நோட்டுகள் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.