
மும்பை: மேக்ரோ பொருளாதார தரவு வெளியீட்டிற்கு முன்னதாக, முதலீட்டாளர்கள் பெருமை காக்க விரும்பியதால், இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் ஏற்ற இறக்கமில்லாமல் சமமான குறிப்பில் முடிந்தது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 451.57 புள்ளிகள் சரிந்து 73,663.60 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 12.85 புள்ளிகள் சரிந்து 74,102.32 புள்ளிகளில் நிலைபெற்றது. எனினும் நிஃப்டி 37.60 புள்ளிகள் உயர்ந்து 22,497.90 புள்ளிகளில் நிலைபெற்றது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இண்டஸ்இண்ட் வங்கி, இன்போசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், மஹிந்திரா & மஹிந்திரா, சொமேட்டோ, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பவர் கிரிட், ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், அதானி போர்ட்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் விலை சரிந்தது.
மறுபுறம் சன் பார்மாசூட்டிகல்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், மாருதி சுசூகி இந்தியா, லார்சன் & டூப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் டைட்டன் ஆகியவை உயர்ந்து முடிந்தது.
நடைபெற்று கொண்டிருக்கும் வர்த்தகப் போரால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகளால் உந்தப்பட்ட அமெரிக்கா மற்றும் பிற ஆசிய சந்தைகளில் குறிப்பிடத்தக்க விற்பனை இருந்தபோதிலும், உள்நாட்டு சந்தை படிப்படியாக மீட்சியை நோக்கி பயணிக்கிறது.
சமீபத்திய திருத்தங்களைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, தளர்ந்து வரும் டாலர் குறியீடு மற்றும் உள்நாட்டு வருவாயில் மீட்சி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதாக தெரிகிறது. அதே வேளையில், வரவிருக்கும் சில்லறை பணவீக்க தரவுகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தனர்.
துறை வாரியாக, ஒரு கலவையான போக்கு வர்த்தகர்களை எச்சரிக்கையாக வைத்திருந்தது. ரியால்டி, நிதி மற்றும் உலோக பங்குகள் உயர்ந்தும் அதே நேரத்தில் வங்கி மற்றும் ஐடி குறியீடு சரிந்து முடிவடைந்தது.
வர்த்தக முடிவில் நிஃப்டி டாப் 50 பங்குகள் கொண்ட குறியீடு 22,500 ல் முடிவடைந்த நிலையில் சென்செக்ஸ் 74,100 ஆக நிலைபெற்றது. இண்டஸ்இண்ட் வங்கி பங்குகளில் ஏற்பட்ட விற்பனையால், இது வங்கி துறையை மேலும் அழுத்தத்தில் வைத்தது. அதே வேளையில் ரியாலிட்டி, டெலிகாம் மற்றும் எண்ணெய் & எரிவாயு துறை பங்குகள் உயர்ந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.7% உயர்ந்தது மற்றும் ஸ்மால்கேப் குறியீடு 0.7% சரிந்தது.
இதற்கிடையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.485.41 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.263.51 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஆசிய சந்தைகளில் இன்று டோக்கியோ மற்றும் சியோல் சரிந்தும், ஹாங்காங் சமமாக முடிவடைந்தது. ஷாங்காய் உயர்ந்து முடிந்தது. நேற்று (திங்கள்கிழமை) வர்த்தகத்தில் அமெரிக்க சந்தைகள் சுமார் 4 சதவிகிதமாக சரிந்து முடிந்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.71 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 69.77 டாலராக உள்ளது.
இதையும் படிக்க: மாருதி விற்பனை 1,99,400-ஆக உயா்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.