வெள்ளி நகைகளை ஈடு வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

வெள்ளி நாணயங்கள், நகைகளை ஈடு வைத்து இனி கடன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி
வெள்ளி
Updated on
2 min read

தங்க நகைகளை வங்கிகளில் ஈடு (அடகு) வைத்து தங்க நகைக் கடன் பெறுவது போல, வெள்ளி நகைகளையும் இனி வங்கிகளில் வைத்துக் கடன் பெறலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

எனவே, தங்கத்தைப் போலவே இனி மக்கள் வெள்ளியையும் உடனடி நிதித் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த குடும்பத்திலும் இருக்கும் தங்கத்தின் மதிப்பு 34,600 டன்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவு, உலகிலேயே, வேறு எந்த நாட்டின் மத்திய வங்கியும் தன்னுடைய கையிருப்பில் வைத்திருக்கும் ஒட்டுமொத்த தங்கத்துக்கும் ஈடாகாது என்றும், இந்தியாவின் கலாசாரத்தில் தங்க நகைகளுக்கும், தங்க சேமிப்பும் தொடர்ந்து வரும் நிலையில், இனி அதனுடன் வெள்ளியும் இணைந்து கொள்ளும்.

இதுவரை வெறும் சொத்து மதிப்பாக மட்டுமே வெள்ளி கருதப்பட்டு வந்த நிலையில், இதுவும் இனி அவசரத் தேவைக்கு உதவும் என்ற நிலை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்த நடைமுறை வரும் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. அதே வேளையில், வெள்ளி நாணயங்கள் மற்றும் நகைகளை மட்டுமே வைத்து கடன் பெற முடியும் என்றும், வெள்ளிக் கட்டிகள், ஆன்லைன் வெள்ளி முதலீடுகளுக்கு நிகராகக் கடன் பெற முடியாது என்றும் விளக்கம் கொடுத்துள்ளது.

நாள்தோறும் தங்கத்தின் விலையைப் போல வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வெள்ளி தொடர்பான ஆர்பிஐ அறிவிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் வெள்ளி கிடைக்கும் அளவு மற்றும், மின் வாகனங்கள், சூரிய தகடுகள் தயாரிப்பில் அதிகளவில் வெள்ளி பயன்படுத்தப்படுவது, பங்குச் சந்தைகளில் நிலையற்ற தன்மை காரணமாக முதலீட்டாளர்கள் உலோகங்களைத் தேர்வு செய்வது போன்றவையே வெள்ளி விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

வங்கிகள் அல்லது அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவனங்களில் தங்கம் போல இனி வெள்ளியை நகைகளைக் கொடுத்து கடன் பெற முடியும்.

தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதத்தை கடனாகப் பெற முடியும் என்பது போல வெள்ளியின் 75 சதவீத மதிப்புத் தொகையை கடனாகப் பெறலாம் எனப்படுகிறது.

அபாயங்கள்

தங்கம் விலையைப் போலவே, வெள்ளி விலையும் ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால், ஒருவேளை, வாங்கிய கடன் தொகையை விட அதன் மதிப்பு குறையும்போது, கடனை திரும்ப செலுத்துமாறு அல்லது குறிப்பிட்ட தொகையை செலுத்த வங்கிகள் கோரலாம்.

தனிநபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இனி அவசர நிதித் தேவைக்கு வெறும் தங்கத்தை மட்டும் நம்பியில்லாமல், வெள்ளிப் பொருள்களைப் பயன்படுத்தலாம் என்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது.

அதாவது, கடன் மதிப்பு மற்றும் வெள்ளியின் மதிப்புக்கான விதிமுறைகளில், ரூ.2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு வெள்ளியின் மதிப்பில் 85 சதவிகிதம் வரையிலும், ரூ.2.5 முதல் ரூ.5 லட்சத்திற்கு வெள்ளியின் மதிப்பில் 80 சதவிகிதம் வரையிலும் ரூ.5 லட்சத்திற்கு மேல் வெள்ளியின் மதிப்பில் 75 சதவிகிதம் வரையிலும் கடன் வழங்கலாம் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.

மேலும், ஒரு தனிநபருக்கு 10 கிலோ வெள்ளி நகைகள் வரையிலும் என்ற அதிகபட்ச வரம்பும், வெள்ளி நாணயங்கள் என்றால் 50 கிராம் என்ற அதிகபட்ச வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தங்கம் போன்று அல்லாமல், வெள்ளிப் பொருள்கள் பெரிதாக இருக்கலாம், அதிகளவில் வெள்ளியைக் கொடுத்தால்தான், ஒரு சிறு தொகையாவது கடனாகக் கிடைக்கும் என்பதால், நிதி நிறுவனங்கள், தங்களது சேமிப்புப் பெட்டகங்களில் வைப்பதற்கும் வசதி இல்லை மற்றும் அதிக இடத்தைப் பிடித்துக் கொள்ளும் போன்ற கூடுதல் காரணங்களாலும் வெள்ளியை வைத்து இதுவரை கடன் வழங்குவதில்லை என்று முடிவெடுத்திருந்தன.

ஆனால், 2025ஆம் ஆண்டு வெள்ளி விலை கடுமையான உயர்வை சந்தித்து, வங்கிக் கடன் பெறும் அளவுக்கு மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com