

நாட்டில், கிரெடிட் கார்டு மூலம் செலவிடுவது 23 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் மக்கள், கிரெடிட் கார்டு மூலம் 2.17 லட்சம் கோடி செலவிட்டிருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் கிரெடிட் கார்டு மூலம் செலவிடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பண்டிகைக் காலம் மற்றும் ஜிஎஸ்டி வரி விகிதம் குறைப்பு காரணமாக கடந்த செப்டம்பரில் அதிகளவில் கிரெடிட் கார்டு மூலம் செலவிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது, 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பயன்பாட்டில் இருக்கும் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 11.3 கோடியாக அதிகரித்திருப்பதாகவும், இது இந்த ஆண்டு தொடக்கத்தில் 10.6 கோடியாக இருந்ததாகவும் இது 7 சதவீதம் அதிகம்.
மாதந்தோறும், கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை குறைந்தது 1 சதவீதம் அளவுக்கு அதிகரித்து வருகிறது.
செப்டம்பரில் சராசரியாக, ஒரு கிரெடிட் கார்டிலிருந்து ரூ.19,144 செலவிடப்பட்டிருப்பதாகவும், வங்கிகள் தரப்பில் அதிகமான கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுவது முன்னெடுக்கப்பட்டு வருவதும், பண்டிகைக் காலமும் இதற்குக் காரணமாக இருந்துள்ளது.
தனியார் வங்கியின் கிரெடிட் கார்டுகள் மூலம் செலவிட்டிருக்கும் தொகை, பொதுத் துறை வங்கிகளின் கிரெடிட் கார்டில் செலவிடப்பட்டிருக்கும் தொகையைக் காட்டிலும் அதிகம் என்றும், டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் புள்ளிகள் போன்றவையும் அதிகம் செலவிடக் காரணங்களாக அமைந்துள்ளன.
செப்டம்பர் மாத நிறைவில், கிரெடிட் கார்டு கடன் தொகை ரூ.2.82 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தைக் காட்டிலும் ரூ.2.89 லட்சம் கோடியை விட சற்றுக் குறைவு என்றாலும், கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதம் ரூ.2.72 லட்சத்தைக் காட்டிலும் அதிகமாகும்.
கிரெடிட் கார்டு மூலம் செலவிடுவது அதிகரித்திருப்பது மட்டுமல்லாமல், மறுபக்கம், நுகர்வு மற்றும் கடனை திரும்பச் செலுத்துவதிலும் மக்கள் கவனமுடன் இருப்பதாகவும், தங்களது நிதி நிலைமையை சரியாக நிர்வகித்து பெரும்பாலும் கடன் தொகை திரும்ப செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.