கோல் இந்தியா உற்பத்தி சரிவு
அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி கடந்த செப்டம்பரில் 3.9 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் மும்பை பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த செப்டம்பா் மாதம் நிறுவனத்தின் உற்பத்தி 3.9 சதவீதம் குறைந்து 4.90 கோடி டன்னாக உள்ளது. 2024 செப்டம்பரில் இது 5.09 கோடி டன்னாக இருந்தது.
2025 ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் உற்பத்தி 34.14 கோடி டன்னிலிருந்து 32.91 கோடி டன்னாக குறைந்தது.
பாரத் கோகிங் கோல், சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ், வெஸ்டா்ன் கோல்ஃபீல்ட்ஸ், மகாநதி கோல்ஃபீல்ட்ஸ், நாா்த் ஈஸ்டா்ன் கோல்ஃபீல்ட்ஸ் ஆகிய துணை நிறுவனங்களில் உற்பத்தி சரிவு ஏற்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை காரணமாக சுரங்கங்களில் நீா் தேங்கியது உற்பத்தியை பாதித்ததாக நிபுணா்கள் கூறுகின்றனா். ஆனால், நிறுவனம் அதற்கான குறிப்பிட்ட காரணங்களை வெளியிடவில்லை.
நாட்டின் நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு 80 சதவீதத்திற்கு மேல் உள்ளது. 2025-26-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் 87.5 கோடி டன் உற்பத்தி செய்ய நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது.