
மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி பங்குகளில் ஏற்பட்ட விற்பனையைத் தொடர்ந்து, பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, இன்றைய வர்த்தகத்தில் சரிவுடன் முடிவடைந்ததால் 4 நாள் ஏற்றம் முடிவுக்கு வந்தது.
நிலையற்ற வர்த்தகத்தில், இன்றயை காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 82,257.74 புள்ளிகள் சென்று பிறகு குறைந்தபட்சமாக 81,646.08 புள்ளிகளை எட்டியது.
வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 153.09 புள்ளிகள் சரிந்து 81,773.66 புள்ளிகளகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 62.15 புள்ளிகள் சரிந்து 25,046.15 ஆக நிலைபெற்றது.
பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.7% சரிந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடுகள் 0.4% சரிந்தன. ஆட்டோ, ரியல் எஸ்டேட் மற்றும் வங்கிப் பங்குகளில் முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டியதை தொடர்ந்து பங்குச் சந்தை சரிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சென்செக்ஸில் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, பாரத் எலக்ட்ரானிக்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், டிரென்ட், சன் பார்மா, பவர் கிரிட் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சரிந்தும் டைட்டன், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.சி.எல் டெக் மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன.
அமைதியான தொடக்கத்திற்குப் பிறகு, நிஃப்டி பெரும்பாலான அமர்வில் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமானது. இறுதியில் நிஃப்டி 25,046.15 புள்ளிகளாக அதன் இன்றைய குறைந்த நிலைக்கு சென்றது.
துறை வாரியான குறியீடுகளில், ரியல் எஸ்டேட் 1.88 சதவிகிதமும், மின்சாரம் 1.49 சதவிகிதமும், ஆட்டோ 1.35 சதவிகிதமும், பயன்பாட்டுப் பிரிவு 1.29 சதவிகிதமும் சரிந்தது. இருப்பினும் பிஎஸ்இ-யில் ஃபோகஸ்டு ஐடி 1.67 சதவிகிதமும், ஐடி குறியீடு 1.50 சதவிகிதமும், டெக் பிரிவு 1.34 சதவிகிதம் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் 0.37 சதவிகிதம் உயர்ந்தன.
பிஎஸ்இ-யில் 2,434 பங்குகள் சரிந்த நிலையில் 1,740 பங்குகள் உயர்ந்தும், 156 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்கிழமை) ரூ.1,440.66 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஆசிய சந்தைகளில், ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஹாங்காங் ஹாங் செங் குறியீடு சரிவுடன் முடிவடைந்தன. சீனா மற்றும் தென் கொரிய சந்தைகள் விடுமுறைக்காக மூடப்பட்டிருந்தன.
ஐரோப்பாவில் சந்தைகள் உயர்ந்த நிலையில் நேற்று அமெரிக்க சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.
உலகளாவிய கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 1.16 சதவிகிதம் உயர்ந்து 66.21 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: செப்டம்பரில் மந்தமான சேவைகள் துறை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.