

பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாகவும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் விருப்பம் காட்டினாலும், நெடுந்தொலைவு பயணங்களுக்கு உகந்ததாக இல்லை என்ற கருத்து நிலவி வருகின்றது.
இதனைக் கருத்தில் கொண்டு நீண்ட தொலைவு பயணங்கள் செய்யக்கூடிய வகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்னணி நிறுவனங்கள் தயாரித்து வருகின்றனர்.
ஓலா எஸ் 1 ப்ரோ, ப்ரோ +
பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் குறைந்த விலையில் அதிக தொலைவு பயணிக்கும் வாகனங்களை தயாரித்து அறிமுகம் செய்து வருகின்றது.
இந்த வரிசையில் ஓலா எஸ் 1 ப்ரோ + மூன்றாவது தலைமுறை ஸ்கூட்டர் முதன்மையான மாடலாக இருக்கின்றது. மணிக்கு 5.2 கிலோவாட் பேட்டரி திறன் கொண்ட மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 320 கி.மீ. பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 130 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், நெடுஞ்சாலை பயணங்களை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதே மாடலில் 5 கிலோவாட் பேட்டரி திறன் கொண்ட ஸ்கூட்டர், 242 கிலோ மீட்டர் பயணிக்க முடியும். இந்த மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ. 1.54 லட்சமாக உள்ளது.
ஓலா எஸ் 1 ப்ரோ மூன்றாவது தலைமுறை மாடலும் இரண்டு வகை பேட்டரி அம்சங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. 4 கிலோவாட் பேட்டரி வாகனம் 242 கி.மீ., 3 கிலோவாட் பேட்டரி வாகனம் 176 கி.மீ. பயணிக்கும். இதன் விலை ரூ. 1.24 லட்சம்.
வாய்ஸ் கமெண்ட்ஸ், யூஸர் புரொபைல்ஸ், ஓடிஏ அப்டேட்ஸ் உள்ளிட்ட மென்பொருள் வசதிகளுடன் 7 அங்குல தொடுதிரை கொடுக்கப்பட்டுள்ளது.
ஏதர் 450 எஸ், 450 எக்ஸ்
ஏதர் நிறுவனத்தின் 450 எஸ் மற்றும் 450 எக்ஸ் மாடல்கள் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்து வருகின்றன. தினசரி பயணங்களுக்கு ஏற்ற வகையில் ஏதர் நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வடிவமைத்து வருகின்றது.
ஏதர் 450 எஸ் மாடலைப் பொறுத்தவரை, 2.9 கிலோவாட் மற்றும் 3.7 கிலோவாட் ஆகிய இரு வகை பேட்டரி வசதிகளுடன் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 122 கி.மீ. மற்றும் 161 கி.மீ. பயணிக்க முடியும் என ஏதர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடக்க விலை ரூ. 1.20 லட்சம்.
அதேபோல், ஏதர் 450 எக்ஸ் மாடலும் 2.9 கிலோவாட் மற்றும் 3.7 கிலோவாட் ஆகிய இரு வகை பேட்டரி வசதிகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. 122 கி.மீ. மற்றும் 161 கி.மீ. பயணிக்க முடியும். தொடக்க விலை ரூ. 1.47 லட்சம்.
8 ஆண்டுகள் வரை பேட்டரி வாரண்டி கொடுக்கப்பட்டுள்ளது. 7 இன்ச் தொடுதிரை, வாய்ஸ் கமெண்ட்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் கொண்டுள்ளது.
டிவிஎஸ் ஐக்யூப்
டிவிஎஸ் நிறுவனத்தின் ஐக்யூப் மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தினசரி நகரப் பயணங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கின்றது. இந்த வகை ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ. 95,000 ஆகும்.
ஐக்யூப், ஐக்யூப் எஸ், ஐக்யூப் எஸ்டி ஆகிய மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஐக்யூப் மாடல் 2.2 கிலோவாட் பேட்டரி திறன் கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 94 கி.மீ. பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஐக்யூப் எஸ் 3.5 கிலோவாட் பேட்டரி திறன் கொண்டது, 145 கி.மீ. பயணிக்கும். ஆரம்ப விலை ரூ. 1.18 லட்சம் ஆகும். ஐக்யூப் எஸ்டி 3.5 கிலோவாட் பேட்டரி திறனில் 145 கி.மீ. பயணிக்கும். ஆரம்ப விலை 1.28 லட்சம்.
எல்இடி ஹெட்லைட், பில்லியன் பேக் ரெஸ்ட், 17.78 செ.மீ. தொடுதிரை, 32 லிட்டர் ஸ்டோரேஜ் வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.