மும்பை: தனியார் வங்கி பங்குகளின் விற்பனையை தொடர்ந்து உலகளாவிய சந்தையில் ஏற்பட்ட பலவீனமான போக்கு உள்ளிட்டவையால், தொடர்ந்து 2-வது நாளாக பெஞ்ச்மார்க் ஈக்விட்டி சென்செக்ஸ் கிட்டத்தட்ட 466 புள்ளிகள் சரிந்தது முடிவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 498.8 புள்ளிகள் சரிந்து 83,905.66 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 465.75 புள்ளிகள் சரிந்து 83,938.71 ஆக இருந்தது. 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 155.75 புள்ளிகள் சரிந்து 25,722.10 ஆக நிலைபெற்றது.
இந்த வாரத்தில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முறையே 0.3 சதவிகிதம் மற்றும் 0.6 சதவிகிதம் வரை சரிந்தன. இருப்பினும், அக்டோபர் மாதத்தில், இரண்டு குறியீடுகளும் தலா 4.5 சதவிகிதம் வரை அதிகரித்தன.
தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம், நிறுவனங்களின் காலாண்டு வருவாய் மற்றும் அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகித நடவடிக்கை குறித்த தெளிவின்மை ஆகியவற்றால் முதலீட்டாளர்களின் உணர்வைத் இது வெகுவாக பாதித்ததாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சென்செக்ஸில் எடர்னல், என்டிபிசி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிட், டிரென்ட் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்த நிலையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், லார்சன் & டூப்ரோ, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐடிசி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தன.
நிஃப்டி-யில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஐஷர் மோட்டார்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, டிசிஎஸ் ஆகியவை உயர்ந்தும் அதே நேரத்தில் சிப்லா, எடர்னல், மேக்ஸ் ஹெல்த்கேர், என்டிபிசி, இன்டர்குளோப் ஏவியேஷன் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிவடைந்தன.
துறைகளில், பொதுத்துறை நிறுவன வங்கி குறியீடு 1.5% உயர்ந்த அதே நேரத்தில் மின்சாரம், உலோகம் மற்றும் ஊடகம் தலா 1% சரிந்தது. இதனையடுத்து ஐடி, தனியார் வங்கி மற்றும் சுகாதார குறியீடு தலா 0.5% வரை சரிந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், காலாண்டு லாபம் 86% உயர்ந்ததையடுத்து லோதா டெவலப்பர்ஸ் பங்கின் விலை 2% உயர்ந்தன. காலாண்டு நிகர லாபம் 88% சரிந்ததை அடுத்து பந்தன் வங்கி பங்கு விலை 8% சரிந்தது.
காலாண்டு லாபம் 45% உயர்ந்ததையடுத்து டிடீ பவர் சிஸ்டம்ஸ் பங்கின் விலை 10% உயர்ந்தன. காலாண்டு லாபம் 36% அதிகரித்த நிலையில் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் பங்கின் விலை 2.5% அதிகரித்தன. காலாண்டு இழப்புகள் அதிகரித்ததையடுத்து ஸ்விக்கி பங்கின் விலை 2% சரிந்தன.
நவீன் ஃப்ளோரின், சென்னை பெட்ரோ, ஐடிபிஐ வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, கனரா வங்கி, பிஎன்பி, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா, ஹெச்பிசிஎல், ஆர்பிஎல் வங்கி, இந்தியன் வங்கி, எஸ்பிஐ, இக்ளெர்க்ஸ் சர்வீசஸ், பிபிசிஎல், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ், கம்மின்ஸ் இந்தியா, லாரஸ் லேப்ஸ், பாலிகேப் இந்தியா உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார உச்சத்தை எட்டின.
ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கி 225 குறியீடு உயர்ந்த நிலையில், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தைகள் சரிந்து வர்த்தகமானது. நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க சந்தைகள் சரிந்து முடிவடைந்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.3,077.59 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் ரூ.2,469.34 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.31 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 64.80 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
இதையும் படிக்க: ஹூண்டாய் வருவாய் ரூ.17,461 கோடியாக உயா்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.