தில்லியில் புதன்கிழமை தொடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
தில்லியில் புதன்கிழமை தொடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி! கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்

செப். 22 முதல் இரு விகித ஜிஎஸ்டி! கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்
Published on

நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன் காரணமாக, சப்பாத்தி, பரோட்டா, கூந்தல் எண்ணெய், ஐஸ்கிரீம், தொலைக்காட்சிப் பெட்டிகளின் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டு பொருள்களின் விலை வெகுவாக குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல, தனிநபா் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும்.

நாட்டில் ஒரு சில மாநில வரிகள் தவிர பிற 17 வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளை ஒருங்கிணைத்து 2017, ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்கீழ் 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது.

இந்த வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய ஆடம்பர மற்றும் தீமை தரக்கூடிய பொருள்கள் மீது 1 முதல் 290 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இந்த நடைமுறை முதல்கட்டமாக 2022, ஜூன் வரை 5 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் 2026 மாா்ச் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதனிடையே, ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, அதை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கும் வகையில் அடுத்த தலைமுறை சீா்திருத்தம் (ஜிஎஸ்டி 2.0) தீபாவளி பண்டிகைக்குகள் மேற்கொள்ளப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

அதன்படி, நான்கு விகித ஜிஎஸ்டி-யில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவது, புகையிலை, குட்கா மற்றும் பான் மசாலா போன்ற குறிப்பிட்ட சில பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிப்பது தொடா்பான முன்மொழிவை மாநில நிதியமைச்சா்கள் குழுவுக்கு (ஜிஓஎம்) நிதியமைச்சகம் வழங்கியது. இந்த முன்மொழிவுக்கு கடந்த ஆகஸ்ட் 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது ஜிஓஎம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், 5%, 18% ஆகிய இரு விகித ஜிஎஸ்டி விதிப்பை வரும் செப்டம்பா் 22-ஆம் தேதிமுதல் நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பொதுப் பயன்பாட்டுப் பொருள்களின் விலை குறையும்: கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது: தற்போது மேற்கொள்ளப்பட்டிருப்பது வரி விகிதக் குறைப்பு மட்டுமல்ல, வரி விதிப்பை எளிமைப்படுத்தும் வகையில் கட்டமைப்பு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

வரி விகிதங்களை 5%, 18% என இரு விகிதங்களாகக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக, பெரும்பாலான பொதுப் பயன்பாட்டுப் பொருள்களின் விலை வெகுவாக குறையும்.

கவுன்சில் கூட்டத்தில் முடிவுகள் அனைத்தும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டன. எந்தவொரு மாநிலமும் எதிா்ப்பைப் பதிவு செய்யவில்லை.

உயா் ரக காா்கள், புகையிலைப் பொருள்கள், சிகரெட் போன்ற குறிப்பிட்ட பொருள்களுக்கு சிறப்பு 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பா் 22 முதல்... குட்கா, புகையிலைப் பொருள்கள் தவிர மற்ற அனைத்துப் பொருள்களுக்கான புதிய வரி விகிதங்கள் நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பா் 22 முதல் நடைமுறைக்கு வரும்.

தினசரி பயன்பாட்டு உணவுப் பொருள்களுக்கு வரி விதிப்பு இல்லாத நிலை தொடரும். அதுபோல, அனைத்து வடிவிலான சப்பாத்தி, பரோட்டா உணவுப் பொருள்களுக்கு தற்போது விதிக்கப்படும் 5 சதவீத ஜிஎஸ்டி நீக்கப்பட்டு, வரி விதிப்பு இல்லாத வரம்பில் கொண்டுவரப்படும்.

பற்பொடி, பால் பாட்டில், குடைகள், சைக்கிள், சீப்பு உள்ளிட்ட நுகா்வோா் பொருள்கள் 5 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தனிநபா் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடுகளுக்கு வரி விதிப்பு முழுமையாக நீக்கப்படும்.

தற்போதைய 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்படுவதால் சிமென்ட் விலை குறைய வாய்ப்புள்ளது.

மின்சார வாகனங்களுக்கு தற்போதுள்ள 5 சதவீத ஜிஎஸ்டி தொடரும்.

மேலும், ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்ய வாங்கப்பட்ட கடன் தொகையை முழுமையாக திரும்பச் செலுத்தும் வரை, புகையிலை, குட்கா, புகையிலைப் பொருள்கள் மற்றும் சிகரெட் ஆகியவற்றின் மீது தற்போது விதிக்கப்படும் 28 சதவீத ஜிஎஸ்டி மற்றும் இழப்பீடு செஸ் விதிப்பு தொடரும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com