
தொடர்ந்து 2-வது நாளாக பங்குச்சந்தை இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,456.67 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலையில் 900 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்த நிலையில், பின்னர் சரிவைச் சந்தித்தது.
எனினும் வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 150.30(0.19%) புள்ளிகள் உயர்ந்து 80,718.01 புள்ளிகளில் நிலைபெற்றது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 19.25(0.08%) புள்ளிகள் உயர்ந்த நிலையில் 24,734.30 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)யில் 12 சதவீதம், 28 சதவீதம் வரிகளை நீக்கி 5%, 18% வரி மட்டும் பயன்பாட்டில் இருக்கும் என்று நேற்று(செப். 3) மத்திய அரசு அறிவித்தது.
ஜிஎஸ்டி வரி விகிதம் குறைப்பு பங்குச்சந்தையில் இன்று ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவே கருதப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக நிஃப்டி ஆட்டோ, எஃப்எம்சிஜி(நுகர்வோர் பொருள்கள்), நிதி சேவைகள் உயர்ந்து வர்த்தகமாகின. ஏனெனில் மின்னணு பொருள்கள், அத்தியாவசிய உணவுப் பொருள்கள், வாகனங்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஐடி, பொதுத்துறை நிறுவனங்கள் ஆகிய துறைகளின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
சென்செக்ஸில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டிரென்ட், ஐடிசி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஏசியன் பெயிண்ட் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
மாருதி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், எச்சிஎல் டெக், பவர் கிரிட், இன்ஃபோசிஸ், என்டிபிசி, கோடாக் வங்கி, டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமென்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை இன்று குறைந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.