
கடந்த வாரம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி வரி விதிப்பில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டது.
இதுவரை இருந்த நான்கு விகித ஜிஎஸ்டி வரியை 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என இரண்டு விகிதங்களாகவும், இதுவரை 28 சதவீதமாக இருந்த வரி விதிப்பை 18 சதவீதமாகவும் மாற்றி அறிவிக்கப்பட்டது.
இதனால் பல பொருள்களின் ஜிஎஸ்டி வரி பெரிய அளவில் குறைந்தது. அந்த வகையில், ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலைப் பட்டியலிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு பைக்குகள், இந்தியாவில் விற்பனையாகும் பைக்குகளிலேயே இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பும் பைக்குகளாக உள்ளது. இதன் மவுசு எப்போதும் குறைந்ததேயில்லை. பொதுவாக அன்றாட பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இல்லையென்றாலும் நெடுந்தொலைவுப் பயணங்களுக்கு இவற்றுக்கு மாற்று குறைவே.
ஆனால், ஜிஎஸ்டி குறைப்பினால், ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலையில் சில மாற்றங்கள் உள்ளன. அதாவது என்ஜின் திறன் 350 சிசிக்கும் குறைவாக உள்ள, ஹண்டர் 350, கிளாசிக் 350, புல்லட் 350 உள்ளிட்ட வாகனங்களின் ஜிஎஸ்டி குறைந்துள்ளது.
இதனால், முதல் முறையாக ராயல் என்ஃபீல்டு வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது கொண்டாட்டமான காலம்தான்.
ஆனால் அதுவே என்ஜின் திறன் அதிகம் கொண்ட மோட்டார் சைக்கிள்களின் ஜிஎஸ்டி அதிகம்தான். அதாவது ஹிமாலயன் 450, கொரில்லா 450, ஸ்க்ராம் 440 மற்றும் 650 சிசி திறன் கொண்ட வாகனங்களின் ஜிஎஸ்டி உயர்வால் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது.
அதாவது, 350 சிசி திறன் கொண்ட பைக்குகளின் ஜிஎஸ்டி 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், 400 சிசி திறனுக்கும் மேற்பட்ட என்ஜின் திறன் கொண்ட பைக்குகளின் ஜிஎஸ்டி 28 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.18,720 முதல் ரூ.33,000 வரை வரை விலைகள் உயர்ந்துள்ளது.
இதனால், இந்த ரக வாகனங்களின் விற்பனையில் சற்று மந்தநிலை ஏற்படலாம் என்று கூறப்பட்டாலும், ராயல் என்ஃபீல்டு விரும்பிகளை இந்த ஜிஎஸ்டி மாற்றங்கள் எதுவும் செய்யாது, அவற்றின் விற்பனை வழக்கம் போலவே இருக்கும் என்றும் சந்தை நிலவரங்கள் கூறுகின்றன.
அதாவது, இந்தியாவின் முன்னணி மோட்டாா்சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்ஃபீல்டின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 55 சதவீதம் உயா்ந்துள்ளது.
2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 1,14,002-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 55 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 73,629 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.