
மும்பை: ப்ளூ-சிப் நிறுவனங்களான எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் பங்குகளை முதலீட்டாளர்கள் லாப முன்பதிவை செய்ததையடுத்து பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் இன்று 387 புள்ளிகள் சரிந்து, அதன் மூன்று நாள் தொடர் ஒட்டத்தை நிறுத்திக் கொண்டது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 528.04 புள்ளிகள் சரிந்து 82,485.92 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 387.73 புள்ளிகள் சரிந்து 82,626.23 ஆகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 96.55 புள்ளிகள் சரிந்து 25,327.05 ஆக நிலைபெற்றது.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் சமமாக முடிந்த நிலையில், இந்த வாரம் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா ஒரு சதவிகிதம் வரை உயர்ந்தன.
நுகர்வோர் சாதனங்கள், ஊடகம், ஆட்டோ, எஃப்எம்சிஜி, ஐடி பங்குகள் 0.4 முதல் 0.6% சரிந்தது. அதே வேளையில் மின்சாரம், பொதுத்துறை வங்கி ஆகியவை தலா 1% உயர்ந்தன.
சென்செக்ஸில் எச்சிஎல் டெக், ஐசிஐசிஐ வங்கி, டைட்டன், டிரென்ட், கோடக் மஹிந்திரா வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை பங்குகள் சரிந்த நிலையில் அதானி போர்ட்ஸ், பாரதி ஏர்டெல், எஸ்பிஐ, என்டிபிசி மற்றும் சன் பார்மா ஆகியவை உயர்ந்து முடிவடைந்ததது.
நிஃப்டி-யில் எச்.சி.எல் டெக்னாலஜிஸ், ஐசிஐசிஐ வங்கி, நெஸ்லே, டைட்டன், டிரென்ட் ஆகிய பங்குகள் உயர்ந்தும் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எஸ்பிஐ ஆகியவை சரிவுடன் முடிந்தன.
அமெரிக்க குறுகிய விற்பனையாளரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் செய்த பங்கு மோசடி குற்றச்சாட்டுகளில் கௌதம் அதானி மற்றும் அவரது குழுவினரை, சந்தை ஒழுங்குமுறை ஆணையமான 'செபி' விடுவித்ததை அடுத்து அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட அனைத்து அதானி குழும பங்குகளும் 13 சதவிகிதம் வரை உயர்ந்தன.
நிபுனர் குழுவானது, நிறுவனங்களுக்கு இடையிலான நிதி பரிமாற்றம் குறித்த எந்த ஒழுங்குமுறையையும் மீறவில்லை என்று செபி விசாரணையில் கண்டறியப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.
ஆர்டர்கள் பெற்றதையடுத்து ராஜேஷ் பவர் சர்வீசஸ் பங்குகள் 3% அதிகரித்தன. தலைமை நிர்வாக அதிகாரி வெளியேறியதால் கெய்ன்ஸ் டெக்னாலஜிஸ் பங்குகள் சரிந்தன.
அல்ட்ராடெக் ஆர்டர் பெற்றதையடுத்து டெக்ஸ்மாக்கோ ரயில் பங்குகள் உயர்ந்தன. சந்தை ஒழுங்குமுறை ஆணையான செபி அதானி குழுமத்தை விடுவித்ததையடுத்து அதன் பங்குகள் உயர்ந்தன.
ஏஜிஆர் சர்ச்சையில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்ததைத் தொடர்ந்து வோடபோன் ஐடியாவின் பங்குகள் 8% உயர்ந்தன. அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனத்தில் பங்குகளை கையகப்படுத்தியதை அடுத்து கிராஃபைட் இந்தியா பங்குகள் 1% உயர்ந்தன.
அதானி பவர், குஜராத் மினரல், லாரஸ் லேப்ஸ், அசோக் லேலேண்ட், ராடிகோ கைதான், ஐஷர் மோட்டார்ஸ், ஹூண்டாய் மோட்டார், மாருதி சுசுகி, எடர்னல், டாடா ஸ்டீல் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை எட்டியது.
ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து முடிவடைந்தது.
ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்து வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) உயர்ந்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.55 சதவிகிதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு ஒன்றுக்கு 67.07 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.366.69 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
இதையும் படிக்க: விலைகளைக் குறைக்கும் மாருதி சுஸுகி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.