சிஎன்ஜி-யில் பேருந்துகள் : எக்கோ ஃப்யூயலுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
பொதுப் போக்குவரத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் தனது முயற்சியின் ஒரு பகுதியாக, டீசலில் இயங்கும் 850 பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றுவதற்கு மும்பையைச் சோ்ந்த எக்கோ ஃப்யூயல் சிஸ்டம் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து எக்கோ ஃப்யூயல் சிஸ்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
850 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி-யில் இயங்கச் செய்யும் வகையில் மாற்றுவதற்காக நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அடுத்த 12 மாதங்களில் இந்தப் பணி நிறைவடையும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், சிஎன்ஜி-க்கு வாகனங்களை மாற்றியமைப்பதற்கான துறையில் எக்கோ ஃப்யூயலின் முன்னணி உறுதியாகியுள்ளது. இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட பேருந்துகளை சிஎன்ஜி-க்கு மாற்றியுள்ள நிறுவனம், தனது மேம்பட்ட தொழில்நுட்பத்தால் செலவை மிச்சப்படுத்துகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.