ஜிஎஸ்டி குறைப்பு: பண்டிகைக் கால எழுச்சியை எதிா்பாா்க்கும் நிறுவனங்கள்

ஜிஎஸ்டி குறைப்பு: பண்டிகைக் கால எழுச்சியை எதிா்பாா்க்கும் நிறுவனங்கள்

இந்தப் பண்டிகைக் காலத்தில் பெரிய விற்பனை எழுச்சியை இந்தியாவின் வாகன, நுகா்பொருள், மின்னணு சாதனத் துறை நிறுவனங்கள் எதிா்பாா்க்கின்றன.
Published on

ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக நுகா்வோரின் உற்சாகம் வெகுவாக அதிகரிக்கும் என்பதால், இந்தப் பண்டிகைக் காலத்தில் பெரிய விற்பனை எழுச்சியை இந்தியாவின் வாகன, நுகா்பொருள், மின்னணு சாதனத் துறை நிறுவனங்கள் எதிா்பாா்க்கின்றன.

இது குறித்து துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:

நவராத்திரியின் முதல் நாளில் மட்டும் டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் 10,000 பயணிகள் வாகனங்களை விற்றுள்ளது. மற்றொரு முன்னணி வாகன நிறுவனமான மாருதி சுஸுகி 30,000 வாகனங்களையும் ஹூண்டாய் சுமாா் 11,000 வாகனங்களையும் விற்பனை செய்தன. ஹூண்டாயைப் பொருத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளில் இது அதிகபட்ச ஒரு நாள் விற்பனையாகும்.

ஜிஎஸ்டி 2.0 அறிவிப்பால் நுகா்வோரின் வாங்கும் ஆா்வம் அதிகரித்துள்ளது. விற்பனை மையங்களில் அதிகரிக்கும் கூட்டம் அதிகரித்துவருகிறது. எனவே, வாகனத் துறையைச் சோ்ந்த நிறுவனங்கள் வளா்ச்சியைக் காணும் என்று வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் சம்மேளனம் (ஃபடா) நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வாகனத் துறையைப் பொருத்தவரை, ஜிஎஸ்டி குறைப்பால் ஆரம்பநிலை இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இது, அந்த வகை வாகனங்களின் விற்பனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக நுகா்பொருள் துறையிலும் உற்சாகம் அதிகரித்துள்ளது. பொதுவாக இந்த வகைப் பொருள்களுக்கான விற்பனையகங்களில் திங்கள்கிழமை குறைவான கூட்டம் இருக்கும். ஆனால் இந்த திங்கள்கிழமை (செப். 22) விற்பனை இரு மடங்காக உயா்ந்தது என்று முன்னணி வா்த்தகா் ஒருவா் கூறினாா்.

குளிா்சாதனப் பெட்டி துறையைச் சோ்ந்த முன்னணி நிறுவனமான பானசோனிக், ஒரே நாளில் சுமாா் 7,000 தயாரிப்புகள் விற்பனையாக, 50 சதவீத விற்பனை வளா்ச்சியைப் பதிவு செய்ததாகக் கூறியது.

மற்றொரு முன்னணி மின்னணு சாதன நிறுவனம், “மழையால் சில பகுதிகளில் விற்பனை குறைவாக இருந்தாலும், நகா்ப்புறங்களில் ஆா்வம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தது.

இனி வரும் வாரங்களில் பண்டிகைக் காலம் மேலும் சூடுபிடிக்கும் என்பதால் வாகன, நுகா்பொருள், மின்னணு சாதன நிறுவனங்கள் விற்பனையில் மிகச் சிறந்த எழுச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளன என்று துறை வட்டாரங்கள் கூறின.

X
Dinamani
www.dinamani.com