மும்பை: நிலையற்ற அமர்வுக்குப் பிறகு, இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தன.
தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் ரிசர்வ் வங்கி வட்டி விகித முடிவு வெளிவர உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்ததால், தொடர்ந்து 8-வது நாளாக இன்றும் சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச் சந்தை.
இன்றைய காலை நேர வர்த்கத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 80,677.82 புள்ளிகளும் பிறகு குறைந்தபட்சமாக 80,201.15 புள்ளிகளுடன் வர்த்தகமானது.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 97.32 புள்ளிகள் சரிந்து 80,267.62 புள்ளிகளாகவும், 50-பங்கு கொண்ட நிஃப்டி 23.80 புள்ளிகள் சரிந்து 24,611.10 புள்ளிகளாக நிலைபெற்றது. சென்செக்ஸ் எட்டு நாள் வர்த்தகத்தில் இதுவரை 2,746.34 புள்ளிகள் இழந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் 3,118 பங்குகள் வர்த்தகமான நிலையில் 1,517 பங்குகள் உயர்ந்தும் 1,506 பங்குகள் சரிந்தும் 95 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தது.
உலோகம் மற்றும் வங்கிப் பங்குகள் காலை நேர வர்த்தகத்தில் சற்று உயர்ந்த நிலையில், ரியல் எஸ்டேட் மற்றும் நுகர்வோர் சாதனப் பங்குகள் வெகுவாக விற்பனை அழுத்தத்தை எதிர்கொண்டன.
நாளை (புதன்கிழமை) ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவு வெளியாகவுள்ள நிலையில், சந்தையில் எச்சரிக்கை வெகுவாக நிலவி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சென்செக்ஸில் ஐடிசி, பாரதி ஏர்டெல், டிரென்ட், பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகள் சரிந்த அதே நிலையில் அல்ட்ராடெக் சிமென்ட், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தன.
ஆசிய சந்தைகளில், ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங் ஹேங் செங் ஆகியவை உயர்ந்த நிலையில், தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கி 225 குறியீடு சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தைகள் ஏற்ற-இறக்கத்தில் வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று உயர்வுடன் முடிவடைந்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.2,831.59 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்த நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.3,845.87 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 67.29 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: ஆகஸ்ட்டில் 4 சதவீதம் உயா்ந்த தொழிலக உற்பத்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.