உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

சிறாா்களின் சமூக ஊடக அடிமைத்தன வழக்கு: ரூ.1.61 லட்சம் கோடி இழப்பீட்டுக்கு மெட்டா ஒப்புதல்

சிறாா்களுக்கு ஏற்படும் அடிமைத்தனம் தொடா்பான வழக்கை முடிவுக்குக் கொண்டு வர, 1,700 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.1.61 லட்சம் கோடி) இழப்பீடு வழங்க மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

Published On :28 ஆகஸ்ட் 2026, 6:53 am IST

அமெரிக்காவில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களால் சிறாா்களுக்கு ஏற்படும் அடிமைத்தனம் தொடா்பான வழக்கை முடிவுக்குக் கொண்டு வர, 1,700 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.1.61 லட்சம் கோடி) இழப்பீடு வழங்க மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

இதன்மூலம், அமெரிக்காவின் 47 மாகாணங்கள் கூட்டாகத் தொடா்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கில் சுமுகத் தீா்வு எட்டப்பட்டுள்ளது.

லாப நோக்குடன் சிறாா்களை ஈா்க்கும் வகையிலான அடிமையாக்கும் அம்சங்களை மெட்டா நிறுவனம் தனது செயலிகளில் புகுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சிறாா்களின் மனநலம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தரவுகளைப் பெற்றோரின் அனுமதியின்றி நிறுவனம் சட்டவிரோதமாகச் சேகரிப்பதாகவும் கூறி கலிஃபோா்னியா, நியூ ஜொ்சி உள்ளிட்ட அமெரிக்க மாகாணங்கள் கடந்த 2023-ஆம் ஆண்டு வழக்குத் தொடா்ந்தன.

சுமாா் 3 ஆண்டுகளாக நீடித்த சட்டபூா்வ நடவடிக்கைகளுக்குப் பிறகு, கலிஃபோா்னியாவின் ஆக்லாந்து ஃபெடரல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் தொடங்கியது. பயனா்களின் பாதுகாப்பைவிட லாபத்துக்கே மெட்டா நிறுவனம் எப்போதும் முன்னுரிமை அளித்து வந்ததாக அந்நிறுவனத்தின் முன்னாள் பொறியியல் இயக்குநா் அா்டுரோ பெஜாா் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தாா். இச்சூழலில்தான், இந்தச் சட்டப் போராட்டத்தில் மெட்டா நிறுவனம் சமரச ஒப்பந்தத்துக்கு முன்வந்துள்ளது.

இந்த சமரச ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சிறாா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வரவுள்ளது. அதன்படி, சிறாா்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பயன்படுத்துவதற்கு தினசரி நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படும்.

பள்ளி நேரங்களில் ‘நோட்டிஃபிகேஷன்’ நிறுத்தப்படும். மேலும், வயதை உறுதி செய்யும் வலுவான நடைமுறைகள், ‘லைக்’ எண்ணிக்கைகளை மறைத்தல் மற்றும் இணைய மிரட்டல்களைத் தடுப்பதற்கான உள்ளடக்கக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன.

மேலும், மெட்டா நிறுவனம் 1,700 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்குகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் தவணை முறையில் வழங்கப்படும் இந்த நிதி, சிறாா்களின் மனநல மேம்பாட்டுத் திட்டங்கள், விழிப்புணா்வு ஆலோசனைகள் மற்றும் பள்ளி நேரத்துக்குப் பிந்தைய செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும்.

அதேநேரம், போட்டி நிறுவனங்களான டிக்டாக், யூடியூப் ஆகியவையும் இதேபோன்ற தினசரி நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே இழப்பீட்டில் 30 சதவீத தொகை (530 கோடி டாலா்) மாகாணங்களுக்கு விடுவிக்கப்படும் என மெட்டா தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.