

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளில் ஏற்பட்ட பெரும் விற்பனை மற்றும் இந்தியாவுக்கு எதிராக வரிகளை மேலும் உயர்த்துவது குறித்து அமெரிக்கா விடுத்த புதிய எச்சரிக்கை தொடர்ந்து, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் இன்று 2வது நாளாக சரிவுடன் முடிவடைந்தன.
30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 376.28 புள்ளிகள் சரிந்து 85,063.34 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 71.60 புள்ளிகள் சரிந்து 26,178.70 புள்ளிகளாக நிலைபெற்றது.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன.
சென்செக்ஸில் உள்ள 30 நிறுவனங்களில், டாடா குழுமத்தின் சில்லறை வர்த்தக நிறுவனமான டிரென்ட் நிறுவனம் டிசம்பர் காலாண்டு வருவாய் வளர்ச்சி முதலீட்டாளர்களை ஈர்க்கத் தவறியதால், அதன் பங்கு 8.62% சரிந்தன.
சென்செக்ஸில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 4.42% சரிந்த நிலையில் ஐடிசி, கோடக் மஹிந்திரா வங்கி, இன்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்தன. இருப்பினும் ஐசிஐசிஐ வங்கி, சன் பார்மா, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன.
நிஃப்டி-யில் ட்ரென்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, கோடக் மஹிந்திரா வங்கி, இன்டர்குளோப் ஏவியேஷன் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் அதே சமயம் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி லைஃப், சன் பார்மா மற்றும் டாடா கன்ஸ்யூமர் ஆகிய பங்குகள் உயர்ந்தன.
துறைவாரியாக தகவல் தொழில்நுட்பம், மருந்து துறை, பொதுத்துறை வங்கிகள், உலோகத் துறை ஆகியவை 0.3 முதல் 1.7% வரை உயர்ந்தன. அதே சமயம் உள்கட்டமைப்பு, ஊடகம், எண்ணெய் & எரிவாயு, மூலதனப் பொருட்கள் துறைகள் 0.6 முதல் 1.6% வரை சரிந்தன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.36.25 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்த நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,764.07 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது குறித்து நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும், இதனால் இந்தியா மீதான வரியை மிக விரைவாக உயர்த்தப்படும் என்றார் அதிபர் டிரம்ப். இது புளோரிடாவிலிருந்து தலைநகர் வாஷிங்டன் டிசிக்குச் செல்லும் வழியில் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசியபோது அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கள்.
இதற்கிடையில், டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் சேவை துறை வளர்ச்சி மிதமானதாக உள்ளதாகவும், புதிய வேலைகள் மற்றும் உற்பத்தி விரிவாக்க விகிதங்கள் 11 மாதங்கள் இல்லாத அளவுக்கு குறைந்த நிலையில், நிறுவனங்கள் கூடுதல் ஊழியர்களை நியமிப்பதைத் தவிர்த்தனர்.
பங்குகளைப் பொறுத்தவரையில் ஜேஎல்ஆர் விற்பனை 43% சரிந்ததைத் தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் பிவி பங்குகள் 2% சரிந்தன. 2வது காலாண்டு லாபம் 129% அதிகரித்ததால் கேஎஸ்எச் இன்டர்நேஷனல் பங்குகள் விலை 3% உயர்ந்தன. டிசம்பர் மாத விற்பனை 18% அதிகரித்ததால் ஆல்கார்கோ டெர்மினல்ஸ் பங்குகள் 1% உயர்ந்தன. 3வது காலாண்டு லாபம் 91% அதிகரித்த போதிலும் ஜிஎம் ப்ரூவரீஸ் பங்குகள் 5% சரிந்தன.
ஜெஃப்ரீஸ் நிறுவனம் பங்கை வாங்கலாம் என்று பரிந்துரை வழங்கியதால், எம்வி ஃபோட்டோவோல்டாயிக் பங்குகள் 8% உயர்ந்தன. நோமுரா நிறுவனம் இண்டஸ்இண்ட் வங்கியின் பங்கை வாங்கலாம் என்ற மதிப்பீட்டைத் தக்கவைத்ததைத் தொடர்ந்து வங்கியின் பங்கு விலை 2% உயர்ந்தன.
ஏத்தர் இண்டஸ்ட்ரீஸ், நால்கோ, ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், கிராஃபைட் இந்தியா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் காப்பர், இகிளர்க்ஸ் சர்வீசஸ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், எஸ்பிஐ, பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 140 பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 52 வாரம் உச்சம் எட்டியது.
மறுபுறம் பிரீமியர் எனர்ஜிஸ், வேதாந்த் ஃபேஷன்ஸ், மகாநகர் கேஸ், ஐடிசி, பேஜ் இண்டஸ்ட்ரீஸ், கோஹன்ஸ் லைஃப், யுனைடெட் ப்ரூவரீஸ், கிளீன் சயின்ஸ், ஜூபிலன்ட் ஃபுட்வொர்க்ஸ், டாடா கெமிக்கல்ஸ் உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்ட பங்குகள் 52 வார குறைந்தபட்ச விலையை தொட்டது.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு, ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு, ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடும் கணிசமாக உயர்ந்தன.
ஐரோப்பிய சந்தைகள் கலவையான போக்கில் வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) உயர்ந்தன.
சர்வதேச பிரென்ட் கச்சா எண்ணெய், ஒரு பீப்பாய்க்கு 0.28% உயர்ந்து 61.93 அமெரிக்க டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.