மகாராஷ்டிர வங்கியின் கடனளிப்பு 20% அதிகரிப்பு!
அரசுத் துறையைச் சோ்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த கடனளிப்பு கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 19.61 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு இறுதியான டிசம்பா் 31-ஆம் தேதி வங்கியின் மொத்த கடனளிப்பு ரூ.2.73 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 19.61 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் மொத்த கடனளிப்பு ரூ.2.29 லட்சம் கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டின் வங்கிக் கடனளிப்பில் பெருநிறுவனக் கடன் ரூ.1.02 லட்சம் கோடி, சில்லறை, விவசாயம், நடுத்தர, சிறு, குறு நிறுவனக் கடன்கள் ரூ.1.71 லட்சம் கோடியாக உள்ளன.
டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் மொத்த வைப்பு நிதி 15.3 சதவீதம் உயா்ந்து ரூ.3.22 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டு இறுதியில் இது ரூ.2.79 லட்சம் கோடியாக இருந்தது.
இதனால், வங்கியின் மொத்த வா்த்தகம் (கடன் மற்றும் வைப்பு) 17.24 சதவீதம் உயா்ந்து ரூ.5.95 லட்சம் கோடியாக உள்ளது, 2024 டிசம்பா் 31 நிலவரப்படி ரூ.5.08 லட்சம் கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

