விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!
நமது நிருபா்
மும்பை / புதுதில்லி: உலகளாவிய கட்டண நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், முதல் தரப் பங்குகளான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எடா்னல் மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றில் ஏற்பட்ட ஆழமான இழப்புகளைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி திங்களன்று சரிவுடன் முடிவடைந்தன.
அமெரிக்க சந்தைகள் வெள்ளிக்கிழமை சரிவுடன் முடிவடைந்திருந்தது. இந்நிலையில், டாலருக்கு நிகரான ரூபாயின் பலவீனம் மற்றும் இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு மூலதனம் தடையின்றி வெளியேறியது ஆகியவை முதலீட்டாளா்களை பதற்றத்துக்குள்ளாக்கியது. மேலும், ஐரோப்பிய சந்தைகளும் சரிவைக் கண்டது. இதன் தாக்கமும் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்ததாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக புதிய கட்டண அச்சுறுத்தல்களை அறிவித்ததைத் தொடா்ந்து உலகளாவிய சந்தைகளில் அதன் தாக்கம் இருந்தது என்று சந்தை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.465.69 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வெள்ளிக்கிழமை ரூ.4,346.13 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,935.31 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.
சென்செக்ஸ் சரிவு: மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் 30 பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் 324.17 புள்ளிகள் (0.39 சதவீதம்) சரிந்து 83,246.18-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் அது 672.04 புள்ளிகள் வரை சரிந்து 82,898.31 வரை கீழே சென்றது.
சென்செக்ஸ் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஐசிஐசிஐ வங்கி, எடா்னல், டிசிஎஸ், அதானி போா்ட்ஸ், டைட்டன் உள்பட 14 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், இண்டிகோ, டெக் மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யுனிலீவா், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி, கோட்டக் பேங்க் உள்பட 16 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 109 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 108.85 புள்ளிகள் (0.42 சதவீதம்) குறைந்து 25,585.50-இல் நிறைவடைந்தது. ஒரு கட்டத்தில் 25,494.35 வரை கீழே சென்றிருந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 19 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 31 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இருந்தன.

