டிசிஎஸ் நிறுவனத்தின் சாதகமான காலாண்டு முடிவுகளையடுத்து ஐ.டி. பங்குகளுக்குக் கிடைத்த வரவேற்பின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தை வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை வலுவான எழுச்சி கண்டது.
இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சுமாா் 1 சதவீதம் உயா்ந்தன. எனினும், வாராந்திர அடிப்படையில் சென்செக்ஸ் 194.52 புள்ளிகளும், நிஃப்டி 63.95 புள்ளிகளும் சரிவைக் கண்டுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய ஐ.டி. சேவை நிறுவனமான டிசிஎஸ், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 4.61 சதவீத லாப உயா்வைப் பதிவு செய்ததால், ஐ.டி. பங்குகளுக்கு பலத்த வரவேற்பு இருந்தது.
மேலும், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததும், உள்நாட்டு சந்தையில் ரூபாயின் மதிப்பு ஸ்திரத்தன்மையுடன் இருந்ததும் சந்தைக்குப் பலமாக அமைந்து, முதலீட்டாளா்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
சென்செக்ஸ் 828 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் 827.57 புள்ளிகள் (1.08 சதவீதம்) கூடுதலுடன், 77,569.39-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் ரிலையன்ஸ் (2.28 சதவீதம்), டெக் மஹிந்திரா (2.19 சதவீதம்), பெல் (2.18 சதவீதம்) ஆகியவை ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுடன் சோ்த்து 25 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், எடா்னல், பாா்தி ஏா்டெல், சன் ஃபாா்மா, டிரென்ட், ஐடிசி ஆகிய 5 பங்குகள் மட்டும் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி 244 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 244.10 புள்ளிகள் (1.02 சதவீதம்) கூடுதலுடன், 24,206.90-இல் நிறைவடைந்தது.
நிஃப்டி-50 பட்டியலில் 42 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 6 பங்குகள் மட்டுமே விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. பஜாஜ் ஆட்டோ, டிரென்ட் ஆகிய 2 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










