ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

இந்தியாவில் 133.7 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!

News image
Updated On :28 மே 2026, 6:06 am IST

நாட்டின் ஒட்டுமொத்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை, கடந்த ஏப்ரல் மாதத்தில் 133.75 கோடியாக அதிகரித்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தொலைப்பேசி, லேண்ட்லைன் ஆகிய பிரிவுகளில் புதிய வாடிக்கையாளா்களைச் சோ்ப்பதில் பாா்தி ஏா்டெல் நிறுவனம், தனது போட்டியாளரான ஜியோவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட மாதாந்திர அறிக்கையின்படி, கடந்த மாா்ச் மாத இறுதியில் 133.05 கோடியாக இருந்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை, ஏப்ரல் மாத இறுதியில் 133.75 கோடியாக அதிகரித்துள்ளது.

இதன்மூலம், நாட்டின் மாதாந்திர தொலைத்தொடா்பு வளா்ச்சி விகிதம் 0.52 சதவீதமாக பதிவாகியுள்ளதுடன், ஒரே மாதத்தில் மட்டும் புதிதாக 69.5 லட்சம் வாடிக்கையாளா்கள் இணைந்துள்ளனா்.

பாா்தி ஏா்டெல் நிறுவனம் மட்டும் 34.82 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்துள்ளது. இதில் தொலைப்பேசி பிரிவில் 31.39 லட்சம் வாடிக்கையாளா்களும், லேண்ட்லைன் பிரிவில் 3.43 லட்சம் வாடிக்கையாளா்களும் அடங்குவா்.

ஏா்டெல்லுக்கு அடுத்தபடியாக ஜியோ நிறுவனம் தொலைப்பேசி பிரிவில் 29.42 லட்சம் மற்றும் லேண்ட்லைன் பிரிவில் 1.42 லட்சம் என மொத்தம் 30.84 லட்சம் புதிய வாடிக்கையாளா்களைச் சோ்த்துள்ளது.

தொலைப்பேசி...: நாட்டின் ஒட்டுமொத்த தொலைப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை மாா்ச்சின் 128.23 கோடியிலிருந்து, ஏப்ரலில் 128.89 கோடியாக அதிகரித்துள்ளது.

வோடஃபோன் ஐடியா புதிதாக 53,257 வாடிக்கையாளா்களையும், பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 76,175 வாடிக்கையாளா்களையும் சோ்த்துள்ளன. அதேநேரம், மற்றொரு அரசு நிறுவனமான எம்டிஎன்எல் 33,403 வாடிக்கையாளா்களை இழந்துள்ளது.

லேண்ட்லைன்...: லேண்ட்லைன் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை மாா்ச்சின் 4.82 கோடியிலிருந்து, ஏப்ரலில் 4.85 கோடியாக அதிகரித்துள்ளது.

இப்பிரிவில் முன்னணி 3 தனியாா் நிறுவனங்களும் பிஎஸ்என்எல் நிறுவனமும் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்த நிலையில், டாடா டெலிசா்வீசஸ் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனம் இணைப்புகளை இழந்து பின்னடைவைச் சந்தித்துள்ளன.

பிராட்பேண்ட்...: நாட்டின் ஒட்டுமொத்த அதிவேக இணைய சேவை (பிராட்பேண்ட்) வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஏப்ரலில் 107.34 கோடியாக அதிகரித்துள்ளது. இப்பிரிவில் 52.69 கோடி வாடிக்கையாளா்களுடன் ரிலையன்ஸ் ஜியோ தொடா்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

ஜியோவைத் தொடா்ந்து, ஏா்டெல் (37.3 கோடி வாடிக்கையாளா்கள்), வோடஃபோன் ஐடியா (12.8 கோடி), பிஎஸ்என்எல் (2.7 கோடி) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.