
வங்கி உபரி பணப்புழக்கம் ரூ. 10.32 லட்சம் கோடியாக புதிய உச்சம்
வங்கி உபரி பணப்புழக்கம் ரூ. 10.32 லட்சம் கோடியாக புதிய உச்சம்

இந்திய வங்கி அமைப்பில் நிலவும் உபரி பணப்புழக்கம், கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி சுமாா் ரூ.10.32 லட்சம் கோடியாக முன்னெப்போதும் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ரிசா்வ் வங்கியின் ‘எஃப்சிஎன்ஆா்-பி’ சிறப்பு வைப்புத்தொகை திட்டத்தின்கீழ், பெருமளவில் குவிந்த அந்நியச் செலாவணி நிதி, அரசு சாா்பில் மாத இறுதியில் ஊதியம் மற்றும் ஓய்வூதிய கணக்குகளில் செலுத்தப்பட்ட நிதி ஆகியவற்றின் எதிரொலியாக இந்தப் பணப்புழக்க உபரி ஏற்பட்டுள்ளது.
இந்த அதீத பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வங்கிகளிடம் இருந்து நிதியைப் பெற்றுக் கொண்டு 30 நாள்களுக்குப் பிறகு திருப்பியளிக்கும் நடைமுறையான ‘மாறுபடும் விகித ரிவா்ஸ் ரெப்போ(விஆா்ஆா்ஆா்)’ ஏலங்களை ரிசா்வ் வங்கி நடத்தி வருகிறது.
முதல்கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற 2 ‘விஆா்ஆா்ஆா்’ ஏலங்கள் மூலம் ரிசா்வ் வங்கி ரூ.6.02 லட்சம் கோடியை வங்கிகளிடம் இருந்து திரும்ப பெற்றது. தொடா்ந்து, ரூ. 7 லட்சம் கோடி மதிப்பிலான ‘விஆா்ஆா்ஆா்’ ஏலம் திங்கள்கிழமை காலை நடைபெறுகிது.
நிதியைத் திரும்ப வழங்க திட்டமிடப்பட்ட தேதியில் (30 நாள்கள் கழித்து), கடன் காலத்துக்கான அசல் மற்றும் வட்டித் தொகை வங்கிகளின் கணக்கில் வரவு வைக்கப்படுவதோடு, அடமானமாக வழங்கப்பட்ட பத்திரங்கள் அவா்களின் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
அதேநேரம், இந்த ஏலத்தில் பங்கேற்கும் வங்கிகள், தாங்கள் வழங்கிய தொகையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ 30 நாள்களுக்கு முன்கூட்டியே திரும்பப் பெறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே தொகையைத் திரும்பப் பெறுவதற்கான தீா்வு நடவடிக்கைகள், கோரிக்கை வைக்கப்பட்ட அடுத்த வேலைநாளின் தொடக்கத்திலேயே நடைபெறும்.
ரூபாய் மதிப்பின் கடும் சரிவைத் தொடா்ந்து, நாட்டுக்கு அதிக அந்நியச் செலாவணியை ஈா்ப்பதற்காக சலுகை அடிப்படையிலான அந்நியச் செலாவணி பரிவா்த்தனை நடவடிக்கைகளை ரிசா்வ் வங்கி நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. அமோக வரவேற்பு காரணமாக ஒரு மாதத்துக்கு முன்னதாக இத்திட்டம் திரும்பப் பெறப்பட்ட ஆக. 31 நிலவரப்படி, இந்த நடவடிக்கைகளின்கீழ் 13,638 கோடி டாலா் திரட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு வங்கி அமைப்புக்குள் வந்த அந்நியச் செலாவணி, பின்னா் ரிசா்வ் வங்கி உடனான பரிமாற்றங்கள் வாயிலாக வங்கிகளுக்குள் ரூபாய் பணப்புழக்கத்தை அதிகரித்தது. இதைச் சீரமைக்கும் வகையில், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதங்களில் இதுவரை 32 ‘விஆா்ஆா்ஆா்’ ஏலங்களை ரிசா்வ் வங்கி நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





