நீலகிரி மலைச் சுற்றுலாவை அழகாக்க நவீன ரக புது ரயில்பெட்டிகள் அறிமுகம்: ஐசிஎஃப் அறிவிப்பு! 

இவை அனைத்தும் நிறைவேறினால் நீலகிரி மலையை ரயிலில் சுற்றிப்பார்க்க ஆர்வப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கலாம்.
நீலகிரி மலைச் சுற்றுலாவை அழகாக்க நவீன ரக புது ரயில்பெட்டிகள் அறிமுகம்: ஐசிஎஃப் அறிவிப்பு! 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஏப்ரல், மே கோடை விடுமுறையில் குடும்பத்தோடு செல்லத் திட்டமிடும் உள்நாட்டுச் சுற்றுலாக்களில் பெரும்பாலும் முதலிடம் வகிப்பது நீலகிரி, அந்த நீல மலைகளின் அழகைக் காலமெல்லாம் கண்டு ரசித்தாலும் தீரவே தீராது என்பவர்கள் பலருண்டு. ஆகவே நீலகிரி மலைச்சுற்றுலாவில் சுற்றுலாப் பயணிகளின் பயண இன்பத்தை மேலும் அதிகரிக்க ஐசிஎஃப் நிறுவனம் இந்த நிதியாண்டில் மேலும் மூன்று விதமான புது ரயில்பெட்டிகளை தயாரிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய அமைப்பின் பராமரிப்பில் இருக்கும் சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் நீலகிரி மலையும் உண்டு.

நீலமலையின் அழகை ரசிக்க தற்போதுள்ள ரயில்பெட்டிகளில் போதுமான வசதிகள் இல்லை. சுற்றுலாப் பயணிகள் ரயில் பெட்டிகளில், பாதுகாப்பாக தங்களது இருக்கைகளில் அமர்ந்து கொண்டு, அகலமான ஸ்லைடிங் கண்ணாடி ஜன்னல்கள் வழியாக மலையழகைக் கண்டு ரசிக்க இப்போதுள்ள ரயில் பெட்டிகள் ஒத்து வராது. எனவே பழைய ரயில் பெட்டிகளை ஓரம் கட்டி விட்டு, அவற்றுக்குப் பதிலாக நவீன முறையில் 2.2 மீட்டர் நீள, அகலத்துடன் தயாரிக்கப்படவிருக்கும் ஸ்லைடிங் கண்ணாடி ஜன்னல்கள் பொறுத்தப்பட்ட முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு லக்கேஜ் வேன் உள்ளிட்ட மூன்று விதமான ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிஎஃப் தெரிவித்துள்ளது. 

தற்போது வடிவமைப்பு வேலைகள் முடிந்து, ரயில் பெட்டிகள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் கொள்முதல் வேலைகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நவீனமான புது ரயில்பெட்டிகள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஐசிஎஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிஎஃப்- ன் புத்தம் புது அறிமுகமான இந்த புது ரயில் பெட்டிகளின் சிறப்பு மலையழகை தடையின்றி காண்பது மட்டுமல்ல, சுற்றுலாப் பயணிகளின் பயண செளகரியத்தை மேம்படுத்துவதும் தான் என்பதால் பயணிகளில் மாற்றுத் திறனாளிகள் அல்லது வீல் சேர் பயன்படுத்துவோர் இருப்பின் அவர்களுக்கு தொல்லையின்றி அவர்களது சுற்றுலாப் பயணத்தை எளிதாக்கும் பொருட்டு இரண்டாம் வகுப்பி லக்கேஜ் வேன் பிரிவு ரயில் பெட்டிகளில் அகலமான பெரிய கதவுகள் பொருத்தப்பட உள்ளன. இதனால் ரயில் பெட்டிகளின் நுழைவு வாயில்களில் அவர்கள் சிரமமின்றி உள்நுழையலாம். அதோடு வீல் சேர் பயன்படுத்துவோருக்கு இந்த வகுப்பில் அவர்களது வீல் சேர்களுடன் அமருவதற்கு வசதியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

கதவுகளுக்கு அருகிலேயே லக்கேஜ்களை வைத்துக் கொள்வதற்கும், தேவையற்றை குப்பைகள் ரயில் பெட்டிகளில் சேருவதைத் தடுக்கும் வண்ணம் தனித்த குப்பைத் தொட்டி வசதிகள் உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்ல இரவுப் பயணத்திலும் மலையின்பத்தை பெறத் தடையற்ற LED லைட் வசதியும் ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் செய்யப்பட உள்ளதாம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால்;

நீலகிரி மலை ரயில் சுற்றுலாவைப் பொறுத்தமட்டில், இந்த ஆண்டு எதிர்பார்ப்பில் இருப்பவை:

  • 15 புதிய நவீன ரக ரயில்பெட்டிகள்
  • 32 இருக்கைகளுடன் கூடிய 4 முதல் வகுப்பு ரயில் பெட்டிகள்
  • 44 இருக்கைகளுடன் கூடிய 7 இரண்டாம் வகுப்பு ரயில்பெட்டிகள்
  • 26 இருக்கைகளுடன் கூடிய 4 இரண்டாம் வகுப்பு லக்கேஜ் வேன் ரயில் பெட்டிகள்.

இவை அனைத்தும் நிறைவேறினால் நீலகிரி மலையை ரயிலில் சுற்றிப்பார்க்க ஆர்வப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com