காரி - பாரி மக்கள் வணங்கிய கபிலர் கல்
கபிலருக்கு சிறப்பு செய்ய விரும்பிய காரி – பாரி மக்கள், கபிலர் உயிர்நீத்த இடத்தில் சிவலிங்கம் ஒன்றை நிறுவி, அதற்கு கபிலக்கல் என பெயரிட்டனர்.


2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் கபிலர் எனும் சங்கத் தமிழ்ப் புலவர். அவர் கடை ஏழு வள்ளல்களில் ஒருவனாகத் திகழ்ந்த பாரியின் நண்பராக இருந்தவர்.
பாரியின் இறப்புக்குப் பின் புகலிடம் இன்றி தவித்த அவனது மகள்களுக்கு ஏற்ற மண வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து, கடமை முடித்த உணர்வோடு செந்தழல் புகுந்த புலவர்.
மூவேந்தர்களால் பாரி கொல்லப்பட, அவனது மகள்கள் ஆதரவின்றி நிற்க, கபிலர் அவர்களைத் தன் பொறுப்பில் எடுத்து நல்வாழ்க்கை அமைத்துக் கொடுக்க எண்ணுகிறார். அதன்படி, பாரியின் மகளிரைத் திருமணம் செய்துகொள்ளும்படி இருங்கோவேளிரையும், விச்சிகோவையும் முதலில் சந்தித்துக் கேட்கிறார். அவர்கள் மறுத்துவிடவே, காரியின் மகன்களான தெய்வீகனையும், திருக்கண்ணனையும் கேட்கிறார். இளையவன் திருக்கண்ணன் சம்மதம் தெரிவிக்கிறான். தெய்வீகனோ, மூவேந்தரையும் தனது திருமணத்துக்கு வரவழைத்தால் திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறுகிறான்.
ஆனால் கபிலரோ, என் நண்பன் பாரியைக் கொன்று, அவன் மகளிரை கதறவைத்த மூவேந்தர்களைச் சந்தித்து அழைப்புவிடுக்க இயலாது என மறுக்கிறார்.
இதனால், பாரி மகளிரை மணக்க தெய்வீகன் மறுத்துவிடுகிறான். இதற்குப் பிறகும், திருமணத்துக்கு மூவேந்தர்களை அழைக்க வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தினால், நான் வடக்கிருந்து உயிர் துறப்பேன் என கூறிச் செல்கிறார்.
நாட்கள் கடந்தும் தெய்வீகன் பதில் கூறாததால், ஔவைக்கு கபிலர் ஓலை எழுதுகிறார். தெய்வீகனை திருமணத்துக்குச் சம்மதிக்கவைக்க எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை என்பதால், தான் வடக்கிருந்து உயிர் துறக்க முடிவு செய்துவிட்டதாகவும், இனி பாரி மகளிரின் திருமணத்தை நடத்தும் பொறுப்பு தமிழ் மூதாட்டியான தங்கள் கடமை என அந்த ஓலையில் எழுதுகிறார்.

ஔவை பலவாறு எடுத்துக்கூறியும், தெய்வீகன் தனது முடிவில் உறுதியாக இருக்கிறான். மூவேந்தர்களையும் வரவழைப்பது தம் பொறுப்பு என ஔவை கூற, திருமண ஏற்பாடுகள் துவங்குகின்றன. பாரி மகளிருக்கும், காரி மைந்தர்களுக்கும் திருமண அழைப்பு ஓலை எழுத, விநாயகனை ஔவை அழைக்கிறாள்.
ஒருகை இருமருப்பு மும்மதத்து நால்வாய்க்
கரியுருவக் கங்காளன் செம்மல் - கரிமுகவன்
கண்ணால வோலை கடிதெழுத வாரானேல்
நன்னான்மை தீர்ப்பான் சபித்து
ஔவை பாட, விநாயகன் எழுத, சேர சோழ பாண்டியர்களுக்கு அழைப்பு செல்கிறது. மூவேந்தர்களை வரவழைத்து திருமணத்தை நடத்துகிறார் ஔவை. வடக்கிருந்த கபிலரை மணமக்கள் சந்தித்து ஆசி பெறுகின்றனர். கடமை நிறைவுபெற்றதை அடுத்து, கபிலர் இறைவனடி சேர விரும்பி, தனது குண்டலினி சக்தியை ஆதாரங்களில் ஏற்றி யோகக்கனல் எழுப்பி, தலை உச்சியில் உள்ள பிரமமந்திரத்தை பிளந்து யோகா கனல் வெளிப்பட்டு, பிரபஞ்சக் கனலுடன் ஐக்கியப்பட, கபிலர் உடல் பிரபஞ்ச சக்தியில் கலக்கிறது.

கபிலருக்கு சிறப்பு செய்ய விரும்பிய காரி – பாரி மக்கள், கபிலர் உயிர்நீத்த இடத்தில் சிவலிங்கம் ஒன்றை நிறுவி, அதற்கு கபிலக்கல் என பெயரிட்டனர். இதனையே கபிலர் தீபுகுந்தார் என தவறாகக் கூறுகின்றனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தக் கபிலக்கல், திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் நடுவில் இன்றும் உள்ளது.
- கடம்பூர் விஜயன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...