பார்சிலோனாவின் அற்புத மனிதர் ஆண்டனி கௌடி!

பார்சிலோனா அனைவருக்கும் தெரிந்த பெயர். ஒலிம்பிக் நடந்த இடம், கால்பந்து
பார்சிலோனாவின் அற்புத மனிதர் ஆண்டனி கௌடி!
Updated on
2 min read

பார்சிலோனா அனைவருக்கும் தெரிந்த பெயர். ஒலிம்பிக் நடந்த இடம், கால்பந்து ஆட்டத்துக்கு பெயர் பெற்றது. ஆனால், நேரில் அங்கு சென்று வந்தபோதுதான் தெரிந்து கொண்டேன் ஆண்டனி கௌடி என்னும் அற்புத மனிதரைப் பற்றி.

தாய்நாட்டின் புகழை உயர்த்திய தனிமனிதர். இவர் ஒரு சிறந்த ஆர்க்கிடெக்ட். இவருடைய படைப்புகள் பார்சிலோனியாவில் பல இடங்களில் உள்ளன. தன்னுடைய வேலைகளில் டிசைன் செய்யும்போது பூ, இலைகளை மாதிரியாகக் கொண்டு வருபவர். 19ஆம் நூற்றாண்டில், ரோமானியர் நாகரிகமே ஐரோப்பாவில் வளர்ந்து வந்தது. ஆரம்பத்தில் அதைப் பின்பற்றி கௌடி தன்னுடைய வேலைகளைச் செய்தார். பின்னர், மூர்ரீஷ், ஓரியண்டல் நாகரிகத்தைப் பின்பற்றினார். வீடுகளில் உள்ள வேலைப்பாடுகளில் மேற்கூரையில் இருந்து, ஜன்னல்கள், அலமாரிகள், சுவர்கள், கீழ்த்தரை, மாடிப்படிகள் என்று எல்லா இடங்களிலும் இவருடைய கை வண்ணம் பளிச்சிடுகிறது. அவர் டிசைன் செய்த மேஜை, நாற்காலி, பீரோ போன்றவற்றை நல்ல முறையில் பாதுகாத்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளிடம் வசூலிக்கும் டிக்கெட் கட்டணத்தில் செலவு போக மீதியை சர்கேடா பெமிலியா என்ற பெரிய சர்ச்சுக்கு கொடுத்துவிடுகிறார்கள். சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலான இந்த சர்ச், உலகின் உயரமான சர்ச்சுகளில் முதன்மையானது. கௌடி இருக்கும்வரை சுமார் 14 ஆண்டுகள் இந்த சர்ச்சுக்காக உழைத்தார். இதைப் பார்க்க பல நாடுகளில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். சர்ச் உள்ளே சென்றதும், மெய் மறந்து நின்று விட்டேன். அவ்வளவு அற்புதம். அழகு பளிச்சிடுகிறது. இந்த சர்ச்சில்தான் ஆண்டனி கௌடியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கௌடியின் நுட்பமான வேலைகளைப் பார்த்து வியந்த பார்க் கெயில் என்னும் வசதி படைத்தவர் இவரிடம் வந்தார். இருவரும் நண்பர்கள் ஆனார்கள். பார்க் கெயில் தனக்குச் சொந்தமான இடத்தில் நிறைய வீடுகள் கட்ட எண்ணினார். இருவரும் சேர்ந்து, வீடு சிறியதாகவும், சுற்றிலும் தோட்டம் பெரியதாகவும் அமைக்க ஆசைப்பட்டனர். இதனிடையே, கெயில் இறந்துவிட வீடுகட்டும் திட்டம் நின்றுவிட்டது. ஆனால், கெயில் தான் இறப்பதற்குமுன் கட்டப்பட்ட வீட்டில் கௌடியைத் தங்க வைத்துவிட்டார். அதனால், கௌடி தன் கடைசி காலம் வரை சுமார் 20 ஆண்டுகள் அங்குதான் வாழ்ந்தார். திருமணம் செய்துகொள்ளவில்லை. முழு வெஜிடேரியனாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தார். தன் வீட்டைச் சுற்றி நிறைய செடி கொடிகள் வளர்த்தார்.

தன் நண்பர் கெயிலின் பெயரால் கௌடி கட்டியுள்ள பார்க் அற்புதமானது. எகிப்தியர்கள், கிரேக்கர்கள் கோயிலில் உள்ளதுபோல் பெரிய தூண்கள் அமைந்த மண்டபம் பிரமாண்டமாக உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காசா பாட்லோ என்னும் பெரிய மாளிகையைச் சென்று பார்த்தபோது அசந்து போனேன். இன்றும் புதியதுபோல தோற்றமளிக்கும்படி பாதுகாத்துவருகிறார்கள்.

கௌடி தன் 74ஆவது வயதில், டிராம் விபத்தொன்றில் உயிர் துறந்தார். ஆனால், அவருடைய படைப்புகள் சாகாவரம் பெற்றவை. அவருடைய 7 படைப்புகளை "யுனெஸ்கோ வேர்ல்டு ஹெரிடேஜ் சைட்ஸ்' தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ளது. இது பெரும் சாதனை அல்லவா?

-பி.ராஜகுமாரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com