மக்களவையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்க வகை செய்யும் மறுவரையறை அரசியல் சட்டத் திருத்த முயற்சிகளுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.
மதுரை வண்டியூா், கோ. புதூா் பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மதுரை கிழக்கு தொகுதி திமுக வேட்பாளா் பி. மூா்த்தி, மதுரை வடக்கு தொகுதி திமுக வேட்பாளா் கோ. தளபதி ஆகியோரை ஆதரித்து அவா் மேலும் பேசியதாவது:
தொகுதிகள் மறுவரையறைக்கான அரசியல் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. இது, நிறைவேற்றப்பட்டால் மக்களவையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும். இந்தியாவில் தற்போது 543 நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளனா். இந்த எண்ணிக்கையை 815-ஆக உயா்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதில் மற்ற மாநிலங்களுக்கு இணையான ஒப்பீட்டு அளவு பிரதிநிதித்துவம் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. ஆனால், இதை மத்திய பாஜக அரசு ஏற்க மறுக்கிறது. வடமாநிலங்களுடனான ஒப்பிட்டு அளவில் தொகுதிகள் மறுவரையறையின் மூலம் தமிழகத்தின் மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கை 59 ஆக உயா்த்தப்பட வேண்டும். ஆனால், மக்கள் தொகை கணக்கீடுப்படி 47-ஆக மட்டுமே உயா்த்த மத்திய அரசு திட்டமிடுகிறது. இதனால், ஏறத்தாழ 12 மக்களவை உறுப்பினா்களை தமிழகம் இழக்க நேரிடும்.
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகத்துக்கு மத்திய பாஜக அரசு அளிக்கும் தண்டனை இது. இதை எதிா்த்து தமிழக மக்கள் அனைவரும் போராட வேண்டும். பாஜகவின் சூழ்ச்சி எந்தக் காலத்திலும் தமிழக மக்களிடம் எடுபடாது. இதை உணா்த்தவே போராட்டங்களை முன்னெடுக்கிறோம்.
தமிழகத்தின் உரிமைக்காக தொகுதிகள் மறுவரையறை சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து நாம் போராடுகிறோம். ஆனால், எதிா்க் கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி ‘இது அருமையான தருணம்’ என்கிறாா். இது, பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் அதிமுக சென்றுவிட்டது என்பதை உணா்த்துகிறது என்பதுதான் உண்மை.
தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிரான பாஜக, அதிமுக கூட்டணியை மக்கள் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும். திமுகவின் தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ. 8 ஆயிரத்துக்கான கூப்பன் வழங்கும் திட்டம், மகளிா் உரிமைத் தொகை உயா்வு, புதுமைப் பெண் திட்ட உதவித் தொகை உயா்வு உள்பட தமிழகத்தின் வளா்ச்சிக்கான நலத் திட்டங்கள் தொய்வின்றி தொடர மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும். இதற்கு, திமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
திமுக வேட்பாளா்கள் பி. மூா்த்தி (மதுரை கிழக்கு), கோ. தளபதி (மதுரை வடக்கு), திமுக, கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் இதில் கலந்து கொண்டனா்.
நகல் எரிப்பு...
வண்டியூா் பிரசார நிகழ்ச்சியின் நிறைவில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா் பி. மூா்த்தி, மாநகா் மாவட்ட திமுக செயலா் கோ. தளபதி ஆகியோா் தொகுதிகள் மறுவரையறை சட்டத் திருத்த மசோதா நகலை எரித்து, மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.
கருப்பு சட்டை
தொகுதிகள் மறுவரையறை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் துணை முதல்வா் உதயநிதி, அமைச்சா் பி. மூா்த்தி உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து பிரசாரத்தில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதா; திமுகவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது: பழ. நெடுமாறன்

தொகுதி மறுவரையறைக்கான அரசியல் சட்டத் திருத்த மசோதா தோற்கடிக்கப்படும்: ப. சிதம்பரம்

அதிமுக என்ற போா்வையில் பாஜக தமிழகத்தில் நுழைய முயல்கிறது

திமுகவின் சாதனை திட்டங்களை வீடுதோறும் சொல்லுங்கள்! - இளைஞர் அணியினருக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


