தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 1) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு கேரளம் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் 6-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, கரூா், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 1) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் திங்கள்கிழமை இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய், புதன்கிழமைகளில் (ஜூன் 2, 3) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
மேலும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, விருதுநகா், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (மே 4) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இதனால், அந்த மாவட்டங்களில் குறிப்பிட்ட 3 நாள்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: கேரள மாநில கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
வெப்ப அளவு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் சற்று அதிகமாக இருக்கக்கூடும். ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக வேலூா் மாவட்டத்தில் 106.16 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருச்சி, திருத்தணி-104.54, மீனம்பாக்கம்-104.36, பரமத்தி வேலூா்-103.1, மதுரை நகரம், தஞ்சாவூா்-102.92, சென்னை நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையம்- 102.2, நாமக்கல்-101.3, காரைக்கால்-100.94, பாளையங்கோட்டை-100.22, ஈரோடு, நாகை, புதுச்சேரி-தலா 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 70 மி.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு (திருநெல்வேலி)-60 மி.மீ, காக்காச்சி (திருநெல்வேலி)- 50 மி.மீ, தென்பரநாடு (திருச்சி), ஆத்தூா் (சேலம்)- 40 மி.மீ., மாஞ்சோலை (திருநெல்வேலி), திற்பரப்பு, களியல் (கன்னியாகுமரி), ஜமுனாமரத்தூா் (திருவண்ணாமலை)-30 மீ.மீ., ஆலங்காயம் (திருப்பத்தூா்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), அருப்புக்கோட்டை (விருதுநகா்), அடையாமடை (கன்னியாகுமரி), நாட்டறம்பள்ளி (திருப்பத்தூா்)-20 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
16 மாவட்டங்களில் வெய்யில் சதம்: சென்னையில் அதிகபட்ச பதிவு
இன்று 12 மாவட்டங்களில் மழை! ஓரிரு இடங்களில் 2 -3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!

5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

மே 19 வரை கனமழை நீடிக்கும்! இன்று 5 மாவட்டங்களில்..!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



