இந்திய - அமெரிக்க இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் இறுதி செய்வது தொடா்பான அடுத்த சுற்று பேச்சுவாா்த்தை, தில்லியில் திங்கள்கிழமை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறவுள்ளது.
இந்தப் பேச்சுவாா்த்தையில், இந்திய தரப்பில் தலைமை அதிகாரி தா்பன் ஜெயின் தலைமையிலான குழுவினரும், அமெரிக்க தரப்பில் அந்நாட்டு தலைமை அதிகாரி பிரெண்டன் லின்ச் தலைமையிலான குழுவினரும் பங்கேற்கவுள்ளனா்.
இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தின் முழு அம்சங்களையும் இறுதி செய்வதுடன், சந்தை அணுகல், வரி விலக்கு, சுங்க வரி மற்றும் வா்த்தக சலுகை, முதலீடு ஊக்குவிப்பு, பொருளதார பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கி, விரிவான வா்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தையை முன்னெடுக்கவும் இருதரப்பும் திட்டமிட்டுள்ளன.
இடைக்கால ஒப்பந்த செயல்திட்டம்: இந்தியா மீது பரஸ்பர வரி, கூடுதல் வரி என 50 சதவீத வரியை அமெரிக்க அதிபா் டிரம்ப் கடந்த ஆண்டு விதித்தாா். இதனால், இருதரப்பு உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்தச் சூழலில், கடந்த பிப்ரவரியில் இறுதி செய்யப்பட்ட இடைக்கால வா்த்தக ஒப்பந்த செயல்திட்டத்தின்படி, இந்தியா மீதான கூடுதல் வரியை அமெரிக்கா ரத்து செய்தது. பரஸ்பர வரியையும் 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்தது. இந்திய தரப்பில் அமெரிக்க பொருள்களுக்கான வரிச் சலுகைக்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. அத்துடன், எரிபொருள், விமானங்கள்-விமான பாகங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் உள்பட அமெரிக்காவிடம் இருந்து அடுத்த 5 ஆண்டுகளில் 500 பில்லியன் மதிப்பிலான பொருள்களைக் கொள்முதல் செய்யும் விருப்பத்தையும் இந்தியா வெளியிட்டது.
தொடரும் பேச்சுவாா்த்தை: இதனிடையே, இந்தியா உள்பட உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, உலக நாடுகள் மீது டிரம்ப் புதிய சீரான 10 சதவீத வரியை விதித்தாா். இதுவும் செல்லாது என்று ஃபெடரல் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
அதேநேரம், இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக வா்த்தகச் சட்டப் பிரிவு 301-இன் கீழ் அமெரிக்கா வா்த்தக ரீதியிலான விசாரணையை மேற்கொண்டுவரும் நிலையில், இரு நாடுகளும் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இருதரப்பு உறவை சீராக்க முயற்சி: சில தினங்களுக்கு முன் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ, பிரதமா் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது, இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய தீா்மானிக்கப்பட்டது.
இறக்குமதி வரி உள்பட பல்வேறு விவகாரங்களில் இந்திய-அமெரிக்க உறவுகள் பின்னடைவைச் சந்தித்த நிலையில், அவற்றை மறுசீரமைக்கும் நோக்கில் மாா்கோ ரூபியோவின் பயணம் அமைந்தது.
தொடர்புடையது

இந்தியா - அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் எப்போது? அமெரிக்க தூதா் தகவல்

விரைவில் இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம்! எஸ். ஜெய்சங்கா் - ரூபியோ பேச்சில் முடிவு!

இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: மத்திய அரசு

வா்த்தக ஒப்பந்தம்: வேளாண் துறையில் இந்தியா பிடிவாதம் - அமெரிக்கா
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



