22. அன்னக்கொடியும் ஆஸ்துமாவும்
அன்னக்கொடி என்ற சத்துணவு மைய சமையல் பணிப்பெண்ணுக்கு வயது 45. ஆஸ்துமா நோயால் அவதிக்குள்ளாகி ஒன்றரை வருடங்களாக ஆங்கில மருத்துவ


அன்னக்கொடி என்ற சத்துணவு மைய சமையல் பணிப்பெண்ணுக்கு வயது 45. ஆஸ்துமா நோயால் அவதிக்குள்ளாகி ஒன்றரை வருடங்களாக ஆங்கில மருத்துவ சிகிச்சை மூலம் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தார். தினமும் இன்ஹேலர் தேவைப்பட்டது. அதையும் மீறினால் நெபுலைசர் சிகிச்சைக்குப் போய்விடுவார். ஆஸ்துமாவால் அவர் படும் அவதிக்கு நிரந்தரமான நிவாரணம் தேடி ஹோமியோபதி சிகிச்சைக்கு வந்தார்.
15 நாட்களுக்கு ஒருமுறை வீதம் மூன்று மாத சிகிச்சை முடிந்த பிறகு இன்ஹேலர் உபயோகம் வெகுவாக குறைக்கப்பட்டு, இரவிலும், குளிர் நேரத்திலும், சமையல் வேலையின் போதும் வரக்கூடிய மூச்சிரைப்பு பெருமளவு கட்டுப்பட்டிருந்தது. ஆயினும் முழு நிவாரணமாக கருத முடியவில்லை. அவரது நோய் கூடுதல் குறைதல் அடிப்படையிலும், அறிகுறிகள் அடிப்படையிலும் மருந்துகள் அளித்து வந்ததால் நிவாரணம் கிடைத்து வந்தது. எனில் முழுமையான தீர்வை நோக்கி முன்னேற வேண்டியிருந்தது.
முதல்முறை அவர் சிகிச்சைக்கு வந்தபோது சொல்லத் தயங்கிய தகவல்களை மீண்டும் விசாரிக்கத் துவங்கினேன். மெல்லத் திறந்தது மனக்கதவு. கணவர் இல்லை. இரண்டு மகள்கள். மூத்தவள் மணமாகி கணவர் வீடு சென்று விட்டாள். இரண்டாவது மகள் கால்கள் ஊனத்துடன் திருமணமாகாமல் வீட்டில் இருந்து வந்தாள். மூத்தவளின் மகள் தன்னைப் போலவே இருப்பதால், திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்து வந்தாள். மூத்தவளின் மகள் தன்னைப் போலவே இருப்பதால், பேத்தி மீது அன்னக்கொடிக்கு அளவு கடந்த பிரியம். திடீரென மாப்பிள்ளைக்குப் பணத் தேவை ஏற்பட்டு, மகள் கண்கலங்கி நின்றபடி ஐம்பதாயிரம் கேட்டபோது, அவள் மீது இடி இறங்கியது போலிருந்தது. ‘உன்னை மாதிரி உன் தங்கச்சிக்கும் கல்யாணம் முடிக்க வேண்டாமா? அவளுக்காக குருவி மாதிரி சேத்த பணத்தை உங்கிட்ட கொடுத்திட்டா அவள யாரு கரை சேர்க்கிறது?’ என்று அன்னக்கொடி பணம் தர மறுத்து, ஒன்றரை வருடங்களாகிறது. மூத்த மகள் கோபித்துக் கொண்டு போனவள் தான். ஒருமுறை கூடத் திரும்ப வரவில்லை. பிரியத்துக்குரிய பேத்தியையும் பார்க்க முடியவில்லை.
அன்னக்கொடியின் ஆழ்மனச் சோகங்களிலிருந்து இரவு, பகல் வித்தியாசமின்றி வெளிப்பட்ட மூச்சிரைப்பினைப் புரிந்து கொண்ட பின் முந்தைய மருந்துகளிலிருந்து மாறுதலாய் ‘இக்னேஷியா’ எனும் ஹோமியோ மருந்து கொடுக்கப்பட்டது. வெளியிடங்களில் மகளைப் பார்த்த போதெல்லாம் முகமறியாத மூன்றாவது மனுஷி போல அவள் நடந்து கொள்வதாகவும்; பேத்தி முகத்தைப் பார்க்க கூட அனுமதிக்காமல் அவமதிப்பதாகவும் கூறி வருந்திய நிலையில் ‘ஸ்டாபிசாக்ரியா’ கொடுக்கப்பட்டது. என்ன ஆச்சரியம்! அன்னக்கொடியின் மனநிலையும் உடல்நிலையும் ஒருசேர முன்னேறியது. அடுத்து இரண்டு, மூன்று மாதங்களில் ஒருமுறை கூட மூச்சிரைப்பு வரவில்லை; இன்ஹேலர் பயன்படுத்தவுமில்லை. ‘என் இரண்டாவது மகள் தான் இனி என் வாழ்க்கை. பெற்ற தாயையே புறக்கணித்து ஒதுங்கிப் போனவளுக்காக நான் ஏன் வருத்தப்படணும்? என்று வாழ்வின் நெளிவு சுளிவுகளை கிரகித்துக் கொண்டவராய் தெளிந்த மனத்துடன் பேசினார். பின்னர் சிகிச்சை சிறிது காலமே தேவைப்பட்டது. அன்னக்கொடி ஆஸ்துமாவிலிருந்து முழுமையாக விடுதலையடைந்தார்.
*****
மனிதர்களை அச்சுறுத்தித் துயரப்படுத்தும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. ஆஸ்துமா என்பது கிரேக்கச் சொல். மூச்சுத் திணறல் என்பது இதன் பொருள். மூச்சுத் திணறலை ஆங்கிலத்தில் Wheezing அல்லது Panting என்று அழைக்கிறார்கள். மூச்சுக் காற்றுக்காக ஏங்கி ஏங்கித் திணறுவதுதான் ஆஸ்துமா என்கிறார் ஹிப்போகிரேட்டஸ். மூச்சை உள் இழுக்கவோ, வெளியிடவோ சிரமப்படும் இயல்புக்கு மாறான திணறல் நிலைமைகளே இந்நோயின் முக்கிய அறிகுறிகள்.
ஆஸ்துமா நோயோடு தொடர்புள்ள முக்கிய உடலுறுப்பு நுரையீரல். நுரையீரல்கள் மார்ப்புக்குழியை (Thorasid Cavity) வருமளவுக்கு நிறைந்துள்ளது. நுரையீரலின் மேல்பகுதியில் மூச்சுப் பெருங்குழாய் (Trachea) எனப்படும் காற்றுக்குழாய் சுமார் 12 செ.மீ. நீளம் 25 செ.மீ அகலத்தில் அமைந்துள்ளது. இது குருத்தெலும்பால் ஆனது. இக்காற்றுக் குழாய் இரண்டாகப் பிரிகின்றன.
இடதுபக்கக் கிளைக் காற்றுக் குழாய்க்கு Left Bronchus என்றும் வலது பக்கக் கிளைக் காற்றுக் குழாய்க்கு Right Brochus என்றும் பெயர். இவ்விரண்டு கிளைகளும் நுரையீரலுக்கு உள்ளே நுழைந்ததும் பல்வேறு துணைக் கிளைக் காற்று குழாய்களாகப் பிரிகின்றன. இவை Bronchioles எனப்படும். இக்குழாய்களும் குருத்தெலும்பால் ஆனவை. இவற்றின் முடிவில் எண்ணற்ற சின்னஞ்சிறு காற்றுப்பைகள் (Air Sacs) இவற்றுக்கு Alveoli என்று பெயர். இவற்றின் எண்ணிக்கை சுமார் 300 கோடி நுண்ணிய காற்று அறைகள் நுரை போன்ற வடிவத்தில் காணப்படுவதால் தான் நுரையீரல் எனப்படுகிறது. இந்தக் காற்றுப் பைகளைச் சுற்றிலும் அருகிலேயே தந்துகிகள் எனப்படும் மெல்லிய ரத்தக் குழாய்கள் ஓடுகின்றன.
சுவாசிப்பதற்கு முக்கியமாகப் பயன்படக்கூடியது மூக்கு அல்லது நுரையீரல் என்று தான் சொல்லத் தோன்றும். ஆனால் நுரையீரலின் கீழ் அமைந்துள்ள, வயிற்றையும் மார்பையும் பிரிக்கக்கூடிய ‘உதரவிதானம்’ (Diaphragm) எனப்படும் அடிச்சவ்வு சுருங்கி விரிந்தால் தான் நுரையீரலுக்குள் காற்றுப் போக்குவரத்து நடைபெற முடியும். நுரையீரலிலுள்ள காற்றுக்குழாய் பகுதிகள் சுருக்கமடைந்து ‘ஆஸ்துமா’ ஒவ்வாமை (Allergy) பாரம்பரியம், உடலமைப்பு மற்றும் மன உணர்ச்சிகள். ஒவ்வாத பொருட்கள் Allergens என்றும் அவற்றை உடலுக்குள் எதிர்க்க உருவாகும் எதிர்ப்பொருள்கள் Antibodies என்றும் இரண்டுக்குமிடையில் நிகழும் செயல்பாட்டை Allergen – Antibody Reaction என்று அழைக்கப்படும். இந்நிகழ்வின் போது திசுக்களிலிருந்து ஹிஸ்டமின், பிராடிகைனின், கைகனின் போன்ற சில ரசாயனப் பொருட்கள் அதிகளவு வெளியேறி ரத்தத்தில் கலக்கின்றன. இதனால் உடலில் ஒவ்வாமைக் குறிகள், தும்மல், நீர் ஒழுக்கு, மூக்கடைப்பு, சுவாசக் குழாய்கள் சுருக்கம் போன்றவை ஏற்படுகின்றன.
ஒவ்வாமை உண்டாக்கும் பொருட்களை வகைப்படுத்துகின்றனர்.
உணவில் ஒவ்வாத பொருட்கள்….பால், நெய், எண்ணெய், மீன், முட்டை, கீரை, கோதுமை போன்றவை.
வெளியுலக ஒவ்வாத பொருட்கள்…தூசு, புகை, குளிர்காற்று, மகரந்தம், பிராணிகளின் முடி, உமிழ்நீர், கழிவுகள், பெயிண்ட், பெட்ரோல்…போன்றவை
அலோபதி மருத்துவத்திலுள்ள உலக ஒவ்வாத பொருட்கள் டார்ட்ராசின், சல்போனமைடு, ஆஸ்பிரின், பென்சிலின், மேலும் ஏராளமான மருந்துகள் மற்றும் செயற்கை உணவுப் பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள்…போன்றவை.
ஒவ்வாமை பொருட்களால் ஏற்படும் ஆஸ்துமா ‘Extrinsic Asthma’ எனப்படும். இத்தகைய ஆஸ்துமாவிற்கான காரணங்கள் புற உலகில் நிறைந்துள்ளன. வீடுகளிலுள்ள ஒட்டடை, தூசிகள் மற்றும் அவற்றில் நிறைந்துள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் (House Dust Mite) ஆஸ்துமாவை தூண்டும் வெளிக்காரணங்களில் முக்கியமானவையாகக் கூறப்பட்டன. தற்போது தொடர் ஆராய்ச்சிகள் மூலம் தூசிகளிலுள்ள நுண்ணுயிர்களின் கழிவுகளால் தான் ஆஸ்துமா தூண்டப்படுகிறது என அறிவித்துள்ளனர். எனவே திரைச் சீலைகள், மேஜை விரிப்பான்கள், போர்வைகள், தலையணை உறைகள் போன்றவற்றை வாரம் ஒரு முறையேனும் துவைத்து வெயிலில் உலர வைப்பது அவசியம் என்று அறிவுறுத்துகின்றனர்.
ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளால் நுரையீரல் இயக்கம் 20 சதவிகத்துக்கும் மேல் குறைவதால் ஆஸ்துமா தூண்டப்படுகிறது. குழந்தைகள் விரும்பி உண்ணும் கேக்கிற்கு நிறமளிப்பதற்குப் பயன்படும் Tartrazine ஆஸ்துமாவைத் தூண்டுகிறது. ஒரு பகுதியினருக்கு கடலுணவுகள் (இரால், நண்டு, மீன்) சேராது. இவற்றில் உப்புத்தன்மை அதிகம். சாப்பிடுவோர் உடலிலும் இது அதிகரித்து, வெளிக்காற்றின் ஈரப்பதத்தை ஈர்க்கும். இதனால் ஆஸ்துமா ஏற்படும். சிலருக்கு சுண்டல், அடை, காளான் வகை சேராது. இவற்றிலுள்ள அதிக புரோட்டீன் எளிதில் ஜீரணமாகாமல் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும்.
அகக் காரணங்களால் – மன உணர்ச்சிகளால் உண்டாகும் ஆஸ்துமா ‘Intrinsic Asthma’ எனப்படும். 75 சதவிகித ஆஸ்துமா நோயாளிகளுக்கு மன உணர்ச்சிகளே காரணம் என ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. பயம், பதற்றம், அதிர்ச்சி, எரிச்சல், கோபம், தோல்வி, ஏமாற்றம், வேதனை, அன்பிற்கான ஏக்கம், மன இறுக்கம் (Tension), மன அழுத்தம் (Stress) எனப் பல்வேறு வகையான மிகை உணர்ச்சிகள் – மனப் பாதிப்புகள் ஆஸ்துமாவை தூண்டுகின்றன. அதிகரிக்கச் செய்கின்றன. இருதயத்தில் இடதுபுற கீழ் அறை செயலிழப்பினால் இருதய ஆஸ்துமா Cardiac Asthma சிலருக்கு ஏற்படுகின்றது. இவர்களுக்கு ஏற்கெனவே அதிக ரத்தக் கொதிப்பு அல்லது இருதய நோய்கள் இருப்பதால் மட்டுமே இந்நிலை ஏற்படுகிறது.
பாரம்பரியக் காரணங்கள், அகக்காரணங்கள், புறக்காரணங்கள் என எந்த அடிப்படையில் ஆஸ்துமா ஏற்பட்டாலும், எப்போது ஏற்பட்டாலும் ஆங்கில மருத்துவம் ஒரே மருந்தைப் பயன்படுத்துகின்றது. மனம், உடல் தொடர்பான அனைத்து விவரங்களும் விசாரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு ஹோமியோபதியில் ஒவ்வொருவரையும் தனித்தனியே ஆய்வு செய்து சிகிச்சை (Individual Analysis & Treatment) அளிக்கப்படுவதால் முழுநலம் பெற முடிகிறது.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஆஸ்துமா ஏற்படுத்தும் காரணி மற்றவர்களுக்கு ஏற்படுத்துவதில்லை. பலருக்கு அழகையும், நறுமணத்தையும் வழங்கும் பூக்கள் ஒரு சிலருக்கு ஆஸ்துமா துயரத்தை ஏற்படுத்திவிடுகிறது. எனவே பாதிக்கப்பட்டவரின் தனிச்சிறப்பான நோய்க்குறிகளைக் கண்டறிந்து அதற்கேற்ப ஹோமியோ சிகிச்சையளிப்பதன் மூலம் நிவாரணமும் நலமும் கிட்டுகிறது. குறிகளுக்கேற்ப ஆஸ்துமா துயர்களுக்குப் பயன்படும் சில முக்கிய ஹோமியோ மருந்துளாவன…
ஆர்சனிகம் ஆல்பம், நேட்ரம்சல்ப், இபிகாக், ஸ்பாஞ்சியா, அரேலியா, ஈசிமோசா, சாம்புகஸ் ஆண்டிம் டார்ட், ஹீபர் சல்ப், போதாஸ், நக்ஸ்வாமிகா.
••••
Dr.S.வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர்
சாத்தூர் - 9443145700
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...