27.அச்சத்திலிருந்து விடுதலை
சபரிமலைக்கு மாலையணிந்து செல்லும் குழுவைச் சேர்ந்த சிலர் சற்று மனக் குழப்பத்துடனும், கலக்கத்துடனும் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும்


சபரிமலைக்கு மாலையணிந்து செல்லும் குழுவைச் சேர்ந்த சிலர் சற்று மனக் குழப்பத்துடனும், கலக்கத்துடனும் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள சிறிய கிராமத்தின் ஒரே தெருவில் வசிப்பவர்கள். அங்குள்ள 70 வயது மூதாட்டி ஒருவர் அன்று காலையிலிருந்து, ‘தான்’ இன்று இறந்து விடுவேன்’ என்று பீதியுடன் சொல்லிக் கொண்டே இருப்பதாகக் கூறினார்கள். இன்றிரவு அவர்கள் அனைவரும் பூஜைகள் முடித்து சபரிமலைக்குப் புறப்படவிருக்கும் சூழ்நிலையில் அந்த மூதாட்டிக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தான் வந்திருந்த அனைவரிடமும் காணப்பட்டது.
மூதாட்டியின் பொதுவான உடல்நிலை, நோய் நிலை, மனநிலை குறித்து கூடுதலாக விவரங்கள் கேட்டறிந்த பின்னர் ‘அகோனைட்’ (Aconite) எனு ஹோமியோ மருந்தினை ஒரு சிறு குப்பியில் கொடுத்து எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் கூறியனுப்பினேன். சில மாத காலம் கழித்து ஓர் நாள் அந்த கிராமத்தைச் சேர்ந்த இருவர் சிகிச்சைக்கு வந்த போது மூதாட்டியைப் பற்றி நான் விசாரிக்காமலேயே கூறத் துவங்கினர். ‘நாங்க சபரிமலைக்குப் போகிற நாளன்று ஏதும் நடந்து விடக் கூடாது என்று தான் உங்களிடம் வந்தோம். ஆனால் அந்தக் கிழவி இன்னும் உயிரோடு இருந்து கொண்டு கயிற்றுக் கட்டிலில் கிடந்த படியே வீட்டில் இருப்பவர்களுடன் அக்கம் பக்கத்தினருடன் வாக்குவாதம் செய்து கொண்டேயிருக்கிறாள். பெரிய தொந்திரவாக இருக்கிறது’ என்றனர். அந்த மூதாட்டியின் உடலுக்குள் உயிர்பறவை சுதந்திரமாக உலவிக் கொண்டிருப்பதை அறிந்து மருத்துவனாக நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
**
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க – உன்
வீரத்தைக் கொழுந்திலேயெ கிள்ள வைப்பாங்க!’ என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்திரம் பாடிய வரிகள் நம் சமூகத்தின் குழந்தை வளர்ப்பைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. பிறக்கும் குழந்தைகள் எல்லோருமே தைரியசாலிகள் தான். உரிய பருவத்தில் உரிய மாற்றங்கள் ஏற்பட்டு வளரும் போது குழந்தையின் கால்களை முன்னேற விடாமல் அச்ச விலங்குகள் பூட்டுவது வளர்ப்பு சூழ்நிலையே.
பயங்களை இருவகையாகப் பிரித்தறியலாம். ஒன்று, அபாயங்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள, தப்பிக்க உதவும் பயம். மான் புயலாய் பாய்ந்தோடுகிறது, ஆமை ஓட்டுக்குள் அடங்கிக் கொள்கிறது. நத்தை தன் கூட்டுக்குள் முடங்கிக் கொள்கிறது. பச்சோந்தி தன் நிறத்தை மாற்றித் தப்பிக்க முயற்சிக்கிறது. இவை பயத்தால் ஏற்படும் செயல்பாடுகள் தான். ஆனாலும் அர்த்தமுள்ள பயங்கள்! அவசியமான பயங்கள். இதைத் தான் வள்ளுவப் பெருந்தகை ‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ என்று சுட்டிக் காட்டுகிறார்.
இரண்டாவது, அடிப்படையோ, ஆதாரமோ இல்லாத பயம். இது தான் உளவியலாளர்களால் PHOBIA என்று அழைக்கப்படுகிறது. இதில் எண்ணற்ற பயங்கள் அடங்கும். அனைத்தும் அர்த்தமற்றவை.

தனிமையில் இருக்க பயம், தனிமையில் பயணிக்க பயம், புதியவர்களைக் கண்டால் பயம், கூட்டத்தைக் கண்டால் பயம், பிறருடன் பேசப் பயம், இறந்தவர்களைக் கண்டால் பயம், பேய் பிசாசு பயம், இருட்டில் செல்ல பயம், பூட்டிய அறையைத் திறக்க பயம், நோயைக் கண்டு பயம், நோயால் இறந்து விடுவோம் என்று பயம்.
நமது சமூக அமைப்பில் குழந்தைகளுக்குத் தேவையற்ற பயங்கள் கற்பிக்கப்படுகின்றனல். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு வெட்கமும், பயமும் தாய்ப்பாலோடு கலந்து ஊட்டப்படுகிறது.
'நாணமும், அச்சமும் நாய்கட்கு வேண்டும்’ என்றான் மகாகவி பாரதி. இங்கே இவை பெண்களின் அடிப்படை குணநலன்கள் என்று தவறாகக் கற்பிக்கப்படுவதால் பயம் எனும் நோய்க்கு பெண்கள் அதிகளவில் பலியாகின்றனர். பல்லி, கரப்பான் பூச்சி முதல் வாழ்வின் பல்வேறு அம்சங்கள் வரை பெண்களின் பயங்கள் பரவிக் கிடக்கின்றன.
அச்சநோய்கள் (Phobia) எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் பெருகிக் கொண்டே போகின்றன. விலங்குகள் மீதும் பயம் (Zoophobia), நெருப்பு மீது பயம் (Phrophobia), தொற்று நோய் பற்றிய பயம் (Bacillophobia), இரவைப் பற்றிய பயம் (Noctophobia), மனித இனத்தின் மீது பயம் (Anthrophobia), வறுமை குறித்துப் பயம் (Peniaphobia), காற்று மீது பயம் (Anemophobia) இடி மீது பயம் (Astraphobia), பெண்கள் மீது பயம் (Gynophobia), ஆண்கள் மீது பயம் (Androphobia), உடலுறவு மீது பயம் (Coitophobia), தண்ணீர் மீது பயம் (Hydrophobia), மாதவிடாய் மீது பயம் (Menophobia) என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஆயினும் அத்தனை விதமான அச்ச நோய்களுக்கும் ஹோமியோபதி மருத்துவத்திலும், பாச் மலர் மருத்துவத்திலும் மருந்துகள் உள்ளன என்பது அனைவரும் அறிய வேண்டிய செய்தியாகும்.
இணைய நிறுவனம் ஒன்று ஆன்லைன் மூலம் ஓர் ஆய்வு மேற்கொண்டது. ‘எதில் அதிக பயம்?’ என்ற கேள்வி ஆயிரக்கணக்கானவர்களிடம் கேட்கப்பட்டது. பத்து முக்கிய பதில்கள் இதோ : இறப்பு, நோய், விபத்து, விலங்குகள், பாம்புகள், இருட்டு, மக்கள்/கூட்டம், வாகனம் ஓட்டுதல், உயரங்கள், பறத்தல்.
பத்து விரல்களுடன் மனிதர்கள் பிறக்கிறார்களோ இல்லையோ, பத்துவித முக்கிய அச்சநோய்களுடன் வளர்கிறார்கள், வாழ்கிறார்கள் என்பதே உண்மை.
அச்சநோய்களில் முதன்மையானதாக அமைவது மரணபய நோய் தான். அதனை Thanatophobia (அ) Necrophobia (அ) Deathphobia என்று அழைக்கின்றனர். இறந்துவிட்ட தன் மகனைப் புத்தரிடம் எடுத்து வந்த அன்புத்தாய் கவுதமி, மகனை மீண்டும் உயிர்ப்பித்து தருமாறு மன்றாடினாள்.
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஓர் எள் வாங்கி வருமாறு அதிலும் குறிப்பாக இதுவரை ஓர் இறப்பு கூட நடக்காத வீடுகளிலிருந்து எள் வாங்கி வர வேண்டும் என்றும் புத்தர் அவளிடம் கேட்டுக் கொண்டார். வீடு வீடாகச் சென்று விசாரித்த பின்னர் தான் மானுட வாழ்வின் உண்மையை அவள் உணர்ந்தாள் என்றொரு பிரபலமான கதை உண்டு.
இறப்பு என்பது இழப்பு அல்ல. இயற்கை! வாழ்வின் இறுதி அத்தியாயம்! ஒரே ஒருமுறை இயற்கையாக இறப்பதற்கு முன்பு பல்லாயிரம் முறை மரண பயம் காரணமாக இறந்து கொண்டேயிருப்பது தவிர்க்கப்பட வேண்டிய துயரம். மரணபயத்திற்கான காரணங்களையும், சூழ்நிலைகளையும், ஹோமியோபதி மருத்துவர்கள் உளவியலறிஞர்கள் போல ஆய்வுப் பூர்வமாக அணுகிச் சிகிச்சை அளிக்கின்றனர்.
முதுமைக் காலத்தில் வரும் மரண பயம் அவர்களின் துணையின் மரணத்தின் போது அதிகரிக்கிறது. சக முதியோரின் மரணத்தைப் பார்க்கிற போதும் அதிகரிக்கிறது. இச்சம்பவங்கள் இவர்களின் மரணங்களை நினைவூட்டுவதால், வயதால் முதுமை அடைந்த போதிலும் மனத்தால் முதிர்ச்சி அடையாத காரணத்தால் மரண பயம் எனும் பள்ளத்தாக்கினுள் வீழ்ந்து தவிக்க நேர்கிறது. அதீத மரண பயம் உள்ள சிலர் ஆங்கில மனநல சிகிச்சையினை அணுகுகின்றனர். ஆயினும் முழுத் தீர்வு கிட்டாமல் தவிக்கின்றனர். அனைத்து அச்ச நோய்களிலிருந்தும், குறிப்பாக மரண பயத்திலிருந்து மனிதனை முழுமையாக மீட்க, மகிழ்ச்சியான மறு வாழ்வு அளிக்க ஹோமியோபதி மருந்துகளே தலைசிறந்தவை என்று உலகளவில் நிரூபணமாகியுள்ளன.
மரண பயங்களிலிருந்து முழு விடுதலை அளிக்கும் மகத்தான ஹோமியோபதி மருந்துகள் – அகோனைட் (Aconite), ஆர்சனிகம் ஆல்பம் (Arsenicum Album), ஜெல்சிமியம் (Celsemium), பாஸ்பரஸ் (Phosphorus).
Dr.S.வெங்கடாசலம்
மாற்று மருத்துவ நிபுணர்
சாத்தூர் – 626203
செல். 9443145700
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...