பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கருடன் - கந்தன் - கில்காமெஷ்

நாகர்களின் தாய் கத்ருவும் கருடனின் தாய் வினதையும், காசியப முனிவரின் மனைவிகள். ஒரு பந்தயத்தில், மோசடியாக கத்ரு வென்று, வினதையை தன் அடிமையாக்கிவிடுகிறாள். அடிமைத்தனத்திலிருந்து விடுபட, இந்திரலோகத்திலிருந்து அமுதத்தைக் கருடன் கொண்டுவந்து, நாகர்களுக்கும் கத்ருவுக்கும் அளிக்க வேண்டும். கருடனின் அமுதத்தைத் தேடும் பயணத்தில், கில்காமெஷ் போலவே அவனும் பெருமரம் ஒன்றைக் காண்கிறான். இம்மரத்தின் பெயர் ஸுபத்ரம்.

News image
Updated On :11 டிசம்பர் 2015, 9:47 am

அரவிந்தன் நீலகண்டன்

மேற்கத்திய பண்பாட்டின் முதல் பண்பாடாக, அகாடியப் பேரரசு கருதப்படுகிறது. அகாடிய மண்சுவடிகள், கி.மு. 2200-களின் காலகட்டங்களைச் சார்ந்ததாகக் கருதப்படுகின்றன. பின்னாட்களில், அசிரிய மண்சுவடிகள், கி.மு. 650-களைச் சார்ந்தவை. பிற்காலத்தில், ஹிடடைட் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, கதைப் பாடல்களாக வழங்கிவந்த பாடல்களும் உண்டு. இன்று, உலகின் மிகப் பழமையான காவியம் என அறிஞர்கள்  முன்வைக்கும் கில்காமெஷின் சரிதம் என்பது, இவை அனைத்திலிருந்தும் அறிஞர்களால் உருவாக்கப்பட்டது.

Story image

கில்காமெஷ், மூன்றில் இரு பங்கு தெய்வத்தன்மையும், ஒரு பங்கு மனிதத்தன்மையும் உடையவன். வீரன். அவனது மக்களின் மேய்ப்பன். அவன் உருக் (Uruk) எனும் நகரினை ஆள்கிறான். இந்நகரின் பெரும் மதில்களைக் கட்டியவன் கில்காமெஷ். நகர முதல்வன் என்ற போதிலும், அவன் கொடியவன்.

"தந்தைகளுக்கு மகன்களை அவன் விட்டுவைப்பதில்லை; தாய்களுக்குப் புதல்விகளை அவன் விட்டுவைப்பதில்லை. கேள்வி முறையில்லை. இரவும் பகலும் அவனது ஆணவ அதிகாரமே நடந்து வருகின்றது'' என்கிறது கதைப்பாடல். மக்கள் கலக்கமடைகின்றனர். அவர்கள், படைப்புத் தெய்வமான அருரு தேவியிடம் சென்று முறையிடுகின்றனர் - "நீயே கில்காமெஷை உருவாக்கினாய். இப்போது அவனுக்கு இணையானவனை படைத்திடு''.

Story image
Story image

இவர்களின் ஓலத்தினைக் கேட்ட புவி வளத்தின் தெய்வமான அருரு தேவி, விண்ணகத் தேவனான அனுவின் உருவினை ஒத்த களிமண் பதுமையைச் செய்கிறாள். விண்ணகத் தேவனின் சாயலில், மண்ணால் படைக்கப்பட்டவன் என்கிடு. அவனை பூவுலகுக்கு அளிக்கிறாள். பின்னாட்களில், மானுடப் படைப்பு குறித்த விவிலிய - குரானிய விவரணங்களில், விண்ணகப் பிதாவானவர், அருருவின் செய்கையையே பிரதி எடுக்கிறார். ஆனால், அருரு தேவி மனத்தில் நினைத்த மாத்திரத்திலேயே களிமண் உயிர் கொண்டது. விண்ணகப் பிதா உயிர் மூச்சை மண்ணுக்குள் ஊதவேண்டி இருந்தது.

பராக்கிரமசாலியான என்கிடு என்பவன். அவன் உடல் முழுக்க மயிர் மயமாக இருக்கிறது. அவனது சடைகள், பெண்களின் குழல்கள்போல உள்ளன. மனிதர்களின் குடியிருப்புகள் குறித்து எதையும் அறியாமல் என்கிடு வாழ்கிறான். மிருகங்களுடன் இணைந்து அவற்றில் ஒன்றாக வாழ்க்கை நடத்துகிறான்.

''அவன் மான்களுடன் மேய்கிறான். காட்டுயிர்கள் எங்கு நீர் அருந்துமோ அங்கு செல்கிறான். நீர்நிலைதனில் அவன் மனமும் அவ்விலங்குகளுடன் இன்பமடைந்திட'' அவன் வாழ்கிறான் என்கிறது, சுட்டமண் சுவடிகளில் எழுதப்பட்ட கதைப்பாடல்.

அச்சமயம், கில்காமெஷின் வேடுவன் ஒருவன், தான் வைக்கும் பொறிக்கு ஒரு விசித்திர மானுட விலங்கு (என்கிடு) தப்புவதைக் காண்கிறான். அவன் இந்த அதிசய விலங்கு குறித்து கில்காமெஷிடம் கூற, கில்காமெஷ் அதனை கானகத்துக்குள் இருந்து வெளிக்கொணர விரும்புகிறான். எப்படிச் செய்வது? இஷ்டார் பெண் தெய்வத்தின் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்ட பெண் ஒருத்தியை (தேவதாசி) அனுப்புகிறான்.

அவளுக்கான கட்டளை தெளிவாக இருக்கிறது - ''உன் மடியை அவனுக்குத் திறந்திடு. உன் எழிலினில் அவனை மயக்கிடு. அவன் உன்னைக் கவனித்ததும் உன்னிடம் வருவான். உன் ஆடையை நெகிழவிடு. அவனை உன் மேல் படரவிடு. பெண்ணாகிய உன் திறமையைக் காட்டு. அவனுள் காமத்தை மூட்டு. அவன் காமம் உன்னிடம் எழுந்திடும். அனைத்து உயிரினங்களும் அவனிடமிருந்து விலகிவிடும்''.

அந்தத் தேவதாசியும் அவனை மயக்குகிறாள். ஆறு நாட்களும் ஏழு இரவுகளும் அவர்கள் கூடுகின்றனர். பின்னர், அவன் அவளிடம் திருப்தி அடைந்து எழுகிறான். அவனிடமிருந்து காட்டுயிர்கள் விலகிச்செல்கின்றன. தேவதாசியுடன் உருக் நகருக்கு வருகிறான் என்கிடு. அங்கு அந்த மாது அவனை சிங்காரிக்கிறாள். அவன் கில்காமெஷ் போலவே இருக்கிறான்.

Story image

அனு - இஷ்தார் கோவிலில் இருக்கும் கில்காமேஷுடன் என்கிடு போரிடுகிறான். நிலம் அதிர, கோவிலின் சுவர்கள் நடுங்க, இருவரும் கட்டிப்புரண்டு சண்டை செய்கின்றனர். வெற்றி - தோல்வி இன்றி நடக்கும் இந்தச் சண்டையின் இறுதியில், அவர்கள் நண்பர்களாகின்றனர். பிரிக்கமுடியாத இரு சகோதரர்கள்.

ஒரு புனித வனத்தில் இருக்கும் செவ்வகில் மரத்தினை (தேவதாரு வகை - Cedar) வெட்ட இருவரும் புறப்படுகின்றனர். தெய்வங்கள் உறையும் இவ்வனத்தினை, சிங்க முகம் கொண்ட ஹுவாவா (அகாடிய வழக்கில் ஹுபாபா) காத்து வருகிறான். ஆதவக் கடவுள் ஷமாஷை, கில்காமெஷ் துதிக்கிறான். ஹுபாபா குழப்பமடைகிறான். அவனால் சரியாகக் காணமுடியவில்லை. அவனது வசம் இருக்கும் ஏழு உன்னதங்களையும் எடுத்துவிட்டு, என்கிடுவின் தூண்டுதலால் கில்காமெஷ் அவனது தலையைத் துண்டாடுகிறான். இதனால், என்லில் தெய்வம் கோபமடைந்து, ஹுவாவாவின் ஏழு உன்னதங்களையும், என்கிடுவிடமிருந்தும் கில்காமெஷிடமிருந்தும் மீண்டும் எடுத்துவிடுகிறார். இருந்தபோதிலும், வெற்றியுடன் கில்காமெஷும் என்கிடுவும் ஊருக்குத் திரும்புகின்றனர்.

Story image

ஒருகாலத்தில், ஆணவம் நிரம்பிய கொடுங்கோலனாகக் கருதப்பட்ட கில்காமெஷ், இப்போது மக்கள் அன்புக்குப் பாத்திரமாகிறான். கில்காமெஷ் ஊர்வலம் வருகிறான். ஊர் விழாக்கோலம் பூணுகிறது. கில்காமெஷ் தனது சிறந்த ஆடை ஆபரணங்களுடன் வலம் வருகிறான். கில்காமெஷிடம் இஷ்டர் தேவி மயங்கி, அவனை தன்னிடம் அழைக்கிறாள். ஆனால் கில்காமெஷ், அவளை மோசமாகத் திட்டி மறுத்துவிடுகிறான். அவள் இதற்கு முன்னர் அவளது காதலருக்குச் செய்த தீமைகளை நினைவுபடுத்துகிறான் கில்காமெஷ்.

''பறவையினை காதலித்துப் புணர்ந்த நீ, பின் அதன் சிறகினை ஒடித்தாய்; குதிரையினைப் புணர்ந்தபின் அதனைக் கசையினால் அடித்தாய்; இடையனை மணந்து, பின் அவனை ஓநாயாக மாற்றினாய். அவனது சக இடையர்களும் நாய்களும் விரட்டிடச் செய்தாய்'' எனக் கூறுகிறான்.

ஆத்திரமடைந்த இஷ்டர், தனது தந்தையான அனுவிடம் சென்று, சொர்க்கத்தின் காளை மாட்டினை கில்காமெஷ் மீது ஏவிடக் கூறுகிறாள். அனு, இஷ்டரை எச்சரிக்கிறார். சொர்க்கத்தின் காளை வெளிவந்தால், ஏழு ஆண்டுகள் பஞ்சம் ஏற்படும் என்கிறார். ஆனால் இஷ்டர், அந்தப் பஞ்சத்திலிருந்து தமது மக்களைக் காப்பாற்றிட தம்மிடம் வேண்டிய அளவு உணவு இருப்பதைக் கூறி கட்டாயப்படுத்துகிறாள். இந்தச் சொர்க்கத்தின் காளையை கில்காமெஷும் என்கிடுவும் இணைந்து வதைத்து, அதன் இதயத்தை எடுத்து சூரியக் கடவுளுக்கு அளிக்கின்றனர். இதுகுறித்தும், கில்காமெஷின் வெற்றி குறித்தும் புலம்புகிறாள் இஷ்டர்.

என்கிடு, தானும் இஷ்டருக்கு இதே பதிலைத்தான் அளித்திருப்பேன் எனக் கூறுவதுடன், காளையின் வலது தொடையைக் கிழித்து இஷ்டரிடம் தூக்கி எறிகிறான். இஷ்டர், கோவில் தேவதாசிகளைக் கொண்டு சுவர்க்க காளைக்காக துக்க ஊர்வலம் நடத்துகிறாள். அவள் துக்க ஊர்வலம் நடத்தும் நேரத்தில், வெற்றி ஊர்வலம் நடத்துகிறான் கில்காமெஷ். "வீர புருஷர்களில் வீர புருஷன் எங்கள் கில்காமெஷ்; மனிதருள் மாபெரும் வீரன் எங்கள் கில்காமெஷ்" எனும் கோஷங்களுடன், உருக் நகர மக்களைக் கொண்டு ஊர்வலம் நடத்துகிறான் கில்காமெஷ்.

இந்நிலையில், என்கிடு நோய்வாய்ப்படுகிறான். ஹுவாவாவையும் சுவர்க்கக் காளையையும் கொன்றதற்குக் கிடைத்த தெய்வத் தண்டனை என அறிகிறான். தன் ஆதி நிலையை அழித்த வேடனையும் தேவதாசியையும் நொந்துகொள்கிறான். அவன் கனவில் சூரியக் கடவுள் தோன்றி அவனை சமாதானப்படுத்துகிறார். அவன் காட்டினை விட்டு வந்ததால் கில்காமெஷ் கிடைத்ததை நினைவூட்டுகிறார். என்கிடு ஆறுதல் அடைகிறான். பன்னிரண்டு தினங்கள் நோய்வாய்ப்பட்டு மரணிக்கிறான்.

Story image

என்கிடுவின் மரணம் கில்காமெஷை வதைக்கிறது. அத்துடன், தனது வாழ்க்கையும் மரணத்தில் முடிய வேண்டியது என்பதை கில்காமெஷ் உணர்கிறான். மரணமின்மையை அடையப் பிரயாணம் செய்கிறான். சந்திரக் கடவுளை தொழுகிறான். தெய்வங்கள் அனுப்பும் கனவுகள் வழி நடத்த, அவன் செல்கிறான். சிங்கங்கள் சூழ்ந்த பாதைகள், கானகங்கள் எனச் சென்று, இறுதியில் சூரிய அஸ்தமனமாகும் மலை ஒன்றினை அடைகிறான். அங்கு தேள் - மனிதர் காவல் காக்கும் பாதை ஒன்று திறந்துவிடப்படுகிறது. இருண்ட அப்பாதை வழியே அவன் செல்கிறான். அங்கு ஒரு அதிசய மரத்தினைக் காண்கிறான். கண்ணைப் பறிக்கும் அம்மரத்தினையும் அவன் தாண்டிச் செல்கிறான். இறுதியில், கடற்கரைக்கு வருகிறான்.

அங்கு சிதூரி எனும் பெண் அவனை வரவேற்று, அவனது தேடலின் பொருளின்மையைக் கூறுகிறாள் -  

கில்காமேஷ், நீ எதனைத் தேடி இத்தனை தூரம் வந்தாய்? அந்த வாழ்க்கை உனக்குக் கிடைக்கப்போவதில்லை. கடவுளர் மனிதனைப் படைத்தபோது, மரணத்தை அவனுக்குரியதாக விதித்தனர். அமர வாழ்க்கையைத் தம்முடையதாக்கினர். ஓ கில்காமெஷ், உன் வயிறு புடைக்கச் சாப்பிடு. இரவும் பகலும் ஆனந்தமாக இரு. நடனமாடு, விளையாடு. உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் தூய்மையாக இருக்கட்டும். உன் தலை சுத்தமாக இருப்பதாக. நீ சுகந்தங்களுடன் நீராடு. உன் கையினைப் பற்றும் குழந்தையின் ஸ்பரிசத்தில், இன்பத்தை உணரு. உன் மனைவி உன் இதயத்தில் ஆனந்திக்கட்டும்.

ஆனால், கில்காமெஷ் உறுதியாக இருக்கிறான்.

இறுதியாக, யுர்ஷனாபி எனும் ஓடக்காரனின் ஓடத்தில், மரணக்கடலைக் கடக்கிறான் கில்காமெஷ். மரணமற்ற வாழ்வு வாழும் யுத்னபிஷ்டிம் என்பவனை அடைகிறான் கில்காமெஷ். யுத்னபிஷ்டிம், வாழ்வின் நிலையாமையை கில்காமெஷுக்கு உபதேசிக்கிறான் -  

ஒரு வீடு என்றென்றும் இருக்கும் என்றா நாம் கட்டுகிறோம்? நிலமதில் வெறுப்பு என்றென்றும் நிலவுகிறதா? ஆறு என்றென்றும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகின்றதா? தொல் பழங்கால முதல் நித்தியம் என்பது இல்லவே இல்லை.

பதிலுக்கு, யுத்னபிஷ்டிமே மரணமில்லா வாழ்க்கை வாழ்வதை சுட்டிக்காட்டுகிறான் கில்காமெஷ்.

Story image

யுத்னபிஷ்டிம், தான் அந்நிலை எய்திய கதையைக் கூறுகிறான். யுத்னபிஷ்டிம், ஏழுநாள் - ஊழியின்போது அனைத்து உயிர்களையும் ஜோடியாக, ஒரு பெரும் கப்பலைச் செய்து அதில் வைத்துக் காப்பாற்றியவன். ஆகவே, தெய்வங்கள் அவனையும் அவன் மனைவியையும் தம்முள் ஒருவராக ஏற்றுக்கொண்டன. இது தமக்கு ஏற்படாது என உணருகிறான் கில்காமெஷ். அவனுக்காகப் பரிதாபப்படும் யுத்னபிஷ்டிம், ஏழு நாட்கள் தூங்காமல் இருக்கக் கூறுகிறான். ஆனால், கில்காமெஷ் தூங்கிவிடுகிறான். பின்னர், நீருக்கடியில் இருக்கும் ஒரு செடியினைப் பறித்துவரச் சொல்கிறான் யுத்னபிஷ்டிம்.

'அது முட்செடி. அதன் முட்கள் உன் கையைக் கிழிக்கலாம். ஆனாலும், அதனை நீ கொண்டுவர வேண்டும்' என்கிறான். கால்களில் எடையைக் கட்டிக்கொண்டு, நீருக்கு வெகு ஆழத்தில் சென்று அந்தச் செடியைக் காண்கிறான் கில்காமெஷ். அதே நேரத்தில், ஒரு பாம்பு வந்து அந்தச் செடியை விழுங்கிவிடுகிறது. பாம்புகள் தோலுரித்து வாழ்வது இதனால்தான். தோல்வியடைந்து திரும்புகிறான் கில்காமெஷ். மரணமில்லா வாழ்க்கையைத் தேடுவதில் தனக்கு ஏற்பட்ட தோல்வியைக் கசப்புடன் ஜீரணித்து, உருக் திரும்புகிறான். மற்றொரு கதையில், அவன் அச்செடியை எடுத்துக்கொண்டு ஊர் திரும்புகிறான். வழியில், அவன் குளிக்கப் போகும்போது, அச்செடியின் மணத்தால் கவரப்பட்ட பாம்பு அதனை எடுத்துவிடுகிறது. அழுகை பீறிட தோல்வியை ஏற்றுக்கொண்டு ஊர் திரும்பிய கில்காமெஷ், மீதி வாழ்நாட்களை அங்கேயே கழிக்கிறான். கில்காமெஷ் காவியம், மேற்கின் அதி பழமையான முழு காவியமாகக் கருதப்படுகிறது.

பல தொன்மப் படிமங்களை உள்ளடக்கிய காவியம் அது. மரணத்தை வெல்ல முயலும் மானுடத்தின் தேடல் அது. நிரந்தர வாழ்வின் ரகசியத்தைத் தேடும் பயணம். இறப்பிலிருந்து விடுதலை. மரணம் குறித்த அச்சம். தனது மரணத்தை அமைதியாக ஏற்கிறான் என்கிடு. ஆனால், என்கிடுவின் மரணத்தின் சாட்சியாக விளங்கும் கில்காமெஷுக்கு, அதுவே தூண்டுதலாக அமைகிறது. அதுவே அவனது மரணத்தைக் காட்டுகிறது.

மரணமின்மையை இக உலகில் இச்சிப்பது, மேற்கில் மட்டுமல்ல; இந்திய மரபிலும் காணப்படுகிறது. இந்தியப் புராணங்களில் எல்லாக் கதைகளிலும் அசுரர்கள் கடும் தவம் இருந்து பிரம்மாவிடம் கேட்கும் வரம் பெரும்பாலும் மரணமற்ற வாழ்வாக இருப்பதைக் காணலாம். பிரம்மா அது முடியாது என கூறிய, பிறகே அந்த அரக்கர்கள் அடுத்தக்கட்ட வரமாகத் தமக்கு மரணம் எப்படி ஏற்பட வேண்டும் என ஒரு வரத்தைப் பெறுவார்கள்.

மேற்குலகின் நவீன புனைகதைகளிலும்கூட கில்காமெஷின் தேடல் தொடரத்தான் செய்கிறது. ஸ்டார்வார்ஸ் திரைப்படத்தில், ஜெடை வீரனான (JEDI) அனாகின், ஸ்கைவாக்கர் டார்த் வாடராக மாற அவனைத் தூண்டுவது மரணத்தின் அச்சமே. ஹாரி பாட்டரில் வரும் லார்ட் வோல்டர்மார்ட் அஞ்சுவது மரணத்தையே.

Story image

பிரபு டிராகுலாவின் மாற்றம், அவன் மனைவியின் மரணத்தைத் தொடர்ந்து நிகழ்வதாகப் பிரபல புனைவுகளில் காட்டப்படுகிறது. டிராகுலா, அடிப்படையில் ஏசுவினை எதிராகப் பிரதிபலிக்கிறான் எனலாம். கிறிஸ்தவ நம்பிக்கையில், ஏசுவின் ரத்தம் நித்திய ஜீவனை அளிக்கிறது. டிராகுலா ஒருவரின் ரத்தத்தை அருந்தி மரணமற்ற ஜீவனை அடைகிறான். கிறிஸ்தவ இறையியலில், மனிதன் இறைவனின் சாயல். ஒருவிதத்தில், பிரதிபலிப்பு – அதுவே அவன் ஆத்மா எனலாம். டிராகுலா பிரதிபலிப்பு அற்றவன். கண்ணாடிகளில் அவனைக் காண முடியாது. டிராகுலாவினால் ரத்தம் உறிஞ்சப்பட்டு மரிக்கும் நபரும் ரத்தக் காட்டேறியாக மரணமற்ற நிலையை அடைவான்/ள். ஆனால், பிரதிபலிப்பு இல்லாமல் – அதாவது, ஆத்மா இல்லாத மரணமில்லா வாழ்வு – undead.

Story image

ஏசு அளிக்கும் மரணமின்மை, நேரடிப் பொருள் கொள்ள முடியாதது. அகப்பொருள் மட்டுமே அதற்குப் பொருந்தும். இங்கு ஏசுவின் ரத்தம் ஒரு குறியீடாகிவிடுகிறது. ஆனால், நேரடிப் பொருள் கொண்ட மரணமின்மையைத் தேடுபவருக்கோ அது டிராகுலாவாக முடிகிறது. அகவயப்படுத்தும் இந்தியப் புராண இயக்கத்தை, இறையியல் தேவையாக மேற்கத்திய ஆழ்மனது தனது புனைவு-தளங்களிலாவது உணர்ந்திருப்பதன் வெளிப்பாடு இது. ஆக, மரணமின்மைக்கு ரத்தம் அருந்தும் சடங்கு, மேற்குலகில் இரு துருவங்களிலும் இயங்குவதாகும். எதுவாயினும், மேற்கின் பிரக்ஞையில் மரணத்தை வெல்லும் மகா இச்சையின் தூண்டுதலின் வேர்களை கில்காமெஷிலிருந்து காணமுடியும்.

அதுபோலவே, மூன்றில் ஒரு பாகம் இறைத்தன்மையும், ஒரு பாகம் மானுடத்தன்மையும் கொண்ட மேய்ப்பனாகவும் அரசனாகவும் திகழும் புராண நாயகனையும், ஏசு குறித்த புராண அம்சங்களில் நாம் காணலாம். ஏசுவின் உடலில் இருந்து ரத்தமும் நீரும் வெளிவந்தது என கிறிஸ்தவ விவிலியம் கூறுகிறது. (யோவான் 19:34). கிரேக்க புராண மரபில், கடவுளரின் உடலில் ஓடுவது நீரே ஆகும். ஏசு, மனிதகுமாரன் - தேவகுமாரன் ஆகிய இரண்டும் என்பதால், அவரது உடலிலிருந்து இவை இரண்டும் வெளிவந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த விவிலிய கதையாடலின் வேர்கள், கிறிஸ்தவ சகாப்தத்துக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாபிலோனில் இருந்தன.

Story image

என்கிடு வந்தபின் ஏன் கில்காமெஷ் மாறிவிட்டான்? ஷெல்டன் கோப் (Sheldon B Kopp), மனநல சிகிச்சையாளர். மனநல சிகிச்சையை ஒரு புண்ணிய யாத்திரையாகக் காண்பவர். தன்னுடைய புகழ்பெற்ற 'If you meet Buddha in the road, kill him’' எனும் நூலில், ஒரு அத்தியாயத்தை கில்காமெஷ் இதிகாசத்துக்கு ஒதுக்குகிறார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் (அவனுள்) அவனது என்கிடு இருக்கிறான் - அவனது மறுபாதி அவனது மறைந்திருக்கும் சுயம். எந்த அளவுக்கு ஒரு மனிதன் இந்த மறைவான சுயத்திடமிருந்து தன்னை விலக்கி வைத்துள்ளானோ, அந்த அளவு அவனது வாழ்க்கை வெறுமையுடையதாகவும், பிடிப்பும் இல்லாத கேலிக்கூத்தாகவும் அமைந்திருக்கும். என்னிடம் வரும் அத்தகைய ஒரு யாத்திரீகனுக்கு, (அதாவது மனநல சிகிச்சை பெற வருபவனுக்கு) நான் அருரு தேவியைப் போலவே அவனது மறைவான சுயத்தினை அறிமுகப்படுத்த முயல்கிறேன்". ('If you meet Buddha...' பக். 22).

இந்த இரட்டை நிலைதான் கில்காமெஷ் கதைக்கு நடுவோட்டமாக இருக்கிறது. ஆனால், சுயத்தின் இரு கூறுகளின் பாலியல் தன்மையைக் குறித்து இக்கதையாடல் அறியாமையுடனேயே இருப்பதாகக் கருதுகிறார் கோப். பெண் அதில் ஒரு மயக்கும் பொருளாக மட்டுமே அமைந்துள்ளாள். (அதே, பக். 23).

இதற்குக் காரணம் இருக்கிறது.

Story image

கில்காமெஷின் காவியம் எழுந்த காலகட்டத்தில், பெண் தெய்வ வழிபாடு மெல்ல சரிய ஆரம்பித்திருந்தது. பொது வாழ்வில், பெண்கள் நிலையும் அவர்கள் வகித்த அதிகாரமும், சுமேரிய பண்பாட்டில் மெல்ல கீழே செல்லத் தொடங்கியிருந்தன. ஆண்-மைய ஒழுக்க விதிகள், இஷ்டர் தேவியின் கோவில் பூசாரிணிகளைத் தாசிகளாக, ஒழுக்கமில்லாத மயக்கும் பெண்களாகக் காண ஆரம்பித்திருந்தன. கில்காமெஷ், அவனை இச்சிக்கும் இஷ்டரை வெறுத்து ஒதுக்குவது, இந்தச் சமூக இயக்கத்தின் பிரதிபலிப்பு எனக் கருத இடமிருக்கிறது. கிராமங்கள் சார்ந்த நகரங்களிலிருந்து, நகரங்களை அதிகார மையமாகக் கொண்ட ராஜ்ஜியங்களுக்கு சமுதாய வாழ்க்கை நகர்ந்தபோது ஏற்பட்ட மாற்றமாக இதைக் கருத முடியுமா? (Tikva Frymer-Kensky, 'The Marginalization of the Goddess' in Gilgamesh: A Reader, Ed. John Maier, Bolchazy-Carducci, 1997, pp. 95-105). எனில், இது மேற்கத்தியப் பண்பாட்டில் ஒரு முக்கியப் பண்பாட்டு மாற்றம். இம்மாற்றம், அதற்கே உரிய உளவியல் விளைவுகளை இன்றுவரை கொண்டிருக்கிறது.

ஷெல்டன் காப்பின் பார்வையில், கில்காமெஷின் முக்கியத்துவம் என்ன?

மிகப் பல சமயங்களில் நான் என் இறப்பு நிகழ்ந்துவருவதை -நாம் அனைவருமே இந்த மரணப்பிணியால் பீடிக்கப்பட்டவர்கள் என்பதனை மறந்துவிடுகிறேன். எப்போதும் நினைவில் இருக்க வேண்டிய இவ்விஷயம், என் நினைவில் இல்லாத தருணங்களில்தான் நான் ஆட்டம் போடுகிறேன். எனக்கு வாழ்வின் மடத்தன்மை, தவறவிட்ட சாத்தியங்கள், சாகஸத்தனங்களின் நினைவுகள், தவறவிட்ட பூரணத்துவத்தின் நினைவிசை அலைகள், ...ஏன் தோழர்களின் அன்பு - இவை அனைத்துமே மரணமிழைக்கும் இகழ்வின் முன் தோற்றுவிடுவதை, கில்காமெஷின் யாத்திரை எனக்கு நினைவுபடுத்துகிறது. கில்காமெஷ் - என் சகோதரன் - அவனது புண்ணிய யாத்திரை என்னை மறக்கவிடுவதில்லை’’. (பக். 43).

மேற்கத்திய புகழ்பெற்ற புராணவியலாளர் ஜோசப் காம்பெல். காம்பெல்லை பொறுத்தவரையில், கில்காமெஷ் கதையில் வரும் சிதூரியின் அறிவுரையில், யூத-விவிலியத்தின் (கிறிஸ்தவர்களின் 'பழைய' ஏற்பாடு) பிரசங்கிப் பாடல்களில் பின்னாளில் எதிரொலிப்பதைக் காட்டுகிறார்.

இரவும் பகலும் ஆனந்தமாக இரு. நடனமாடு விளையாடு. உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் தூய்மையாக இருக்கட்டும். உன் தலை சுத்தமாக இருப்பாதாக. நீ சுகந்தங்களுடன் நீராடு. உன் கையினைப் பற்றும் குழந்தையின் ஸ்பரிசத்தில் இன்பத்தினை உணரு. உன் மனைவி உன் இதயத்தில் ஆனந்திக்கட்டும்.

இது கில்காமெஷில் சிதூரி.

நீ போய் உன் ஆகாரத்தை சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சை ரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி. உன் வஸ்திரங்கள் எப்போதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாகவும் இருப்பதாக. நீ நேசிக்கிற மனைவியோடே, நிலையில்லாத இந்த ஜீவவாழ்க்கையை அனுபவி.

இது விவிலியம் (பிரசங்கி 9:7-9).

அடுத்த வரியை வாசிக்கையில், இதற்கு கில்காமெஷ் காவியத்துடன் இருக்கும் தொடர்பு தெள்ளத்தெளிவாகும்.  ‘’நீ போகிற பாதாளத்திலே, செய்கையும் வித்தையும் ஞானமும் இல்லையே’’. (பிரசங்கி 9:10).

Story image

மேலும், கில்காமெஷ் காவியத்தில் பாம்பு மரணமின்மையின் ரகசியத்தை விழுங்குவதை காம்பெல் குறிப்பிட்டுக் கூறுகிறார் -

எனவேதான், சர்ப்ப சக்தி அழிவின்மையின் சக்தியாக ஒருகாலத்தில் மானுடத்திடம் இருந்தது. அது எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு, கீழ்நிலை அடைந்துவிட்ட பெண் தெய்வத்தின் சக்தியாக ஆகிவிட்டது. இழந்த சொர்க்கத்தில் கபடற்ற அச்சமாக’’. (Occidental Mythology - பக். 92).

பாரதப் புராண - இதிகாச மரபுகளில், கில்காமெஷின் தொன்மத்துடன் ஒற்றுமைகொண்ட சித்திரங்களைக் காணமுடியும்.

Story image

அங்க நாட்டு அரசன், தன் நாட்டு பஞ்சம் தீர்த்திட ரிஷ்யசிருங்கரை வரவழைக்கிறான். பெண்களையே அறியாத அவரை, பெண்கள் மூலம் தன் நாட்டுக்கு வரவழைத்து, அவருக்கு தனது மகளான சாந்தாவை திருமணம் செய்துவைக்கிறான். ரிஷ்யசிருங்கர், மானின் கொம்புகளுடன் பிறந்தவர் என்கிறது கதை. என்கிடுவுடனான ஒற்றுமை தெளிவானது.

Story image

நாகர்களின் தாய் கத்ருவும் கருடனின் தாய் வினதையும், காசியப முனிவரின் மனைவிகள். ஒரு பந்தயத்தில், மோசடியாக கத்ரு வென்று, வினதையை தன் அடிமையாக்கிவிடுகிறாள். அடிமைத்தனத்திலிருந்து விடுபட, இந்திரலோகத்திலிருந்து அமுதத்தைக் கருடன் கொண்டுவந்து, நாகர்களுக்கும் கத்ருவுக்கும் அளிக்க வேண்டும். கருடனின் அமுதத்தைத் தேடும் பயணத்தில், கில்காமெஷ் போலவே அவனும் பெருமரம் ஒன்றைக் காண்கிறான். இம்மரத்தின் பெயர் ஸுபத்ரம். நூறு யோசனை நீளமுள்ள கிளைகள் கொண்டது. அதில், கருடனை உருவாக்க யாகம் செய்த ரிஷிகளே தொங்கிக்கொண்டு தவம் செய்வதைக் கருடன் காண்கிறான். கருடன், இந்திரனுடன் வென்று அமுதத்தை எடுத்துவந்தாலும், ஒரு ஒப்பந்தம் செய்கிறான். அமுதத்தை அளித்தாலும், நாகர்கள் பருகுவதற்கு முன்னர் அதை மீண்டும் கொண்டு வந்து இந்திரனிடம் கொடுத்துவிடுவான். அதேபோல, அமுதத்தைக் கொண்டு சென்று தர்ப்பைப் புல்லில் வைத்துவிட்டு, நாகர்களை நீராடி வரும்படிச் சொல்லி, அவர்கள் வருவதற்குள் அமுதத்தை மீண்டும் இந்திரனிடம் கொடுத்துவிடுகிறான். தர்ப்பைப் புல்லில் சிந்திய அமுதத் துளிகளை நாகர்கள் உண்ண முயன்றனர். புல் அவர்கள் நாவை கிழித்துவிட்டதாம். அதனால், பாம்புகள் இரட்டை நாக்குகளுடன் இருக்கின்றனவாம். பாம்புகள் அமுதத்தைத் திருடி உண்ணும் சித்திரம், பின்னர் அமுதம் கிடைக்க அசுரரும் தேவரும் இணைந்து பாற்கடலைக் கடந்த நிகழ்விலும் சொல்லப்படுகிறது.

கில்காமெஷ் கதைக்கு இந்தியத் தொடர்பு இருக்க வாய்ப்பு உண்டா?

கில்காமெஷ் கதை, சுமேரிய பண்பாட்டுச் சின்னங்களில் காட்டப்பட்டுள்ளது. இரு பெரும் விலங்குகளுடன் அவன் பொருதுவது முக்கியமான காட்சியாக உள்ளது. இருபுறமும் இரு பெரும் விலங்குகள் – சிங்கங்கள் - கில்காமெஷ் கைகளால் பிடித்து உலுக்கப்படுகின்றன. சுமேரிய உருளை இலச்சினைகளில் இருந்து, பண்டைய எகிப்து வரைக்குமே பரவியிருந்த ஒரு முக்கியக் கதை காட்சிப்படுத்துதல் இது. இக்காட்சி, ஹரப்பா பண்பாட்டு இலச்சினைகளிலும் காணப்படுகின்றன. சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ஹரப்பா இலச்சினைகளில் ஒரு பெண் தெய்வம் எனக் கருதப்படத்தக்க வடிவம், கில்காமெஷின் இடத்தில் காட்டப்படுகிறது.

Story image
Story image

சிந்து - சரஸ்வதி பண்பாட்டு இலச்சினைகளில் ஒன்றில், சிங்கங்களுடன் கில்காமெஷ் போரிடுவது போன்ற தோற்றத்தில் இருக்கும் பெண் என கருதத்தக்க வடிவம், இரு விலங்குகளுடன் போரிடுகிறது. அதன் மேலே ஒரு ஒற்றைச் சக்கரம் உள்ளது. அதன் கீழே ஒரு யானை இருக்கிறது. மகாபாரதத்தில், கருடன் அமிர்தத்தை அடையச் செல்லும் இடத்தில் ஒரு சக்கரத்தின் மீது அமிர்தம் வைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறான். அங்கு, இருபெரும் பூத நாகங்களுடன் போராடுகிறான். போகும் வழியில், ஒரு யானையையும் ஆமையையும் கொல்கிறான்.

கில்காமெஷ் கதையில், அவன் தோழன் என்கிடு, பாதாள லோகத்துக்குச் செல்லும்போது, ஒரு பறவை மனிதனால் வழிநடத்தப்படுகிறான். இந்தப் பறவை மனிதன், பின்னால் கில்காமெஷால் கொல்லப்படுகிறான். ஆனால், கில்காமெஷை பறவை மனிதனாகக் காட்டும் எவ்விதக் கதையும் அங்கே இல்லை. இருந்தபோதிலும், சுமேரிய இலச்சினை ஒன்றில், சிங்கங்களுடன் போராடும்போது, கில்காமெஷ் இறக்கைகளுடன் காட்டப்படுகிறான். ஆக, கருடன் அமிர்தத்தைக் கவர்ந்த தொன்மத்துக்கும், கில்காமெஷ் தொன்மத்துக்கு ஒரு ஆதித் தொடர்பு இருப்பதை இது காட்டுகிறதா? நாகர் -கருடன், தேவர் – அசுரர், அமுதத்தைத் தேடும் பயணத்தில் இருக்கும் இரட்டை நிலை, சாவின்மையைத் திருடும் பாம்புகள், இவை கில்காமெஷிலிருந்தோ அல்லது அதற்கும் முந்தைய ஒரு பொதுவான உலகளாவிய தொன்ம வழக்கிலிருந்தோ பெறப்பட்டிருக்கலாம்.

சிந்து - சரஸ்வதி இலச்சினையில் காட்டப்படும் வடிவம் பெண் என எடுத்துக்கொண்டால், மற்றொரு சுவாரசியமான சாத்தியத்தைக் கொஞ்சம் சிந்திக்கலாம். மகாபாரதம், பெண் வடிவக் கருடன் குறித்துப் பேசுகிறது. அக்னியின் மனைவியான ஸ்வாஹா, கருடனின் பெண் வடிவை எடுத்து, அக்னியின் விந்தை குகையில் வைக்கிறாள். அதுவே, பின்னர் முருகன் ஆகிறது. குகையில் வளரும் கனல். முருகன் அழிவற்ற ஞானம். ஒருவிதத்தில், கருடன் செய்ததை கருடி நேர் எதிராகச் செய்கிறாள். பூமியிலிருந்து ஞானத்தை குகைக்குள் கொண்டு வைக்கிறாள். கருடன், அழிவின்மையை வானுலகிலிருந்து பூமிக்குக் கொண்டுவந்தான் எனச் சுட்டிக்காட்டுகிறார், இந்தியவியலாளர் டானியலி ஃபெல்லர். சுவர்க்கத்தில், அமுதக் கலசம் பெரும் நாகபூதங்களால் பாதுகாக்கப்பட்டது போலவே, இங்கே பெரும் பார்வையே விஷம் கக்கும் நாகங்கள் குகையில் வளரும் கனலை பாதுகாக்கின்றனவாம். (Danielle Feller, Sanskrit Epics, Motilal Banarsidass Publ., 2004, பக். 122-3).

Story image

ஹரப்பா இலச்சினையில் மேலே இருக்கும் சக்கரம் ஆறு ஆரங்கள் கொண்டதாகவும், ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதையும் கவனிக்கலாம். கருடி, அக்னியின் விந்தை ஆறு முறையாகக் கொணர்ந்தாள் என்கிறது இதிகாசம். இந்த இலச்சினையின் பின்னால் காட்டப்பட்டிருக்கும் காட்சி, ஒரு எருமையை வேலால் வதை செய்யும் தெய்வம். மகாபாரதத்தில், மகாசேனனான கந்தனே மகிஷனை வேலால் வதம் செய்கிறான் எனில், இந்த சிந்து - சரஸ்வதி இலச்சினை, ஒரு பக்கம் கந்தனின் பிறப்பையும், அதில் கருடியின் பங்கையும் காட்டுகிறதா?

கருடன், அழிவின்மையை அளிக்கும் அறிவுத் தேடலையும்; கந்தன், அழிவின்மையை அளிக்கும் அறிவையும் காட்டும் குறியீடுகளாகப் பரிணமிக்கும் முன்னர், ஏதோ ஒரு தொன்மக் கர்ப்பத்தில் ஒன்றாக இருந்திருக்கக்கூடும் என நினைக்கவைக்கும் ஒற்றுமைகள் இவை. 

கில்காமெஷ் கதையை ஒரு அக-முழுமை நோக்கிய பயணத்தின் கையேடாக, ஷெல்டான் காப் முன் வைத்ததை பார்த்தோம். கருடனின் அமுதம் நோக்கிய பயணத்தையும், அப்படிப்பட்ட முழுமை நோக்கிய ஒரு அகப்பயணமாகக் காணமுடியுமா? அதற்கான சாத்தியங்கள் தெளிவாகவே காட்டப்பட்டுள்ளன. காத்ரு என்பது சோமபானத்தை வைக்கும் சடங்குப் பாத்திரத்தின் பெயருடன் தொடர்புடையது என்பதும், வினதை என்பது மெய்யறிவின் முன் ஏற்படும் பணிவு என்பதும் புலனாகிறது. கருடன் என்பதன் வேர்ச்சொல், ‘க்ரி’ என்பதிலிருந்து பெறப்படுகிறது. வாக்குடன் தொடர்புடையது இது. மந்திர வார்த்தைகள் மூலம் உயர் பிரக்ஞை உலகங்களுக்குச் செல்லும் ஆற்றலே கருடன் எனக் கருத முடியும். (George M. Williams, Handbook of Hindu Mythology, OUP, 2008, p.138). கருடனின் இந்த ஆதித்தன்மை மறக்கப்படவில்லை.    

திபெத்திய பௌத்த மரபில், ட்ஸோக்சென் (Dzogchen) என்பது ஆதியோகமாகக் கருதப்படுகிறது. ஆதி, பூரணத்துவ நிலையை அடையும் வழி அது எனக் கருதப்படுகிறது. பேரமைதி என்பதே ட்ஸோக்சென் என்கிறார் தலாய் லாமா. இந்த மரபில் வந்தவர் பத்தொன்பதாம் நூற்றாண்டு யோகி ஞானி ஷப்கர் (Shabkar Tsokdruk Rangdrol, 1781-1851). இவர் இயற்றிய நூல் ‘கருடனின் வான் செலவு’ (The Flight of Garuda). ஏன் இந்தத் தலைப்பு? இங்கு கருடன், ட்ஸோக்சென் மரபில் செல்லும் யோகியைக் குறிக்கிறான். பௌத்த தாந்திரீக மரபில், கருடனின் இரு சிறகுகளின் இயக்கமும் இரட்டைநிலையின் ஒருமைப்பாட்டை குறிக்கிறது. ஆண் – பெண், சொல் - பொருள் என பல நிலைகளில், இரட்டைகளைத் தன்வயமாக்கி, அதி உயர காற்றுச்சுழல்களில் தன்னியல்பாகப் பறக்கும் கருடனைப் போன்றவன் யோகி. (Keith Dowman, The Flight of Garuda, Wisdom Publications, 2014, பக். 52-3).

Story image

ஷெல்டன் காப், கில்காமெஷுக்கு இருபதாம் நூற்றாண்டில் செய்ததைப் போன்ற ஒரு பார்வையை, பத்தொன்பதாம் நூற்றாண்டில் திபெத்திய பௌத்த யோக - தந்திர மார்க்கம் முன்வைத்திருக்கிறது.

மானுடத்தின் புராண தொன்ம மரபுகள் உலகளாவியவை. இன்று இறுகி மதங்களாக நம்பிக்கைகளாக முன்வைக்கப்படும் மதங்களின் அடிப்படையில், அவற்றை இணைக்கும் நரம்பியக்கமாக தொன்ம நீரோட்டங்கள் இருக்கின்றன. கருடனும், கந்தனும், கில்காமெஷும், என்கிடுவும், யஹீவா தேவனும், ஏசுவும், அல்லாவும் இந்தப் பூமியின் குழந்தைகள். மண்ணில் வேர் கொண்ட மானுட அகத்தின் கனிகள். எவ்வளவுதான் இறையியல் தெய்வங்களை விண்ணகத் தந்தையராக்கினாலும், இறுதியில் அவர்கள் அரவெனப் புவியின் ஆற்றலாக இயங்கும் தேவியின் குழந்தைகள். மானுடத்தில், பிரக்ஞையாக மடல் விரிக்கும் அவள் மட்டுமே சாஸ்வதம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.