ஒழுங்காக நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உடையவர் சார்ல்ஸ் மீட். பின்னர், திருவிதாங்கூரில் கிறிஸ்தவச் சபையின் வரலாற்றை மதப் பணியாளர் அகுர் (C.M.Agur) எழுதும்போது, மீட் அவர்களின் நாட்குறிப்புகள் சிறந்த தரவுகளை அளிக்கின்றன. நாகர்கோவிலில் அன்றைய பிரதான சாலை அருகே, ‘மேற்கே இஸ்லாமிய மசூதியும் கிழக்கே அஞ்ஞானிகள் வழிபடும் இந்துக் கோவிலும்’ உள்ளதை அவர் காண்கிறார். அவ்விடத்தில் மையமாக ‘உயிருள்ள தேவனுக்கு’ ஒரு சர்ச் எழுப்பப்பட வேண்டுமென அவர் கருதுகிறார். இரு பக்கங்களிலும் உள்ள இந்து கோவிலையும் முஸ்லிம் மசூதியையும் சிறுமையாக்கி, கர்த்தரின் சர்ச் மென்மேலும் ஓங்கி வளர கர்த்தரின் அருளை கோரி எழுதுகிறார்.(1) நீதிபதியாகத் தமக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தினார், சார்ல்ஸ் மீட். சிறையிலிருந்த கைதிகளைப் பயன்படுத்தி, நாகராஜர் கோவிலுக்கான தெப்பக்குளத்தின் கரைகளைக் காத்த பெரும் கற்களைக் கொண்டுவரச் செய்தார். அவற்றைப் பயன்படுத்தி தேவாலயத்தை உருவாக்கினார். தம் திருப்பணிக்கு நாகராஜர் கோவில் யானையையே பயன்படுத்திக்கொண்டார் மீட். (Agur, p.708), 1819-ல் தொடங்கிய வேலை 1843-ல்தான் இனிதே முடிந்தது. இன்று, மீட் எழுப்பிய தேவாலயம், உள்ளூர் கிறிஸ்தவப் பெருமக்களால் ‘கல் கோவில்’ என அழைக்கப்படுகிறது.(2)