திமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

12. தனித்திரு விழித்திரு பசித்திரு

எழுத்தாளர்கள், ஓவியர்கள் கவனித்தது பற்றி ஆரம்ப அத்தியாயங்களில் பார்த்தோம். அதன்பின்

News image
Updated On :28 ஜூலை 2015, 12:32 pm

செ.சு.மலரடியான்

Story image


எழுத்தாளர்கள், ஓவியர்கள் கவனித்தது பற்றி ஆரம்ப அத்தியாயங்களில் பார்த்தோம். அதன்பின் வெவ்வேறு அத்தியாயங்களில் மருத்துவர்கள், எட்வெர்ட் ஜென்னர், ஐசெக் நியூட்டன் ஆகியோர் கவனித்ததைப் பார்த்தோம். மேலும் புத்த பிட்சு ஒருவரிடம் கற்பதற்கு ஒருவன் சென்ற போது, அவனிடம் 'பி அவேர்', 'விழிப்புடன் இருந்து கவனி' என்று குரு  சொன்னதைப் பார்த்தோம். இவையெல்லாம் தவிர, ஒரு நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கு ஆலோசனை சொல்ல வந்த ஆலோசகர், ' ஊழியர்கள் உதிர்க்கும் வார்த்தை'களை கவனிக்கச் சொன்னதையும் கடைசியாக சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.

ஆக, கவனிக்க வேண்டும் என்பது திறன் பெறுவதில், வல்லவராவதில் மேன்மை அடைவதில் முக்கியமான பங்கு வகிக்கிறது.

கவனிக்க வேண்டும் என்பது வரை சரி. எப்படி கவனிப்பது?

கண்களை நன்கு திறந்து வைத்திருக்க வேண்டுமா?

உடன் எட்வெர்ட் ஜென்னர் போல, காதுகளையும் கூர்மைப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டுமா?

ஜே. கிருஷ்ணமூர்த்தி சொன்னதுபோல ஆராய்ந்து அலசிக் கொண்டிராமல் நடப்பதை பார்க்க கேட்க வேண்டுமா?

எப்படி கவனிப்பது?

பலரும் சாதாரணமாகப் பார்ப்பதற்கும் வல்லவர்கள் கவனிப்பதற்கும் இடையே கவனித்தலில் என்ன வேறுபாடு?

மற்றவர்கள் செய்தவற்றைப் பற்றிப் பார்த்தோம். இதை நாமே செய்து பார்த்துவிட்டால் என்ன?

கேட்பதைவிட பார்ப்பது கூடுதல் புரிதலை உண்டாக்கும். மற்றவர் செய்வதைப் பார்ப்பதைக் காட்டிலும் தானே செய்து பார்த்தால் அதை நன்றாக உணர முடியும்.

என்ன செய்யலாம்?

எளிமையான ஒன்றைச் செய்து பார்த்து ஆரம்பிக்கலாம். நம்மால் எவ்வளவு தூரம் கவனிக்க முடிகிறது என்பதைச் சோதித்துப் பார்த்துவிடுவோம்.

நீங்கள் இந்தத் தொடரின் இந்த அத்தியாயத்தைப் படித்துகொண்டிருக்கும் இந்த நேரம் எங்கே அமர்ந்திருக்கிருகிறீர்கள்? ஏதோ ஒரு அறை அல்லது ஹால் அல்லது அலுவலகம். என்ன சரிதானே?

Story image

நீங்கள் வெகுநேரமாக அங்கேதான் அமர்ந்திருக்கிறீர்கள். அல்லது அந்த இடம் உங்களுக்கு நன்கு பரிச்சியம் ஆன இடம். அல்லது நீங்கள் அடிக்கடி வந்து போகும் இருக்கும் இடம் அது. இல்லையா?

அப்படி இல்லாவிட்டால், அப்படிப்பட்ட ஒரு இடத்தை தேர்வு செய்து இந்த சோதனைக்காக  நீங்கள் அந்த அறையைப் பயன்படுத்த வேண்டும்.

உங்கள் கவனித்தல் பற்றி உங்களுக்குச் சரியாகத் தெரியவேண்டும் என்றால், சொல்லப்படும் வழிமுறைகளை மிகச்சரியாகப் பின்பற்றவேண்டும்.

சொல்லப்படும் வழிமுறைகளைப் படித்துவிட்டு, 'ஆரம்பியுங்கள்' என்று சொல்லப்படும் நேரம், இதைப் படிப்பதை நிறுத்திவிட்டு சோதனைக்குப் போய்விடுங்கள்.

சோதனை என்பது ஒரு சிறிய 'ஆக்டிவிடி'. அவ்வளவுதான். சோதனை முடிந்தபின் தொடர்ந்து படிக்கலாம். அதைச் செய்து முடிக்க அதிகபட்சம் பத்து நிமிடம்தான் ஆகும். ஒருகால் உங்கள் சூழ்நிலை காரணமாக உங்களால் அந்த பத்து நிமிட 'பிரேக்' இப்போது எடுக்க முடியாது என்றால்.. படிப்பதை இங்கேயே நிறுத்திவிட்டு,  அந்த சோதனை செய்வதற்கு நேரம் இருக்கும் போது தொடர்ந்து படியுங்கள்.

செய்து பார்ப்பதற்கு இணை எதுவுமே இல்லை. எனவே கிடைக்கும் சிறிய வாய்ப்பினைத் தவறவிடவேண்டாம்.

சோதனை

கம்பியூட்டரிலேயே எழுதக்கூடியவர் என்றாலும் இந்த சோதனைக்காக ஒரு வெள்ளைப் பேப்பர் மற்றும் பேனா எடுத்துக்கொள்ளுங்கள்.   மேலே சொல்லப்பட்ட உங்களுடைய அறை அல்லது ஹாலை விட்டு வெளியே வந்துவிடவேண்டும்.

பின்பு, உங்கள் அறையில்/ ஹாலில் இருக்கும் வெள்ளை நிறப் பொருட்களை எல்லாம் பட்டியல் இடவேண்டும்.

எழுத வேண்டியது வெள்ளை நிறைத்தில் இருக்கும் பொருட்களை மட்டும்தான். பொருட்களை எழுதுவதுடன் அவை இருக்கும் இடத்தையும் நினைவுப்படுத்திப் பார்த்து எழுதவேண்டும். 

சோதனை அவ்வளவுதான். ஆனால் சோதனையை வேகமாக முடிக்காதீர்கள். நன்கு நினைவுப்படுத்தி மிக அதிக எண்ணிக்கையிலான பொருட்களை எழுதுவதில்தான் கவனித்தலின் சூட்சமம் இருக்கிறது.

இப்போது சுற்றி முற்றிப் பார்க்காதீர்கள். படிப்பதை நிறுத்திவிட்டு எழுந்து வேறு இடத்திற்குப் போய் எழுத ஆரம்பியுங்கள். அதிகபட்சம் ஐந்து நிமிடம். நேரத்தைப் பார்த்துக்கொண்டு கிளம்பலாம்.

எழுதி முடித்த பின், பேப்பரை இரண்டாக மடிக்கவேண்டும். அதன்பின் நினைவு வந்தாலும் எதையும் எழுதக்கூடாது.

இனி நீங்கள் படிப்பதை நிறுத்திவிட்டு எழுந்து போகலாம்.

சோதனையை ஆரம்பிக்கவும்.

.

Story image

என்ன எழுதி முடித்தாயிற்றா?

இப்போது நீங்கள் எழுதியவை சரிதானா என்றும்..எழுத விட்டவை எவ்வளவு என்றும் சரி பாருங்கள்.

எழுதியவை அதிகமா? எழுதத் தவறியவை அதிகமா?

எழுதவிட்டவை எவ்வளவு என்று பார்பதற்கு சுலபமான வழி உங்களுக்குத் தெரிந்ததுதான். எந்த அறையை பற்றி எழுதியிருக்கிறீர்களோ அந்த அறையை கவனமாக சுற்றிவந்து பாரப்பது.

பட்டியலில் எழுதவிட்டுப் போயிருப்பவையும் அந்த அறையில்/ ஹாலில் இருப்பவைதான். ஆனால் எழுதப்படவில்லை. ஏன்?

நினைவுக்கு வரவில்லை என்று சொல்லுவது சுலபம். ஆனால் பலவற்றை நினைவாகப் பார்த்து வைத்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

விஷயம் என்ன தெரியுமா? பார்கிறோம் ஆனால் பார்க்கவில்லை. அதே போல பலவற்றையும் கேட்கிறோம். ஆனால் கேட்கவில்லை.

பார்ப்பது என்பது கண்களால் மட்டும் செய்யும் வேலையில்லை. அதில் மனது ஈடுபடவேண்டும். ஆமாம் புலன்கள் ஐந்து என்றாலும் அவை அனைத்தும் வெறும் கருவிகள். வாங்கி உள்ளே அனுப்பும் 'வேலையாட்கள்'.

எஜமான் மனதுதான். அவர் வாங்கிக்கொள்ள வேண்டும். அவர் பெற்றுக்கொள்ளாதது எல்லாம் விழலுக்கு இறைத்த நீர், கவிழ்த்திருக்கும் கோப்பையில் ஊற்றப்பட்ட தேநீர். மொத்தத்தில் வீண்.

ஆக, கவனித்தல் என்பது மனம் ஈடுபட்டுப் பார்த்தல், மன ஈடுபாட்டுடன் கேட்டல், மன ஈடுபாட்டுடன் தொடுதல். மொத்தத்தில் உணர்தல்.

சோதனை தந்த முடிவுகளையும் அதன் மூலம் கிடைத்த புரிதலையும் பகிரலாமே. எழுதுங்கள்

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.