அத்தியாயம் - 9
ஹவுராவில் இருந்து மதறாஸ் கிளம்பும் ரயில் கால தாமதமாகியிருந்தது. காத்திருப்பில் கால்கள் கடுக்க நின்றிருந்த ஆனி, ரயில்வண்டி வந்ததும்,


ஹவுராவில் இருந்து மதறாஸ் கிளம்பும் ரயில் கால தாமதமாகியிருந்தது. காத்திருப்பில் கால்கள் கடுக்க நின்றிருந்த ஆனி, ரயில்வண்டி வந்ததும், இருக்கையில் அமர்ந்து, தளர்ந்த கால்களை சற்றே பிடித்துவிட்டு ஆசுவாசமானாள். ஆங்கங்கே மக்கள் ப்ளாட்பாரத்தில் கும்பலாக நின்று பரபரப்பாக ஏதோ பேசுவதைக் கண்ணுற்றாள்.
ஹவுராவில் பிபின் சந்த்ரபால் என்று ஒருவர் பேசுகிறார் எனவும் அங்கு, பெருந்திரளாக மக்கள் கூடுகிறார்கள் எனவும் ஆனி அறிந்தாள். அருகில் அமர்ந்த ஆனியின் அம்மா,அலுத்துக்கொண்டாள். ‘என்ன சுதேசி? இந்த பழுப்புத்தோல் முட்டாள்கள் தங்களை ஆண்டுகொண்டுவிட முடியுமா?’ ஆனி கண்மூடி , கால்வலி குறைவதை ரசித்தாள்.
‘ஆனி, இப்போதும் கேட்கிறேன். நீ டுட்டிக்கோரின் போகத்தான் வேண்டுமா?’
‘ஆமாம் அம்மா. கவுஹாத்தியில் நீதான் பார்த்தாயே? ஆஸ்த்மா என்னை என்ன பாடு படுத்துகிறது? அதுவும் மழைக்காலம்..’
ஆனியின் அம்மா அமைதியானாள். தூத்துக்குடியில் வெயில் அடிக்கும். அதுவும் அங்கிருந்து இந்தப் பைத்தியக்காரப்பெண் ஆராய்ச்சி என, பத்தமடைப் பாய், குழந்தைகளுக்கான சொப்புச்சாமான் தயாரிப்பு முறைகள், தூத்துக்குடி முத்துக்குளித்தல் பற்றி ஆவணப்படுத்துதல் என்ற வீண் முயற்சிக்கு திருநெல்வேலி சரியானது. முக்கியமாக..பாதுகாப்பானது. இங்கே வங்கம் எரிகிறது.

‘கவனி ஆனி..’ அம்மா மெதுவாக அவள் காதில் சொன்னாள். ‘அங்கு காதல் அது இது என்று மாட்டிக்கொள்ளாதே. உனக்கு நமது குடும்பத்திற்கு ஏற்றபடி ஆபீஸர்களை இந்தியாவிலும், அரசு வேலையில் இங்கிலாந்திலுமாக உன் தந்தை தேடிக்கொண்டிருக்கிறார். நமது குடும்ப மானம் முக்கியமானது. கன்னிங்க்ஹாம் குடும்பம் என்றால்..’
‘அம்மா , ஆரம்பிக்காதே. எனக்கு என்னைக் காத்துக்கொள்ளத் தெரியும்’
மெட்ராஸில் டாக்டர் ராபின்ஸன் வரவேற்று, திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து தூத்துக்குடி இரு நாட்கள் பயணித்துச் சென்று, விக்டோரியா மகளிர் பள்ளியின் தலைமை ஆசிரியையுடன் தங்கினாள். முத்து பற்றிய விவரங்களை மெல்ல மெல்ல சேகரிக்கத் தொடங்கினாள்.
தூத்துக்குடியில் ஒரு ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டு நேரத்தில்தான் ஆண்டர்ஸன் அவளை சர்ச்சில் பார்த்தான்.
இரவு பதினோரு மணிக்கும் லிண்டாவின் அறையில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அன்று அந்த வீட்டிலேயே தங்கிவிட்டிருந்த முத்து மெல்ல எட்டிப் பார்த்தான். மாடசாமி உறங்கிவிட்டான். படிகளில் சப்தம் செய்யாது மேலே ஏறினான். லிண்டா யாருடனோ பேசிக்கொண்டிருக்கும் ஒலி கேட்டது.
கதவருகே இருந்த சன்னல் அரைகுறையாகத் திறந்திருந்தது. நெம்பி எட்டிப்பார்த்தான். காதில் ஒரு ஹெட்போனை மாட்டிக்கொண்டு மைக்கில், எதிரே இருந்த கம்ப்யூட்டரில் பேசிக்கொண்டிருந்தாள் லிண்டா.
‘ஆம். நீ வரலாம். இருவர் சென்னையில், ஒருத்தன் திருநெல்வேலியில், என்னுடன்’
‘டி.என்.ஏ எடுப்பது யூ.கே போல, இந்தியாவில் அத்தனை சிரமமில்லை அது போகட்டும். லீகல் கவுன்ஸெல் என்ன சொல்கிறது?’
முத்து மெல்ல கீழிறங்கினான். இது இடியாப்பச் சிக்கல். இவளைக் கேட்காமல் விடக்கூடாது. நாளை முதல்வேலையாக இவளிடம்...
அவன் ஒருமணியளவில் உறங்கத் தொடங்கியபோது, லிண்டா லாப்டாப்பை மூடிக்கொண்டிருந்தாள். அதே நேரம், மான்செஸ்டரில் இருந்து அபுதாபிக்குச் செல்லும் எதிஹாட் விமானத்தில் நெடிய மனிதர், இயல்பான புன்னகையோடு தனது இருக்கையில் அமர்ந்தார். அபுதாபியிலிருந்து அடுத்த விமானத்தில் அவர் சென்னை செல்வதற்கான போர்டிங் பாஸ்- அவரது கோட் பாக்கெட்டில் இருந்தது.
‘லிண்டா, உனது உண்மையான வேலை என்ன?’
லிண்டா, கேள்வி கேட்ட முத்துக்குமாரை உற்றுப்பார்த்தாள். அவன் முகத்தில் கோபம் தெரியவில்லை. கேள்வியின் தீவிரம் முகத்தில் இறுகியிருந்தது.காலைக்கதிரவனின் செங்கீற்று ஜன்னலில் தயங்கி தேங்கி, திடீர் விருந்தினர்போல் உள்ளே மெல்ல நீண்டது.
‘ஓகே’ நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள் ‘நீ காமெர்ஸ் படித்திருக்கிறாய். ஜெனடிக் இஞ்சினீயரிங் மூலம் புற்றுநோய்க்கான தீர்வு குறித்து விளக்கிச் சொன்னால் ஓடிவிடுவாய். ஆனால் 6 மில்லியன் பவுண்டு செலவில் ஒரு கம்பெனி ஆய்வு செய்யப்போகிறது என்றும், அது வெற்றியானால், இரு வருடங்களில் பத்து மில்லியன் நிகர லாபம் சம்பாதிக்கும் என்றும் சொன்னால் புரியும் என நினைக்கிறேன்’
முத்துக்குமார் வியப்பை வெளிக்காட்டவில்லை. எத்தனை கோடி ரூபாய்?
‘உனது அந்நியச் செலவாணி கணக்கை இப்போது பார்க்காதே. இந்தக் கம்பெனி என்னுடையது.’
‘அஹ்?’ என்று ஒரு சத்தம் மட்டும் அவனிடமிருந்து வெளிப்பட்டது.
‘இன்னும் 6 மில்லியன் எனக்குக் கிடைக்கவில்லை. அது கிடைக்கும் வாய்ப்பு பெருவாரியாக இருக்கிறது. வெஞ்ச்சர் காபிடலிஸ்ட் கம்பெனி ஒன்று 4 மில்லியன் தர ஒத்துக்கொண்டிருக்கிறது. ஒரு மில்லியன் என் கணவர் தரப்போகிறார். மிச்சம் இருக்கும் ஒரு மில்லியன்? அது என் பங்கு, எப்படித் தரப்போகிறேன்? அதற்குத்தான் இந்த பயணம்.’
‘புரியலை, லிண்டா’
‘போகப்போகப் புரியும். இப்போதைக்கு, எனது வருகை, தீர்க்கப்படாத ஒரு கொலையைப் பற்றியது என்றும், அதற்கும் எனக்கும், ஏதோவொரு முத்து ஃபேமிலிக்கும் தொடர்பு உண்டு என்றும் மட்டும் அறிந்துகொள். அது நீயாகவும் இருக்கலாம். இரவெல்லாம் நான் தொடர்பு கொள்வது, மற்ற முத்துக்குமார் சாத்தியங்களுடன். அனாவசியமாக என் அறையின் சன்னலில் வந்து எட்டிப் பார்க்காதே’
அதிர்ந்து போனான் அவன். ‘எ..எப்படித் தெரியும்?’
‘என் கணனித் திரையில் பிம்பம் தெரிந்தது. மாடசாமி உறங்கிவிட்டான். எனவே அது நீயாகத்தான் இருக்கவேண்டும் என ஊகித்தேன். தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டேன். ஆனால், நீ என்னை நம்பவேண்டும். அவ்வளவுதான் சொல்வேன்.’
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...