அத்தியாயம் - 11
வில்லியம் ஃபுட்வொர்த் கன்னிங்ஹாம், அஸ்ஸாமிற்கு வருமுன் பர்மாவில் அரசு மருத்துவராகப் பணியாற்றினார். ஆனி தவிர அவருக்கு ஒரு பெண்ணும் ஒரு பையனும் இருந்தார்கள். காலனியாதிக்கத்தில் பணியாற்றிய அதிகாரிகள்


வில்லியம் ஃபுட்வொர்த் கன்னிங்ஹாம், அஸ்ஸாமிற்கு வருமுன் பர்மாவில் அரசு மருத்துவராகப் பணியாற்றினார். ஆனி தவிர அவருக்கு ஒரு பெண்ணும் ஒரு பையனும் இருந்தார்கள். காலனியாதிக்கத்தில் பணியாற்றிய அதிகாரிகள் சுரண்டிச் சேர்த்த செல்வம் அவரை அசர வைத்திருந்தது..
ஆனிக்கு நல்ல கணவனாக அதிகாரிகள் பட்டியலில் தேடினார். ப்ரொபஸர்கள் ஒரு வித்தியாசமான ரகமாக இருந்தார்கள். கல்கத்தாவில் ஆர்க்கியாலஜி, வரைபடத் துறை - கார்ட்டோகிராஃபி என்ற அலைந்தாலும், நல்ல வருவாய் உள்ள துறைகளில் தேடியதில் கிடைத்த ஒரு நல்ல வரன், ஆனியைப் பார்க்குமுன்னே தென்னாப்பிரிக்கா சென்று விட்டான்.
சே- என்று அவர் தளர்ந்திருந்தபோது, ஆண்டர்ஸனின் டெலிகிராம் வந்தது.
ஆண்டர்ஸன் அடிக்கடி விக்டோரியா மகளிர் பள்ளியின் பின்னிருந்த வீடுகளுக்கு வந்து போவது, தலைமையாசிரியைக்கு சந்தேகத்தோடு கவலையும் வந்தது. கன்னிங்க்ஹாம், என்னை நம்பி பெண்ணை அனுப்பியிருக்கிறார்.. ஆயினும், ஆண்டர்ஸன் வருவதால், அங்கு பயமில்லை என்ற காரணத்திற்காக அனுமதித்தார். ஆண்டர்ஸனது நடத்தையில் சில மாற்றங்களை அவர் கண்டார். ஆனிக்கு நல்லகாலம் வருகிறது, இது பற்றி, கன்னிங்க்ஹாமுக்கு எழுதவேண்டுமென எண்ணிக்கொண்டார்.
ஆனி, மெல்ல மெல்ல, பள்ளியில் படிக்கும் பெண்களோடு நட்பு கொண்டாள். அவளது இயல்பான, உண்மையான பேச்சு அவர்களைக் கவர்ந்தது. முத்து எடுப்பது பற்றியும், அதனை தரம் பிரிப்பது பற்றியும், பரதவர் பெண்கள் மனமுவந்து தங்கள் வீட்டில் கேட்ட செய்திகளை அவளிடம் பகிர்ந்து, அவள் நட்பைப் பெற முயன்றனர். ஆனிக்கு அந்த, வெகுளியான, உண்மையான நட்பு மிகப் பிடித்திருந்தது. அப்பெண்களின் துணையோடு, முத்துக்குளிக்கும் ஆண்களிடம் பேசி பல செய்திகளைப் புரிந்துகொண்டாள். முக்கியமாக , இங்கு முத்துக்குளிப்பது, தென் சீனக்கடலில் முத்து எடுப்பது போலல்ல. இங்கு ஆபத்து அதிகம். அதுபோல, மிக விலையுயர்ந்த முத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பும் அதிகம். ஆனால், உற்பத்தி குறைவு, போன்ற செய்திகள் அவள் ஆய்வுக்கு உதவின.
ஆண்டர்ஸன் மீது அவளுக்கு இயல்பான நட்பு தோன்றியது. பள்ளியில் பெண்கள் அவளைச் சீண்டும்போது ‘காதல் இன்னும் வரவில்லை. கடவுள் அதனை ராயல் போஸ்ட்டில் அனுப்பியிருக்கிறார் போலிருக்கிறது’ என்பாள்.
அடுத்ததாக, பத்தமடைக்கு சென்று பாய் நெய்வதை அறியத் திட்டமிட்டாள். ஆண்டர்ஸன், துணை வர, அவள் இரு நாள் பயணத்தின்பின் பத்தமடை சென்றடைந்தாள். நெல்லையில் நடேசபிள்ளை என்பவரைச் சந்திக்குமாறு ஸ்கூல் ப்ரின்ஸிபல் கடிதம் கொடுத்து அனுப்ப, அவர், பத்தமடையில் முத்தாயி என்ற பெண்ணை அறிமுகப்படுத்தி வைத்தார். முத்தாயி அவளிடம் மிக நட்பானாள். முத்தாயியின் கை நேர்த்தியும், அவள் வரையும் வேலைப்பாடும் கண்டு பிரமித்துப் போனாள் ஆனி. தத்ரூபமாக போர்ட்ரெய்ட்டுகளை அப்பெண் சுலபமாக வரைவதையும், வண்ணங்களின் கலவை குறித்தான அவளது அதீத அறிவும் ஆனிக்கு பெரும் வியப்பை வரவழைத்தன. ‘பாரீஸில், நேப்பிள்ஸில்கூட இத்தனை அருமையான போர்ட்ரெய்ட் வரையும் ஓவியரில்லை,’ என்று ஆண்டர்ஸனிடம் அடித்துச் சொன்னாள்.
‘என்னிடம் சில முத்துக்கள் இருக்கின்ற்ன. அவற்றை ஒரு நெக்லேஸாகச் செய்து தருவாயா., முத்தாயி?’
‘தொரசானியம்மா, ’
‘ஆ.. கால் மி ஆனி.’
‘ஆனிம்மா, இந்த முத்து மட்டும் வச்சுப் பண்ணினா எடுப்பா இருக்காது. ஒங்க கழுத்துக்கு, இன்னும் கல்லு வச்சு செய்யணும்.’
கற்களின் வடிவங்களை அவள் வரைந்து கொடுக்க, அதனை ஆனிக்கு முன்பே ஆண்டர்ஸன் வாங்கிக்கொண்டான். ‘மெட்ராஸிலிருந்து, ஹைதராபாத்திலிருந்து வருவிக்கிறேன்’ என்றான். ‘இந்த நெக்லேஸ், எனது திருமண நிச்சயதார்த்த பரிசாக இருக்கட்டும்’ என்று எண்ணிக் கொண்டான். அரை மனதாக, முத்தாயி அவனிடம் தனக்கு வேண்டிய கற்களின் நிறம், அவற்றின் இயல்பு பற்றிச் சொல்ல, ஆண்டர்ஸனின் காரியதரிசி எழுதியெடுத்தார். ஏனோ அவளுக்கு ஆண்டர்ஸன் மீது ஈர்ப்பில்லை.
மதுரையில் சில கற்கள் கிடைத்தன. அன்றைய மெட்ராஸ் பல கற்களை அவனுக்கு அள்ளித்தந்தன. அதில் பலவற்றை முத்தாயி விலக்கிவிட்டு, சில கற்களை மட்டும் கோர்த்து, இரு வாரங்களில் நெக்லேஸ் ஒன்று செய்தாள்.
நெக்லேஸை, தனக்கு முன் வந்து ஆண்டர்ஸன் வாங்கிச் சென்றதை அறிந்த ஆனி திகைத்தாள். கோபத்தில் முகம் சிவக்க, ஏதோ சொல்ல வந்தவள், முத்தாயியின் முகத்தில் தெரிந்த பயத்தைக் கண்டு மவுனமாக தலையசைத்தாள். பாவம், நம்மால் ஒரு பெண் அவதிப்படவேண்டாம்.
ஆண்டர்ஸன் நெக்லேஸைத் தன் கோட்டுப் பாக்கெட்டில் வைத்திருந்தான். தகுந்த சமயத்தில் ஆனியிடம் கொடுக்கவேண்டும்.
தொடரும்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...