மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அத்தியாயம் 28

நடேசபிள்ளை எழுதுகிறார், ஆனி தென்னாப்பிரிக்காவிலிருந்து தொடர்பு கொண்டாள்.

News image
Updated On :20 டிசம்பர் 2016, 6:56 am

சுதாகர் கஸ்தூரி

நடேசபிள்ளை எழுதுகிறார் ‘ஆனி தென்னாப்பிரிக்காவிலிருந்து தொடர்பு கொண்டாள். கணிசமான ஒரு தொகையை முத்துராசா குடும்பத்திற்குத் தருமாறு கேட்டுக்கொண்டாள். தென்னாப்பிரிக்க வணிகர்கள் வ.உ.சிக்கு நன்கொடை திரட்டுவது அறிந்த அவள், வ.உசியைக் காணச் சென்ற வேதியப்பிள்ளையிடம், முத்துராசாவுக்கு ஒரு தொகையைக் கொடுத்துவர வேண்டுகிறாள். முத்துராசாவிடம் தொடர்புகொள்வது கடினம் என்பதால், நடேசபிள்ளையிடம் அத்தொகையைக் கொடுக்கிறார் வேதியப்பிள்ளை. இதுவரை ஒழுங்காகச் சென்ற பரிவர்த்தனை, அதன்பின் திடீரென ஆவணக் குறிப்பின்றி நின்றுவிடுகிறது.

இருவருடங்கள் கழித்து கட்டிடம் பற்றி வரிகள் வருகின்றன. கையில் கருந்தேள் பச்சை குத்தியிருக்கும் ஒருவரைப் பற்றி சில வரிகள். அவர் கிடைக்காமலே போயிவிட, நடேசபிள்ளை, மீதமிருக்கும் தொகையை வங்கியில் வைத்து, மாதாமாதம் ஒரு தொகையை வட்டியாக எடுத்து யாருக்கோ அனுப்புகிறார். முத்துராசாவின் மகன் இறந்து போன நிகழ்வையும், சவ அடக்கமென்பது யாரும் முகம் காணாவண்ணம் நிகழ்ந்ததையும் குறிக்கிறார். அதன்பின் மீண்டும் வட்டி. என்ன தொடர்பு இதற்கு?”

மாடசாமிப் பிள்ளை தன் நெற்றியை வருடியபடி பேசினார் ‘லிண்டா, நீங்க சொன்னது சரியான நிகழ்வுதான். தன் சந்ததியினருக்கு ஆபத்து வரும் என அறிந்த முத்துராசா, பையனை, திருநெல்வேலி அருகே வல்லநாடு பக்கமாக ஒரு கிராமத்தில் வளர்த்து வந்தார். எங்கப்பாவை மாதாமாதம் ஊர் எல்லையில் லாந்தர் விளக்கும் கையுமாக நின்று, பார்த்துப் பேசிவிட்டு ராவோடு ராவாகத் திரும்பிச் செல்வாராம். அவரை வளர்ப்பதற்காக நடேசபிள்ளை ஒரு தொகையை வல்லநாடு குடும்பத்திற்கு அனுப்பியிருக்கவேண்டும். அதன்பின் அவருக்கே அத்தொகையை வீட்டுச் செலவுக்கும், சத்திரச் செலவுக்குமாக பயன்படுத்தக் கொடுத்திருக்க வேண்டும்.’

‘அந்த கருந்தேள் பச்சை… யார் அது?’ என்றாள் லிண்டா

‘அவர்… அவர் மாடசாமிப்பிள்ளை. பெரும் விடுதலை வீர்ர். வ.உ.சி, வாஞ்சிநாதன் வ.வே.சு ஐயர், நீலகண்ட ப்ரம்மச்சாரி போன்றோருடன் மிக நெருங்கிய தொடர்புடையவர். அவரைப் பிடிக்கத்தான் ஆண்டர்சன் அலைந்தான்.’

‘ஆன்டர்சன்?! இந்த கதை எப்படி உங்களுக்குத் தெரியும்?’ என்றான் முத்துக்குமார் திகைப்புடன்.

‘நடேசபிள்ளை டைரியை நானும் வாசிச்சேன்’ என்றார் மாடசாமிப் பிள்ளை ‘அந்த பெரும் வீர்ரின் நினைவாகத்தான் எனக்கு மாடசாமின்னே பெயர் வைச்சாங்க’

‘சரி, என்னமோ ஆறேழு கோடின்னியே? என்னது அது?’ என்றார் பெரியப்பா.

‘ஆனியின் சொத்து உங்களுக்கு வரவேண்டுமென்றால், நீங்கள் முத்துராசாவின் வாரிசுகள் என்று நிரூபணமாகவேண்டும். அதற்கு, அவரது மரபணுக்கள் கிடைக்கவேண்டும்.’

‘அங். இன்னும் நூறு வருசம் கழிச்சு கேளு’ என்றான் முத்துகுமார்.

‘அவர் உடலை வெளியே எடுத்து சில மாதிரிகள் எடுத்து உங்களுடைய மரபணுக்களுடன் பொருத்திப் பார்த்தால் தெரிந்துவிடும். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக புதைந்த உடல்... கிடைத்தாலும் அதிக மாதிரிகள் கிடைக்க வாய்ப்பில்லை’

‘ஏனில்லை? 1960களின் இறுதியில் இறந்த செ.குவாராவின் உடலை 90களில் தோண்டி எடுக்கவில்லையா? நினைத்தால் செய்து பார்க்கலாம்’

‘யார் அனுமதி கொடுப்பது? போலிஸ்ல போகவேண்டியிருக்கும். அரசு அனுமதியின்றி எதையும் தோண்ட முடியாது’

‘அதெல்லாம் நான் பாத்துக்கறேன்’ என்றார் மாடசாமி ‘நீங்க எல்லாரும் சரின்னு சொன்னா நாம ரெண்டு நாள்ல தோண்டிறலாம்’

‘இது தேவையா?’ என்றான் முத்துகுமார். ‘மண்ணில் அமைதியாக இருக்கும் நம் மூதாதையர்களை உலுக்கணுமா?’

‘சும்மா இருடே. ஏழு கோடி கொடுத்திருக்காரு. அந்த காலத்துலயே நமக்கு நல்லது செய்ய நினைச்ச தாத்தா, இப்ப இது நல்ல காரியம்னு தெரிஞ்சா, தோண்டிக்கடேன்னுருவாரு’ என்றார் பெரியப்பா.

‘ஆறு கோடின்னா, தலைக்கு ஒரு கோடி வரும்லா? ஏ, இவளே, அது எல்லாருக்குமா அல்லது, அவர் நேரடி சந்ததின்னு போறவாளுக்கு மட்டுமா?’ கேள்வியில் மாடசாமி குறித்து பொறாமையுடன் பெரியம்மா கேட்டாள்.

‘யார் நேரடி சந்ததியோ அவருக்கு பெரும்பான்மை. மத்தவங்களுக்கு அவர் நினைச்சா கொடுக்கலாம்’

‘தாத்தா உடலையெல்லாம் எடுக்கவேண்டாம். முத்துகுமாரு சொல்றது சரியாத்தான் படுது?’ அந்தர்பல்டி அடித்தார் பெரியப்பா. எனக்கு கிடைக்காத பணம், இன்னொருத்தனுக்கு கிடைக்கறதா?

மற்றவர்களும் அதே கருத்தைச் சொல்ல மாடசாமி பேசத்தொடங்கினார் ‘நீங்க நினைக்கற மாரி எல்லாத்தையும்  முழுங்க நினைக்கற அற்பப் பய இல்ல நானு. உங்க எல்லாருக்கும் சில லட்சம் கொடுக்கறேன். நம்ம தாத்தா உடலை வெளிய எடுக்க அனுமதி தாங்க. லாயரை இங்கிட்டு வரச்சொல்லியிருக்கன். அவரு ஒரு வேண்டுகோள் டைப் அடிச்சு எடுத்துட்டு வருவாரு. அதுல கையெழுத்து போட்டுறுங்க போதும் மத்ததெல்லாம் நா பாத்துக்கறேன்’

சூழ்நிலை கலகலப்பாக, மாடசாமியை அவர்கள் சூழ்ந்து கொண்டனர் ‘டே, மாடா, ஒன் பெரியம்மா நானாக்கும், தெரிஞ்சிக்க. பாத்து செய்யி. அவ்வளவுதான் சொல்லுவன்’

‘டே, நீ நம்மாள்லா?’ என்றார் பெரியப்பா பாசமாக மாடசாமி தோளில் கைபோட்டவாறே.

முத்துகுமார் தனியே நின்றான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.