தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அத்தியாயம் - 5

போலீஸ் அதிகாரி கேட்க, வரிசையில் நின்றிருந்த அவன், மெதுவாக ,அமைதியாகச் சொன்னான் ‘சிவகாசி

News image
Updated On :5 ஜூலை 2016, 10:16 am

சுதாகர் கஸ்தூரி

11 ஆகஸ்ட் 1906, திருநெல்வேலி

‘என்ன காரணத்தால போலீஸ்ல சேரனும்ங்கறே?’

போலீஸ் அதிகாரி கேட்க, வரிசையில் நின்றிருந்த அவன், மெதுவாக ,அமைதியாகச் சொன்னான் ‘சிவகாசி சண்டை மாதிரி. இனிமே ஒன்னு நடக்கக்கூடாது. அதுக்குத்தான்’

‘அது நடந்து ரொம்ப வருசமாச்சே? நீ போலீஸ்ல இருந்தா மட்டும்?’ அதிகாரி விஷமத்தனமாகச் சிரித்தார். ‘என்ன கிழிச்சுருவே?’

‘கொன்னுருவேன் எல்லாத்தயும். சவம் சண்டை போடாதுல்லா, சாமி?’

நடேசபிள்ளையின் டைரியில் ‘இன்று கண்ட சுவாரஸ்யமான சம்பாஷணை’ என்று இருந்த வரிகளை முத்துக்குமார் வாசித்தான். மணிப்ரவாளமும், வட்டாரத்தமிழுமாய், புது மொழியில் நடேசபிள்ளை எழுதியிருந்தார். ‘அந்த இளைஞனின் சிறிய கூர்மையான விழிகளில் தெரிந்தது குரூரமா, கண்டிப்பா  தெரியவில்லை. சிவகாசி கொடூரத்தில் அடிபட்டவனோ என்று சங்கை பண்ணிக்கொண்டே, அவனை விசாரித்தேன். முத்துராசா என்று பெயர் சொன்னான். எனக்கு மிகவும் இஷ்டம் உண்டாயிற்று போலீஸில் சேர்த்துக்கொள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீமான் சுப்ரமணியபிள்ளையவர்களிடம் சிபாரிசு செய்தேன்..’ டைரியில் முத்துராசா பற்றி அடிக்கடி வருவதை முத்துக்குமார் கவனிக்கலானான்.

மூன்றாவது நாள், காலையில் லிண்டாவுக்குக் காத்திருக்கையில், மாடசாமி, டம்ளரில் காப்பியோடு வந்து அவனெதிரில் அமர்ந்தார். ‘அண்ணன் சொன்னாரேன்னுதான் இவங்களை வீட்டுல தங்கிக்கிடச் சொன்னேன். எனக்கு வேற ஒண்ணும் தெரியாது கேட்டியளா?’

‘உங்க கொள்ளுத் தாத்தா டைரியப் படிச்சீங்களா?’

‘படிச்சேன். சில விசயத்த அவர் மனசுல ஒண்ணும், டைரில ஒண்ணுமா எழுதியிருக்காப்ல. அரசாங்க பயம். கொஞ்சம் அடக்கித்தான் வாசிச்சிருக்காரு. சில இடங்கள்ல புதிரா எழுதிப்போயிருக்காரு.’

‘முத்துராசாவை ரொம்ப அவருக்குப் பிடிச்சுப் போச்சு போல’ என்றான் முத்துக்குமார் சிரித்தபடி.

‘ஆம்மா…!தம்பிக்கை மீண்டான் கிராமத்துக்குப் பக்கம் , சுதேசிகள் மீட்டிங்கில் கலவரம் வந்துடாம இருக்க அங்க போன, முத்துராசாவுக்கு கால் ஒடிஞ்சு போச்சு. போலீஸ்லேர்ந்து வெளிய வந்து, தற்காப்பு, போர்க்கலைகளைப் படிப்பிக்கும் வாத்தியாராக அவர் இருந்திருக்கிறாரு. இது வ.உ.சி வழக்கு, திருநெல்வேலி எழுச்சிக்கு ஒரு வருசம் முந்தி நடந்திருக்கு’ என்றார் மாடசாமி.

ஆமோதித்தவாறு, வரிகளை வாசித்துக்கொண்டே வந்த முத்துக்குமார், சட்டென அமைதியானான்.

‘முத்துராசா, இந்நாளைக்கெல்லாம் ஸ்வதேசிகளைப்போல சம்பாஷணை செய்வதும், யார் யாரையோ சந்தித்துப்பேசுவதும்..’ வரிகள் தெளிவாக இல்லாத நிலையில் முத்து சிரமித்தான். முத்து ராசா சுதேசியாகி இருக்கிறாரா?

Story image

‘இல்ல’ என்றார் மாடசாமி. ‘திருநெல்வேலி எழுச்சியில், சுதேசிகளை இரவோடு இரவாக ஆஷ் துரை கொடூரமாக அடக்கியதையும், பலர் இறந்ததையும் கேள்விப்பட்டு முத்துராசா வெறுத்துப் போனார். ஆங்கிலேயர் மீது ஒரு கோபம் கிளம்ப அது ஒரு காரணம்’

‘திருநெல்வேலி கலவரம்.. எழுச்சி ..அது அவ்வளவு பெருசா?’

‘இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றுல ஒரு முக்கியமான கட்டம் திருநெல்வேலி எழுச்சி. சுதேசி என்றால் ஆங்கிலேயரிடம் சுதந்திரம் கொடு என்று கெஞ்சுதல், மன்றாடுதல் என்று இருந்த நிலையை திலகர், லாலா லஜ்பதி ராய் போன்றோர் மாற்றினர் . வ.உ.சி, சுப்ரமணிய சிவா போன்றோர் தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதியில் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பியதோடு, ஆங்கில அரசை நேராக புரட்சியில் எதிர்கொண்டனர். மதுரா மில் ஊழியர் போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வ.உ.சி பங்குகொண்டதில், ஆஷ் அதிருப்தியடைந்திருந்தார்.

வ.உ.சி , சுப்ரமணிய சிவா, பத்மனாப அய்யங்கார் என்ற மூன்றுபேருக்கு எதிராக அநியாயமாக ஆங்கில அரசு வழக்குப் பதிவு செய்ததும், பொது மக்கள் பொங்கி எழுந்தார்கள். 12 மார்ச் 1908ல, ஜாதி , மத, செல்வாக்கு, சமூக பேதம் இன்றி திருநெல்வேலி எழுச்சி எனப்படும் போராட்டத்தில் வக்கீல்கள்,ஜட்கா ஓட்டுநர்கள், நாவிதர்கள் என அனைத்து தட்டு மக்களும் போராட்டத்தில் இறங்கினர்.. தூத்துக்குடியும், திருநெல்வேலியும் கிளர்ந்து எழுந்த வேகம், வெகுவிரைவில் இந்தியாவெங்கும் பரவ வாய்ப்பு இருப்பதை ஆஷ் மற்றும் கலெக்டர் விஞ்ச் புரிந்து கொண்டனர். அந்த இயக்கம் வளரவிடாமல், அதிகார மற்றும் காவல் படை பலம் கொண்டு அடக்கி ஒடுக்கினர். திருநெல்வேலியில் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஆஷ், தூத்துக்குடியில் ஆட்களை அடித்து நொறுக்கியதை, பாராட்டி தூத்துக்குடி விக்டோரியா பள்ளியின் தலைமை ஆசிரியை ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார். அன்று மட்டும் கலவரம் படர்ந்து பரவியிருந்தால் 1857 விடுதலை இயக்கம் மீண்டும் உயிர்பெற்றிருக்கும்”

‘அடேங்கப்பா’ என்றான் முத்து வியந்து. உள்ளூற ஒர் வெட்கமும் பரவியது. இதெல்லாம் தெரியாம வளர்ந்திருக்கேனே? காந்தி நேருன்னு மட்டும்தான படிச்சோம்?

‘அன்று திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் நடந்த கொடூரங்களை கொள்ளுத்தாத்தா தன்னால் முடிந்த அளவு ஆவணப்படுத்தியிருக்கிறார். நடேசபிள்ளையின் பதிவுகள் எனறு மற்றொரு டைரி இருந்திருக்கிறது. இப்போ காணலை’

‘மாடசாமி, இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?’

‘அப்பா சொல்லியிருக்கிறார். பெரியப்பா குடும்பத்தில் சிலர் சிலோன் போனதும் எங்களுக்குள்  தொடர்பு விட்டுப்போயிருந்தது. இலங்கை இனக்கலவரத்தின்போது, கனடா போனவர்களைத்தான் லிண்டா சந்தித்திருக்கிறார். பெரியப்பா குடும்பத்தினரிடம் கொள்ளுத்தாத்தாவின் டைரி இருந்தது. அவர்கள் அதை மின்நகல் எடுத்து லிண்டாவிடம் கொடுத்திருக்கிறார்கள்.’

‘மாடசாமி, இவங்க தேடிவந்த துப்பாக்கி, அது கிடைக்கும்னு நினைக்கிறீங்க?’

‘யாருக்குத் தெரியும்?” என்றார் மாடசாமி, கைகளை உயரே விரித்தவாறே. ‘தேடறது துப்பாக்கிதானா என்றே சந்தேகமா இருக்கு எனக்கு. ராத்திரி அவ ரூம்ல பேச்சுச்சத்தம் கேட்டுச்சு. எட்டிப்பாத்தேன்.. கம்ப்யூட்டர்ல யாரோடோ பேசிட்டிருக்கா. தினமும் இதான் நடக்குது’

முத்து சிந்தனையில் ஆழ்ந்தான்.. ‘இன்னிக்கு ராத்திரி கேட்டுறுவோம்’ சுவர்க்கோழிகளின் சப்தம்கூட அவனுக்கு அமானுஷ்யமாகக் கேட்டது. இந்த லிண்டாவின் தேடல் நிஜத்தில் என்ன?

-தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.