புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அத்தியாயம் - 6

உடைந்த கால் குணமடைந்தாலும், முன்புபோல் வேகமாக ஓடமுடியவில்லை. முத்துராசா, காவல்துறையிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு,

News image
Updated On :11 ஜூலை 2016, 12:38 pm

சுதாகர் கஸ்தூரி

மே , 1907 திருநெல்வேலி அருகே:

உடைந்த கால் குணமடைந்தாலும், முன்புபோல் வேகமாக ஓடமுடியவில்லை. முத்துராசா, காவல்துறையிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு, பாளையங்கோட்டைக்கு அருகே ஒரு கொட்டகை போட்டு, வீர விளையாட்டுகள் பயிற்சிப்பள்ளி தொடங்கினார். முத்து ராசாவின் வீரவிளையாட்டுப் பள்ளியில் சேரத் தூத்துக்குடி, திருநெல்வேலி தவிர காயல்பட்டணம், களியக்காவிளை வரையிலிருந்து ஆட்கள் குவிந்தனர். முத்துராசா மிகக் கவனமாகவே தனது சீடர்களைப் பொறுக்கி எடுத்தார். சிலம்பு, வாள், சுருள் வாள், கத்தி என்பதோடு சிலருக்கு துப்பாக்கி சுடவும் சொல்லிக் கொடுத்தார். கற்க வந்தவர்களில் சுதேசிப் போராளிகள் இருக்கலாம் என போலீஸ் அவர்மீது ஒரு கண் வைத்திருந்தது.

தகிக்கும் மாலையொன்றில், வீட்டின் பின்புறம் கொட்டிலில், முத்துராசா காத்திருந்தான். அந்திக் கருக்கலில், முகம் தெரியாத நிலையில், வாழை மரங்களினிடையே சலசலக்க,முத்துராசாவின் இரு சீடர்கள் முன்னும்பின்னும் வர, நடுவே மிக ஒல்லியான மனிதன் ஒருவன் வந்தான்.

‘ஜெய் மாகாளி’ என்றான் வந்தவன். தாடியும், மீசையும், நீண்டு வளர்ந்திருந்த தலைமுடியை குடுமியாகக் கட்டாமல் நின்றிருந்த அவனது கண்கள், தீவட்டி வெளிச்சத்தில் புலியின் கண்களாகப் பளபளத்தன.

‘நான்…. வந்தவன் முடிக்கவில்லை, முத்து ராசா முந்தினான்.

‘நீலகண்ட சாமி’ என்றான் மரியாதையுடன். புன்னகையுடன் நீலகண்டன் , கிணற்றின் அருகே இருந்த துணி தோய்க்கும் கல்லில் அமர்ந்துகொண்டான். ‘சுதேசி இயக்கம் பத்தி உனக்கு சிவராமைய்யர் சொல்லியிருப்பார்னு நினைக்கறேன். இப்ப முக்கியமான ஒரு கட்டத்துல இருக்கோம்’ பீடிகையுடன் தொடங்கிய நீலகண்ட ப்ரம்மச்சாரி என்ற நீலகண்டன், சுதேசி பற்றியும், வெள்ளைக்கார்ர்களை அடித்து விரட்ட வேண்டிய அவசியம் பற்றியும் அரைமணி நேரம் அவர்களிடம் உரையாற்றினான்.

Story image

‘சுதேசிக்கப்பல் ஓடறது ஆஷுக்கு பொறுக்க முடியலை. அவனை விட விஞ்ச் இருக்கானே? அவனுக்கு எரியுது’ நீலகண்டன் தாடியைத் தடவிக்கொண்டே, முத்துராசாவின் பாட்டி, உள்ளிருந்து கொண்டு வந்த அவித்த நிலக்கடலையைக் கொறித்தபடி சிந்தனை வயப்பட்டான். சேரன்மகாதேவியிலிருந்து முந்திய இரவெல்லாம் வயல்வழியே பயணித்து அவன் வந்ததெல்லாம் தன்னைப் பார்க்க மட்டுமே என்பதே முத்துராசாவுக்கு பெரும் பிரமிப்பாக இருந்தது.

‘முத்து. இந்த பரங்கிப்பயல்களை பூண்டோடு இந்த நாடு விட்டு ஓட ஓட விரட்டறதுக்கு உன்னத்தான் நம்பியிருக்கேன். நீ, நம்ம சுதேசிகளுக்கு பயிற்சி கொடுக்கணும். துப்பாக்கி, கத்தி எறிதல், வாள்.’

முத்து ராசா மவுனமானான். நம்மில் அடித்துக்கொண்டு சாகுபவர்கள் இருக்கிற வரை இவர்கள் நம்மை ஓட்டத்தான் செய்வார்கள். நீலகண்ட ப்ரம்மச்சாரி இதைப் புரிந்துகொண்டிருக்கிறானா? சிவகாசி சம்பவம் இவனுக்குத் தெரியுமா?

முத்துராசா கண்மூடினான். மூச்சு சீரற்று பெரிதானது. உள்ளே ஒலிகள் கேட்டன.

‘அய்யோ, கொல்லாதீய,நாங்க சாமி கும்பிட்டுட்டு வர்றோம்.விட்டுருய்யா’ பெண்குரல் அலற அலற..., வண்டி குடை சாய, மூன்று பேர் சரிந்தது கண்முன் நிழலாடியது.

இரு ஆண்கள், இரு பெண்கள் துடித்து அடங்க, ரத்தம் மழைபெய்து ஈரமாயிருந்த மண்ணை மேலும் சகதியாக்கியது.. குடை சாய்ந்த வண்டியிலிருந்து தூக்கியெறியப்பட்ட இரு சிறு உடல்கள் திடீர் மழையில் திளைத்திருந்த சகதியில் புரண்டு, புதரில் மறைந்து கிடந்தன.

எத்தனை நாழிகைகள் அப்படிக் கிடந்தனவோ தெரியாது. மற்றொரு வண்டிக்கட்டு அந்தப் பக்கமாக வந்தபோது, தீவட்டி வெளிச்சத்தில், இரு ஆட்கள் அச்சிறு உடல்களில் அசைவிருப்பதைக் கண்டு எடுத்தனர். முத்துராசா என்றும் முத்தாயி என்றும் பெயர் சொன்ன சிறுவனையும், சிறுமியையும் தங்களுடன் அழைத்துச் சென்றனர். அம்மாவின் பழுப்பு நிறப் புடவையை சடலத்தின்மேல் வெள்ளைத்துணி போர்த்து முன் கண்டது புகைபோல் இன்றும் நினைவில்...

சட்டென நனவுலகிற்குக் மீண்டான் முத்துராசா.

‘அய்யரே, நீங்க யோசிச்சுதான் சொல்லுதீயன்னு நினைக்கேன். இந்த துரையெல்லாம் சீக்கிரம் ஓட்டமுடியாது. நம்ம ஆட்களுக்குள்ளயே ஒத்தும இல்லையே மொதல்ல? இவன் தொட்ட தண்ணிய அவன் குடிக்க மாட்டான். இதுல எப்படி சேந்து சண்ட போடுவான் சொல்லுங்க?’

Story image

நீலகண்டன் மெல்லச் சிரித்தான். ‘இந்தக் கும்பினிகள் ஓடிட்டா, நாம சரி பண்ணிடலாம். வவேசு அய்யர்கூட என்னமோ சர்வ ஜாதி சம்மதம்னு ஒரு பாடசாலை ஆரம்பிக்கணும்னார்.’ தொலைவில் சன்னமாகக் கேட்ட ஒலியில் பதட்டமானான். ‘போலீஸ்.! முத்து, நான் கிளம்பறேன். தூத்துக்குடியில வி.ஓ.ஸி பிள்ளையின் நண்பர் மாடசாமிபிள்ளைன்னு ஒருத்தர் இருக்கார். அவரைப் போய்ப் பாரு.’

இருளில், வாழைமரங்களினூடே, வழுகும் பாம்பாய், நீலகண்டன் நழுவினான். முத்துராசாவுக்கு, சிதம்பரம்பிள்ளையைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் தாங்கொண்ணாமல் ஏனோ தோன்றியது.
 

தொடரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.