தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அத்தியாயம் - 3

‘முத்து?’ செல்போனில் குரலின் ஆங்கிலவாடையில் முத்துக்குமார் உணர்ந்துகொண்டான்.‘லிண்டா? இந்தியாவுக்கு நல்வரவு‘

News image
Updated On :21 ஜூன் 2016, 4:59 am

சுதாகர் கஸ்தூரி

‘முத்து?’ செல்போனில் குரலின் ஆங்கிலவாடையில் முத்துக்குமார் உணர்ந்துகொண்டான்.

‘லிண்டா? இந்தியாவுக்கு நல்வரவு‘

‘நன்றி. இன்று அதிகாலை வந்தேன். க்ரீன் பார்க் ஓட்டல் லாபியில் இன்னும் ஒரு மணி நேரத்தில் சந்திக்க முடியுமா? சிகப்பு வண்ண டீ ஷர்ட் அணிந்திருப்பேன்.’

அவளை அடையாளம் காண்பது சிரமமாக இருக்கவில்லை. அவளது நீள முகமும், ஆங்கிலேய மேல் நோக்கிய மூக்கும், சற்றே மூக்கை அடைத்த ஆக்ஸ்ஃபோர்டு உச்சரிப்பும், அவள் ஒரு சுத்தமான ஆங்கிலேயர் என்பதை முத்திரையிட்டுக் காட்டின.

‘எனது இளமைக்காலம்  இங்கிலாந்திலும், அமெரிக்காவிலுமாகக் கழிந்த ஒன்று. சில கோடை விடுமுறைகளில் ஐரோப்பா தவிர்த்து, வேறு இடங்களை நான்  அறிந்ததேயில்லை.’ லிண்டா மிக மிக மிருதுவான குரலில் பேசினாள். ‘எங்கள் பரம்பரையில் பலரும் ஆர்மியில் இருந்தவர்கள். அப்பா, ஆப்கானிஸ்தான், இராக் போரில் கலந்துகொண்டவர். தாத்தா. இரண்டாம் உலகப்போர். கொள்ளுத்தாத்தா முதலாம் உலகப்போர். தென்னாப்பிரிக்கா, ப்ரான்ஸ் அதன்பின் இங்கிலாந்தில் மீண்டும் வந்து சேர்ந்தார். மிகவும் கட்டுப்பெட்டியான, குடும்ப கவுரவங்களை மதிக்கும் பழைய குடும்பங்களில் ஒன்று எங்கள் குடும்பம். இன்றும் குடும்பவிதிகளை மீறி திருமணம் முடியாது.’

‘லிண்டா. இதற்கும் இந்த துப்பாக்கிக்கும் என்ன தொடர்பு? உங்கள் குடும்ப சொத்து என்பதால் தேடுகிறீர்களோ?:’

‘அது சொத்தா, இல்லை ஒரு கறையா என்பதை முதலில் தீர்மானிக்கவேண்டும். அதற்குத்தான் நான் பத்து வருடங்களாகத் தேடிவருகிறேன்:’

‘புரியவில்லை‘

‘ஓகே. காலம் வரும்போது சொல்கிறேன். ‘ தனது ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து மேசைமீது வைத்தாள்.” நான்கு பேரை இன்றும் நாளையும் சந்திக்கவேண்டும். அதன்பின் நான் ஃப்ரீ. நாளை இரவு திருநெல்வேலி போக முடியுமா?’

‘10 மணி நேரம் பஸ் பயணம்’ என்றான் முத்துக்குமார். டிக்கட் காசு இவள் தருவாளா, இல்லை நான் போடவேண்டியிருக்குமா? எப்படிக் கேட்பது ?

‘தூத்துக்குடி வரை விமானம்.நான் புக் செய்துவிடுகிறேன்.’ என்ற லிண்டா, எழுந்து கை குலுக்கினாள். ‘நாளை இரவு முதல் தங்குவதற்கும் திருநெல்வேலியில் ஏற்பாடு செய்துவிட்டேன். என்னைப் பற்றிக் கவலைப்படாதே. நாளை இரவு நேராக விமானதளத்தில் சந்திப்போம்.’ முத்துக்குமார் திகைத்து நின்று கொண்டிருக்கும்போதே, அவள் திரும்பிப்பார்க்காமல் லிஃப்டு நோக்கி நடந்தாள்.

Story image

‘இருவாரம் என்னோடு திருநெல்வேலி..வீட்டில் ஒன்றும் சொல்லமாட்டார்களே? ‘ லிண்டா, விமான நிலையத்தில், அழைப்பிற்குக் காத்திருக்கையில் சிரித்துக்கொண்டே கேட்டாள்.

‘இல்லை. ஏற்கெனெவே லீவு போட்டிருந்தேன்‘ அவன் மனதில் கேள்விகள் எழுந்தன, மீண்டும். என்ன கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறாள்? தமிழ்நாட்டில் ஆயிரமாயிரம் முத்துக்குமார்கள் இருக்கையில், என்னை ஏன் பிடித்துக்கொண்டு தொங்குகிறாள்?

அதற்கும்மேல் ஒரு கேள்வி அவனுள் எழுந்து பயமுறுத்தியது. ‘எவளோ ஒருத்தி  கேட்டாள் என்றால், நான் ஏன் மெனக்கெட்டு அலைகிறேன்? எது, என்னை உடனே சரியென்று சொல்ல வைத்தது?

‘ஆண்டர்ஸன் கொலை வழக்கு என்று கேள்விப் பட்டிருக்கிறாயா?’ பறக்கும்போது  விமானத்தின் ஒலியை மீறி அவள் கேட்டதும், ‘அங்? இல்லை’ என்றான்.

‘1911ம் வருடம்  மே மாதம் 16ம்தேதி முள்ளக்காட்டில் நடந்த சம்பவம் அது. பரபரப்பான கலெக்டர் ஆஷ் கொலை அதே வருடம் ஜூன் 17ல் நடந்ததில் அது அதிகம் பேசப்படாது போனது. ஆஷ் கொலைத் திட்டம் தீட்டிய நீலகண்ட ப்ரம்மச்சாரி, ஆண்டர்ஸன் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட மனிதனோடு தொடர்பு கொண்டிருந்தார். ஆஷ் கொலைக்கு முன் நடந்ததால், ஆண்டர்ஸன் கொலைக்கும் சுதேசிகள் காரணமாயிருக்கலாம் என்று ஆங்கிலேய உளவுத்துறை நம்பியது.. இன்றும் நம்புகிறது அதன்  அன்றைய விசாரணை ஆவணங்கள் மறைந்துபோய்விட்டன.’

‘இன்றும்?’ முத்துக்குமார் வியந்தான். ‘லிண்டா, நீ சொல்வது நடந்து நூறு வருடங்களுக்கு முன்பு.. இன்று , முள்ளக்காடு பகுதியில், மனைகள் விற்பனைக்கு மார்க்கெட் போன, உடலென்பது திரையளவு என்று ஊதிப்போன டி.வி நடிக, நடிகைகள் டி.வியில் வருகிறார்கள். அங்கு என்ன கிடைக்கும்?’

‘ஒரு ஆவணம். நடேசபிள்ளை டைரி என்று ஒன்று..அது வழிகாட்டும் என நம்புகிறேன்’ அவள் தொடர்ந்தாள். ‘நடேசபிள்ளை என்ற வக்கீல், ஆண்டர்ஸன் ,ஆஷ், வி.ஓ.ஸி காலத்தில் திருநெல்வேலியில் இருந்தவர். அவர், அப்போதைய நிகழ்வுகளை ஒரு டைரியில் எழுதி வைத்தார். அதின் குறிப்புகளில் தேடவேண்டும்’

‘நூறு வருடப் பழைய துப்பாக்கி, இத்துப்போன ஒரு டைரி.. லிண்டா, நிஜமாவே என்ன தேடி வந்திருக்கிறாய்?’

சற்று அமைதியாக இருந்தபின் கேட்டான் ‘லிண்டா, ஒரு கேள்வி’

“என்னை ஏன் இப்படிப் பிடித்துக்கொண்டு உயிரெடுக்கிறாய்? சரியா?”

‘ஆ...ம்மா’ என்று இழுத்தான்..இவளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

‘உனது பெயரிலேயே அதன் விடை இருக்கிறது. ஆண்டர்ஸன் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் பெயர் முத்து ராசா. உன் பெரிய தாத்தா. அத்தனை முத்துக்குமார்களிலும் உனக்குத்தான் என் புதிர் நெருங்கி வருகிறது’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.