அத்தியாயம் - 4
விமான நிலையத்தில் லிண்டாவை வரவேற்க ஒல்லியாக ஒருவர் நின்றிருப்பதைக் கண்டு வியந்தான். ஏதோ ஓட்டல் கார் வந்திருக்கும் என்றல்லவா நினைத்தேன்?


மூத்தவ போகையிலே தங்கச்சி கைபிடிச்சு
சேத்தே கொடுத்துட்டா செம்மையா வீடுறவே
விமான நிலையத்தில் லிண்டாவை வரவேற்க ஒல்லியாக ஒருவர் நின்றிருப்பதைக் கண்டு வியந்தான். ஏதோ ஓட்டல் கார் வந்திருக்கும் என்றல்லவா நினைத்தேன்?
‘மீட் மிஸ்டர்.மாடசாமி. ஐ கால் ஹிம் மாடா. இவர் வீட்டுலதான் நான் தங்கறேன். நாளைக்கு மாடா வீட்டுல எட்டரைக்கு வந்திருங்க. மாடா, உங்க அட்ரஸை முத்துவுக்கு கொடுக்க முடியுமா?’ மாடா என்ற மாடசாமி தன் செல்போன் நம்பரைக் கொடுத்ததும், அதனை எந்திர கதியில் பதித்துக் கொண்டதும் நினைவின்றி முத்து , திகைப்புடன் வீட்டிற்குக் கிளம்பினான். மிகச் சரியாகத் திட்டம் தீட்டியே பயணத்தைத் தொடங்கியிருக்கிறாள். எங்கே போனால், எங்கே தங்குவது என்பது வரை. இவள் நிஜமாகவே ஒரு துப்பாக்கியைத் தேடி வந்திருப்பாளா? அதுவும் நூறு வருஷப் பழைய துப்பாக்கி. அதில் என்ன இருக்கும்? அப்படியே இருந்தாலும், அதன்மூலம் இவளுக்கு என்ன கிடைத்து விடப்போகிறது?
வீட்டில் அம்மா கேட்டதற்கு ‘ஒரு ஃபாரின் கஸ்டமர் பொம்பளை நம்மூர் கோயிலெல்லாம் பாக்கணுங்கா. அவகூட ஒரு வாரம் சுத்தணும்மா” என்றான். களைப்பில் சட்டென உறங்கிப்போனான்.
மாடசாமியின் பழைய மாடி வீடு டவுணில் இருந்தது.. பக்கத்து வீட்டில் இருந்த ரோசம்மா டீச்சர் அடையாளம் கண்டுகொண்டு பெரிதாகப் புன்னகைத்தாள் ‘லே, முத்துதான நீயி? எங்கிட்டு வந்தளா?’
‘சும்மாத்தான் டீச்சர். மாடசாமி தெரிஞ்சவரு. சேரி பாத்துட்டுப் போலாம்னு வந்தன். சொவமாயிருக்கீயளா?’
‘லே, இங்கிட்டு வா’ பொறுமையின்றி முகம் சுருக்கி அவசரமாக அவனை அழைத்தாள் ‘ஒரு வெள்ளக்காரி வந்திருக்காளே? என்னவாம் சேதி?’
‘தெரியல டீச்சர். என்னமோ ஆராய்ச்சியாம்’
‘போவட்டு அவ ப்ராட்டஸ்டண்ட்டா, கேத்தலிக்கா? கேட்டுச் சொல்லுடே’
‘எதுக்கு டீச்சர்?’
‘நாளைக்கி சண்டே க்ளாஸ்ல கூப்பிடுவேம்லா?. நம்ம பிள்ளேல்லாம் இப்ப சர்ச்சுக்கே வரமாட்டிக்கி, பாத்துக்க. இவ வந்தா சொல்லுவேம்லா….பாத்தீயளாட்டீ, வெள்ளக்காரி ஆண்டவருக்கு கீழ்ப்படிஞ்சி நடக்கா, ஒங்களுக்கு என்னாட்டி கொள்ளை?’

மாடசாமி அவனை அடையாளம் கண்டுகொண்டு அழைக்க, அவசரமாக விரைந்தான். லிண்டா தனது மடிக்கணனியுடன் அமர்ந்திருந்தாள். ஒன்றும் பேசாமலே, திரையை அவனை நோக்கித் திருப்பினாள். ‘இது, , நடேசபிள்ளையின் டைரியின் நகல்’
ஸ்கேன் செய்யப்பட்டிருந்த பழுப்பேறிய காகிதத்தை வியப்புடன் பார்த்தான் முத்துக்குமார். சற்றே சரிவான எழுத்து.. தடியாகவும், ஒல்லியாகவும், அடர்ந்தும், மை தீர்ந்துபோன இடங்களில் சற்றே கீற்றாய், சன்னமாயும் மங்கியும்போயிருந்த எழுத்துக்கள்..
‘நடேசபிள்ளையின் மூன்றாம் தலைமுறையில் அவரது மற்றொரு மகன் வயிற்றுப் பேரன், மாண்ட்ரீலில் இருக்கிறார். அவரிடம் இருந்து நகல் எடுத்து வந்தேன்.’ லிண்டா அவனை நோக்கித் திரும்பினாள்.
‘நீ செய்ய வேண்டிய உதவி.. இதனைப் பார்த்து, உங்கள் குடும்ப ஆட்கள் பற்றி வருபவற்றை விளக்கவேண்டும். அவை நடந்த இடங்களுக்கு நாம் போகவேண்டும். அவ்வளவுதான்’
முத்து திரையைப் பார்த்தான். சாய்த்த உருவில் நீட்டி நீட்டி சுமாரான அகலமுள்ள பேனா முனைகொண்டு எழுதப்பட்ட எழுத்துக்கள் மங்கலாகத் தெரிந்தன. ‘இன்னிக்கும் ப்ரிட்டிஷாரை எதிர்த்து, பரங்கிப்பேய் என தூஷணம் பண்ணிக்கொண்டும், ஸ்வயதேசி வஸ்த்ராதிகளையே தரிக்க வேணுமாய்ப் ப்ரார்த்தித்துக்கொண்டும் ஒரு யுவன் வந்தான்..’ இந்தத் தமிழ் என்றைக்கு நான் புரிந்து, என்றைக்கு இவளிடம் சொல்ல?
‘நடேச பிள்ளை சுமாரான அளவில் வெற்றிகரமான லாயராக இருந்திருக்கிறார். சமூகத் தொடர்பு மிக்கவர். ஆண்டர்ஸன் இங்கு வரும்போது, அவனுக்கு தனியான அளவில் ஒத்தாசை செய்யுமாறு, மெட்ராஸ் பெஞ்ச்சில் இருந்த நண்பர் சிபாரிசு செய்ய, மறுக்க முடியாமல் அவர் ஆண்டர்ஸனுக்கு உதவியிருக்கிறார். இதையும் டைரியில் பார்த்தேன். உன் மின்னஞ்சலுக்கு இதன் லிங்க்கை அனுப்புகிறேன். ஷேர் பண்ணியிருக்கேன்.’
முத்துக்குமார், தனது கணனியை உயிர்ப்பித்து, அந்த லிங்க்கைச் சொடுக்கினான். அவன் எதிர்பார்த்தது போலவே, அவள் டைரியின் பக்கங்களை ‘பார்க்க மட்டும்’ என்ற அளவில் பகிர்ந்திருந்தாள். அவனால் வேறு எங்கும் சேமித்துக்கொள்ள முடியாது. விவரமாத்தான் இருக்கிறாள்.
‘சரி, எங்கிருந்து முத்து ராசா இங்கு வந்தார்?’
‘படித்துத் தெரிந்துகொள். இப்போது, நாங்க ம.தி.தா இந்துக்கல்லூரி போறோம். வரியா?’
‘இல்லை’ என்று அவன் டைரியில் மூழ்கினான். ஒருமணிநேரம் கழித்து லிண்டாவும் மாடசாமியும் திரும்பி வந்த போதுதான் அவன் நிமிர்ந்தான்.
லிண்டா, கையிலிருந்த கோப்பில் பழுப்பாகத் தெரிந்த ஒரு காகிதத்தை சுட்டினாள் ‘இது... அன்றைய கல்லூரி முதல்வர் கலெக்ட்ருக்கும், காவல் துறைக்கும் எழுதிய புகார்.. ஆண்டர்ஸன் இங்கு வந்து ,சுதேசி எண்ணம் கொண்ட, கிளர்ச்சி செய்யக்கூடிய உடல், மன வலிமையுடைய மாணவர்களின் விவரங்களைத் தனியாகத் தரும்படி மிரட்டி அழுத்தம் கொடுத்திருக்கிறான். அதனை மறுத்து, முதல்வர் புகார் செய்ய, ஆண்டர்ஸனை கலெக்டர் விஞ்ச் துரையும், போலீஸும் தடுத்திருக்கிறார்கள். அவன் அவர்களுக்கு அடங்கியதாகத் தெரியவில்லை’
‘தனிப்படைத் திமிர். கவர்னரையும் தாண்டி, நேராக வைஸ்ராயின் அலுவலகத்தின் ஆணை’
‘கரெக்ட். விஞ்ச் வெறுத்துப்போய் ‘இங்கு யார் கலெக்டர்?’ என்று கேட்டு தன் மேலதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் என அறிந்தேன். ஆண்டர்ஸன், பிற ஊழியர்களைக்கொண்டு அந்த பட்டியலைத் தயாரித்து, அந்த மாணவர்களை ஒடுக்கியிருக்கிறான். அத்தோடு, அவர்கள் தொடர்பு கொண்டிருந்த ஆட்களையும் பிடித்து சித்திரவதை செய்திருக்கிறான். போலீஸ் ஸ்டேஷன்களில், பாளையங்கோட்டை சிறைச்சாலையில், தூத்துக்குடி சப் ஜெயில்களில் பதிவிடப்படாத கைதிகள் இருந்தாகவும், ஆண்டர்ஸன் அவர்களை தனியாக விசாரித்தகவும் செய்திகள் உள்ளன. அவர்களின் குடும்பங்களைப் பார்க்கவேண்டும். பல உண்மைகள் தெரிய வரலாம்’
‘அந்த குடும்பங்கள்? அவர்கள் யாரென்றே இப்போது தெரியாது!’
லிண்டா புன்னகையுடன், ஒரு காகிதத்தை தன் பையிலிருந்து எடுத்துக்காட்டினாள் ‘1908-1911 கல்கத்தாவில் வைஸ்ராய் அலுவலக ஆவணக்குறிப்பில் ஆண்டர்ஸன் அனுப்பிய பெயர்ப்பட்டியல் இருந்தது, இந்தப் பெயர்களை வைத்து, அவர்களது குடும்பங்களைப் பிடிக்கமுடியும்”
முத்துக்குமார் சிரித்தான் ‘லிண்டா, இது இங்கிலாந்து அல்ல, வீட்டுப்பெயர் வைத்து, அவர்களது குடும்பத்தை அறிவதென்பது, இங்கு இன்றும் சாத்தியமல்ல. ஊர்ப்பெயர் இருந்தால் அங்கே போய்க்கேட்டுப் பார்க்கலாம்.. அதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது’
இரு நாட்களாக, களக்காடு, அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, சேரன்மகாதேவி, வண்ணாரப்பேட்டை என்று அருகிலும் தொலைவிலுமாக அலைக்கழித்தபின், ஒருவர் குடும்பமும் அடையாளம் காண முடியவில்லை.

‘திருநெல்வேலி எழுச்சியில் அடிபட்ட சுதேசிகள் பலரும் வெறுத்துப்போய் சன்யாசிகளாக, தேசாந்திரிகளாகச் சுற்றப்போய்விட்டனர். சிலர் ஊரைவிட்டு எங்கோ சென்றுவிட்டனர். இலங்கை, திருவிதாங்கூர் சமஸ்தானம் சென்று வாணிகத்தில் ஈடுபட்டனர் சிலர்’ என்றாள் லிண்டா, முத்து கவலையானான். இருநாட்கள் வெறுமே கழிந்துவிட்டன. கோயில் கொடைக்கு வந்தியா, வெள்ளக்காரப் பொம்பளையோட சுத்த வந்தியா? என்று அம்மா கத்தத் தொடங்கிவிடுவாள். இன்னும் இரு நாட்களுக்குள் இவள் துப்பாக்கி கிடைக்கவேண்டும்.
அதனையும் மீறி, அவனைத் தாக்கியது, நடேசபிள்ளையின் டைரியில் அவன் கண்ட வரிகள்.. ‘ஸ்ரீமான் ஆண்டர்ஸனுக்குத் துணையாக, மலைக்காடுகளூக்குஞ் சென்று , அவனுக்கீடாக பசு,பக்ஷிகளை வேட்டையாட ஒரு நம்பகமான ஆள் வேணுமென்ன,ஸ்ரீமான் ஜோன்ஸு துரை ப்ரார்த்தித்துப் போக, இரு திவசங்களாக யோசித்து பராக்ரமனான முத்து ராசாவைப் பார்க்க போயிருந்தபடிக்கான. ஜட்கா செலவு.’ என் மூதாதை, ஒரு சிறந்த வேட்டைக்காரனா? பின் ஏன் சன்யாசக்கோலம் பூண்டார்?
லிண்டா எழுந்து, படிகளில் ஏறி, தனது அறைக்குப் போக, அவள் மேசையில் விட்டுச்சென்ற கோப்பு விரிந்து கிடந்தது. அதனுள் மங்கிய பழுப்பேறிய அச்சடிக்கப்பட்ட காகிதம்.. ஏதோ நாளிதழில் வெட்டியெடுக்கப்பட்ட ஒரு பகுதி. கோப்பை , தன்னருகே இழுத்துப் பார்க்கலானான்.
ஒரு பெண்ணின் கறுப்பு வெள்ளைப் படம் அச்சாகியிருந்தது. மங்கிய நிலையிலும் அவளது முகம் சற்றே தெளிவாகத் தெரிந்தது. மெல்லிய உடல், நீளமான கவுன், சிரித்த முகம். எங்கோ பார்த்திருப்பது போன்ற பரியச்சமான முகம். எங்கே பார்த்தேன்?
‘ஹலோ” என்ற லிண்டாவின் குரலில் திடுக்கிட்டுப் போனான்.’ ஷி இஸ் ஆனி. ஆனி கன்னிங்க்ஹாம். ஆண்டர்ஸனுடன் நிச்சயதார்த்தம் ஆனவள்’
-தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...