அத்தியாயம் 24
ஆனி, முத்துராசாவைக் கவனித்தாள். சபாபதி இருக்கும் திசையில் முத்துராசா பார்க்கவில்லை


ஆனி, முத்துராசாவைக் கவனித்தாள். சபாபதி இருக்கும் திசையில் முத்துராசா பார்க்கவில்லை என்பதும் அவன் வலப்புறமாக எதையோ கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் எனவும் அவள் உணர்ந்தாள். பளீரென மின்னல் வெட்டியதில், அவனுக்கு முன்னே பல அடி தூரத்தில், இருவர், முத்துராசாவின் வலப்புறமாக நகர்வது தெரிந்தது. அவர்களின் பக்கவாட்டில், சபாபதியும் அவனுடன் இருந்தவர்களும்..
ஆனி, தான் இருக்குமிடத்தைக் கவனமாக ஆராய்ந்தாள். உயர்ந்த பாறைப்பகுதியில் அவளும் முத்துராசாவும். முன்னே ஒரு சிறு பள்ளத்தாக்கு போன்ற அமைப்பு. அனைத்தும் அடர்ந்த காடு. அவளது இடப்புறம் சற்றே கீழே சபாபதியின் குழு. வலப்புறமாக இருவர் நகர்கின்றனர். சபாபதியின் ஆட்கள் அவர்களைத் தொடர்கின்றனர்.
ஆனி நிதானித்தாள். சபாபதியின் ஆட்கள் ஆயுதம் தாங்கியவர்கள். அவர்கள் நினைத்திருந்தால், பக்கவாட்டில் முன்னே சென்றுகொண்டிருப்பவர்களை எளிதில் சுட்டிருக்கலாம். அவர்கள் கவனித்துப்பின் தொடர்கின்றனர். எனவே, முன்னே நகர்பவர்கள் ஒன்று, சபாபதியின் ஆட்களாக இருந்திருக்கவேண்டும், அல்லது, அவர்களது ஆட்கள் இங்கு எங்கோ மறைந்திருக்கவேண்டும். சுடுவது, சுடுபவர்களை வெளிப்படுத்திவிடும். இது மறைவிடம் கொண்ட ஆட்டம்.
ஆனி வலப்புறம் முன்னே நகர்பவர்களின் பக்கம் பார்த்தாள். ஒரு சிறு உருவம் மரங்களுக்கிடையே பதுங்கி ஓடுவதுபோல் உணர்ந்தாள்.
முத்துராசா பதட்டமானான். ‘தொரை’ என்றான் கிசுகிசுப்பாக. அதன்பின் அவன் வேகமாகப் பேசியது ஆனிக்குப் புரியவில்லை. அவளை ‘இங்கேயே இரு’ என்பதாக சைகை காட்டி, இடுப்பில் சொருகியிருந்த ரிவால்வரை பல்லில் கடித்துக்கொண்டு, பாறையின் ஓரமாக இறங்கினான். சற்றே வலப்புறமாக ஓடி, வளைந்து நேராகத் திரும்பி, அச்சிறு உருவத்தை நோக்கி விரைந்தான்.
ஆனி, பாறையிலிருந்து மெல்ல இறங்கினாள். அவள் பெரிய பள்ளத்தை எதிர்பார்த்திருந்தாள். அது ஆச்சரியமாக, இடுப்பளவு ஆழம் கூட இல்லாது, செடிகளில் சறுக்கியது. ஆனி ,முத்துராசாவைப் போல் வலப்புறமாக ஓடாமல், நேராக கீழிறங்கினாள். சரசரப்பு கேட்டு சபாபதியின் ஆளொருவன் திரும்பினான். அவன் துப்பாக்கியை ஆனி இருந்த திசையில் நீட்ட, சபாபதி, அவனைத் தடுத்தான். முன்னே நகர்ந்துகொண்டிருந்தவர்களைக் கவனிக்கச் சொன்னான்.
ஆனி ஒரு நிமிடம், புற்களுக்குள் அசையாது கிடந்தாள். காலில் ஏதோ நறுக்கென கடித்த்தைப் பொருட்படுத்தாமல், படுத்தபடியே மெல்ல சறுக்கினாள். சபாபதியும் அவன் ஆட்களும் வேகமாக இறங்கிக் கொண்டிருந்தனர்.
ஆனிக்குக் கீழே வலப்புறமாக விரைந்து கொண்டிருந்தவர்கள், திடீரென பிரிந்து, ஓடத் தொடங்கினர். இடையிடையே, தங்களது இடப்புறமாகவும் வலப்புறமாகவும் சுடத் தொடங்கினார்கள். சபாபதியின் ஆட்கள் இதனை எதிர்ப்பார்த்திருக்கவில்லை. அவர்கள் சுதாரிப்பதற்குள், இருவர் கீழே விழுந்தனர். சபாபதியின் ஆட்களில் மீதமிருந்த இருவர், கீழே ஓடிக்கொண்டிருந்தவர்களை நோக்கிச் சுட்டனர். ஆனி, வலப்புறம் விலகி ஓடினாள். ஓடி வந்து கொண்டிருந்தவர்கள் அவளருகே மிக அருகே வந்திருந்தனர். ஆனி துப்பாக்கியை வெளியே எடுத்தாள். அவர்களை நோக்கி சுட எத்தனித்த போது அவர்கள் யாரெனக் கண்டாள்.
மறுபுறம் மரங்களினிடையிருந்து ஆண்டர்ஸன் வெளிப்பட்டான். ஓடிக் கொண்டிருந்தவர்களை அவன் சுட, அவர்களில் ஒருவன் கீழே விழுந்தான். மற்றவன், ஆண்டர்சனை நோக்கிச் சுடத் தொடங்க, ஆண்டர்சன் மரங்களில் மீண்டும் மறைந்தான். கீழே விழுந்தவனை, மற்றவன் கைத்தாங்கலாக சாய்த்தபடி முன்னே விரைந்தான். ஆண்டர்ஸன், சபாபதி இருந்த திசையைப் பார்த்தான். இருவரும் வேகம் குறைந்துவிட்டனர். இனிமேலும் சபாபதி ஏன் சும்மா இருக்கிறான்? ‘சபாபதி, பயர்’ கத்தினான் ஆண்டர்ஸன். ஆனியைக் கடந்து அவர்கள் சென்றபின், ஆனி குறுக்கே ஓடினாள். ஆண்டர்சனின் பின் புறமாக மரங்களினூடே அவள் சென்றபோது, அவளருகே, கைத்துப்பாக்கியை உயர்த்தியபடி ஆண்டர்சனுக்குப் பின்புறத்தில் முத்துராசா நின்றிருந்தான்.
ஆனி ஒருமுறை சபாபதியை நோக்கி துப்பாக்கியை உயர்த்தினாள். ஆண்டர்சனுக்கு முன்பு ஒரு கோணத்தில் நின்றிருந்த சபாபதி, அவளது நேரடிப் பார்வையில் தெரிந்தான். சபாபதியின் துப்பாக்கி, நொண்டி விரைந்துகொண்டிருந்தவர்களை நோக்கி நீளவில்லை. மாறாக அது நீண்டது..
ஆண்டர்சனை நோக்கி. டுமீல்’ என்ற சத்தத்தில் சபாபதி சரிந்தது தெரிந்தது. தடுமாறி விரைந்துகொண்டிருந்தவர்களைப் பின் தொடர்ந்து தாக்க ஓடிய ஆண்டர்ஸன் திகைத்துத் திரும்பினான். புதரிலிருந்து வெளி வந்த முத்துராசாவையும், அவன் கையில் இருந்த துப்பாக்கியையும் பார்த்துத் குழம்பிய ஆண்டர்சன், சபாபதி இருந்த இடத்தைப் பார்த்தான். கீழே அசைவற்றுக்கிடந்த சபாபதியைப் பார்த்த்தும் அவன் கோபம் தலைக்கேறியது.
‘முட்டாள்’ வெடித்தான் ஆண்டர்சன். ‘சுதேசிகள் தப்பித்து விரைந்துகொண்டிருக்கின்றனர். சபாபதி அவர்களைக் கொல்லுமுன் நீ அவசரப்பட்டு..’
‘தொரை’ என்றான் தடுமாறி முத்துராசா.
‘இடியட்’ கத்தினான் ஆண்டர்சன். ‘கண்ணெதிரே அவர்கள் தப்பித்துச் செல்கிறார்கள். அவர்களைக் கொல்லாமல்.. ஒருவேளை நீ..நீ சுதேசிகளின் ஆளோ?’
ஆண்டர்ஸன் தன் வெப்லியை முத்துராசாவை நோக்கி உயர்த்தினான். முத்துராசா, தனிச்சையாக தனது துப்பாக்கியை உருவி நீட்டினான். ஒரு நொடியில் சுடும் ஓசை கேட்டது.
- தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...