ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பானுமதி: 2. கைக்குட்டை காதலும்... பாவுறமா பாடலும்!

அறிமுகப்படுத்திய சி. புல்லையாவின் இயக்கத்தில் அடுத்து ‘மாலதி மாதவம்’ பானுமதியைச் சட்டென்று கதாநாயகியாக உயர்த்தியது.

News image
Updated On :1 ஜனவரி 2016, 9:22 am

பா. தீனதயாளன்

அறிமுகப்படுத்திய சி. புல்லையாவின் இயக்கத்தில் அடுத்து ‘மாலதி மாதவம்’ பானுமதியைச் சட்டென்று கதாநாயகியாக உயர்த்தியது. தொடர்ந்து தர்மபத்தினி, கருட கர்வ பங்கம் என்று பிசியானார். புகழ் ஏணியில் ஏறிக்கொண்டிருந்தத் தருணத்தில் ‘பானுமதிக்குள்ளும்’ காதல் பூத்தது!

பானுமதியின் காதல் கதை அவரைப் போலவே சுவாரஸ்யம் நிறைந்தது.

‘பட உலகிலே எனக்குக் கோபக்காரி, ரொம்ப ஸ்ட்ரிக்டுன்னு பட்டப் பேரு உண்டு. அந்தக் காலத்தில் லவ் சீன்னா ஹீரோவும் ஹீரோயினும் கையைப் புடிச்சிக்கிட்டு ஹாய்யா நடப்பாங்க. தோள்ல சாஞ்சுக்குவாங்க. இதுக்கு மேலே லவ் சீன்ஸ் எப்படி எடுக்கணும்னு அப்பத் தெரியாது.

படத்துக்காக அக்ரிமென்ட் போடும் போதே ‘ஹீரோ என் கையைப் பிடிக்கக் கூடாது. தோள்ல சாயக் கூடாது’ன்னெல்லாம் எங்க அப்பா கண்டிஷன் போட்டாரு.

ஆடம்பரங்களோ சினிமா ஸ்டாருங்கிற ஜிகுஜிகுவோ எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. எங்கப்பா எனக்குக் கொடுத்த ட்ரெயினிங் அந்த மாதிரி.

என்னை நான் ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணாத்தான் நினைச்சுக்கிறேன். அதனால இன்னும் எங்க வீடு சாதாரணமாதான் இருக்கும். சினிமா ஸ்டார் மாளிகை மாதிரி ஆடம்பர அமைப்பைப் பார்க்க முடியாது. இதை நான் பெருமையாவே சொல்லிக்கிறேன்.

1941ன்னுல மெட்ராஸூக்கு வந்தோம். பக்தி மாலான்னு ஒரு படம். வட நாட்டுக்காரர் ஒருத்தர் எடுத்தார். அதுல மீராபாய் மாதிரி ஒரு கேரக்டர். அந்தப் படத்துக்காக நான் மொதல்ல டான்ஸ் கத்துக்க வேண்டி வந்தது. அதுவரைக்கும் எனக்கு டான்ஸே தெரியாது. அதில் நான் நாட்டியம் நல்லா பண்ணல. அதனாலயே அந்தப் படத்தைப் பார்க்க எனக்கே பிடிக்காது.

Story image

அதுக்கப்புறம் ஸ்டார் கம்பைன்ஸ் ‘கிருஷ்ண பிரேமா’ வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் வளர்ந்த நேரம்.

அதை ராமகிருஷ்ண ப்ரேமம்னு கூடச் சொல்லலாம்.கிருஷ்ண பிரேமா படத்தை இயக்கியவர் ஹெச். வி. பாபு. அவரது உதவியாளர் பி.எஸ். ராமகிருஷ்ணராவ். எனக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது. அதற்குக் காரணம்-

‘ராமகிருஷ்ணா ரொம்பவும் சங்கோஜி. நல்லவர். பெண் பிள்ளைகள் இருக்கும் பக்கம் கூட திரும்பிப் பார்க்க மாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்.

அப்போது எனக்கு மிகச் சரியாகப் பதினாறு வயது. இருந்தாலும் எத்தனையோ யுகங்களாக அவரை நான் இதற்கு முன்பாகவே உணர்ந்து வந்தவள் போல் ஓர் உணர்வு நெஞ்சில் ஊறிக் கொண்டு இருந்தது.

அன்றைய படப்பிடிப்பில் நாரதர் வேடத்தில் சூர்யகுமாரி என்னுடன் நடித்தார். நிஜமாகவே ரோஜாப்படுக்கையில் என்னைப் படுக்க வைத்தார்கள். அதில் முள்ளும் இருந்தது. நன்றாக என் விரலில் குத்தி விட்டது. ரத்தம் வர ஆரம்பித்தது.

சூர்யகுமாரி பதறிப்போனார். ‘அய்யோ பானு ரத்தம் கொட்டுது. யாராவது துணி கொண்டு வந்து சுத்தி விடுங்களேன்... ’ என்று சத்தம் போட்டார்.

அப்போது ராமகிருஷ்ணா உடனே ஓடோடி வந்து தன் கைக்குட்டையை எடுத்துத் தயங்கியபடியே, என் விரலில் சுற்றி பேன்டேஜ் போடுவது போல கட்டி வைத்தார்.

அவர் எங்கிருந்தாலும் எந்த வேலையில் ஈடுபட்டு இருந்தாலும் எனது பார்வை மட்டும் அவர் பக்கம் தான் இருக்கும். அன்று அவர் விரலில் வடிந்த ரத்தத்தை நிறுத்துவதற்காகக் கட்டிய கைக்குட்டையை நான் விலை மதிக்க முடியாத பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்துக் கொண்டேன்.

அவர் பேசறது என்ன மொழி, என்ன ஜாதின்னு கூட சரியாத் தெரியாது. நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு என் சிஸ்டர் மூலமா சொன்னேன்.

ஐவேஜியுள்ள குடும்பத்தில் பிறந்து விட்டு போயும் போயும் ஒரு அனாதையையா மணந்து கொள்வது? ஒரு காலும் முடியாது’ என்றார் அப்பா.

ஆனால் பானுமதி அதற்கெல்லாம் அஞ்சுவாரா என்ன? முழு பலத்தோடுத் தன் தந்தையை எதிர்த்துக் காதலரைக் கல்யாணம் செய்து கொண்டார்.

‘எங்கப்பா ஒரு வழியா சம்மதிச்சிட்டாரு. ஆடி மாசத்துல ஆகஸ்டு எட்டாம் தேதி 1943ல் டவுன்ல, வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்துல எங்க கல்யாணம் நடந்தது.

அதுக்கப்புறம் சினிமாவில் நான் நடிக்கக்கூடாதுன்னு ரெண்டு பேருமா சேர்ந்து முடிவெடுத்தோம். ஆறு மாசம் வீட்டுலயே சமைச்சுக் கிட்டு இருந்தேன். பானுமதி.

பாவம் பொம்மராஜூ வெங்கட சுப்பையா. தன் பெண் கர்நாடக இசைப் பேரரசியாக வர வேண்டும் என்று மனமாற ஆசைப்பட்டவர். பானுமதியின் அற்புதமான குரல் வளத்தின் காரணமாகவே அவரை சினிமாவில் நடிக்க அனுமதித்தவர். மகளின் காதல் கணவர் தன் பாசக்குயிலை கூண்டில் அடைத்து விட்டாரே... ’ என்று வருந்தினார்.

கெஞ்சாத குறையாக மாப்பிள்ளையிடம் ‘பாட்டுன்னா பானுவுக்கு உசிர். அவளைத் தயவு செய்து பாடவாவது அனுப்புங்களேன். ’ என்றார்.

ராமகிருஷ்ணாவுக்கு மனைவியை முழு நேர குடும்பஸ்திரியாகப் பார்ப்பது மட்டுமே பிடித்திருந்தது. சபை வெளிச்சங்களில் புகழின் மேடைகளில் பானுவைக் காணக் கண்கள் கூசின.

Story image

மருமகன் பிடிவாதமாக மறுத்து விட்டார். ரோஷக்கார மாமனார் அதற்கு மேல் வேதனையைச் சகிக்க முடியாமல் நொந்து போய் சொந்த ஊருக்கே திரும்பினார்.

நடிகை லட்சுமியின் தந்தை ஒய். வி. ராவ். சிந்தாமணி படம் மூலம் தியாகராஜ பாகவதரை சிகரத்துக்கு அழைத்துச் சென்ற சிறந்த டைரக்டர். திருமணத்துக்கு முன் சித்தூர் வி. நாகையா -பானுமதி ஜோடியாக நடித்த படம் ‘தாசில்தார்’. ஒய்.வி. ராவின் இயக்கத்தில் வெளியானது. அமோக வெற்றி பெற்றது.

சமூக கவுரவத்துக்காக ஹைஹீல்ஸ் செருப்பு அணிந்து நடைப் பயிற்சி செய்யும், தாசில்தாரின் அப்பாவி மனைவியாக, பானுமதி மிக வித்தியாசமான நடிப்பில் கொடி கட்டிப் பறந்தார்.

வித்தை உள்ள இடத்தை வியாபாரிகள் தேடி வந்தார்கள்.

‘பானுமதியின் திறமைகள் ஏற்கனவே நிருபிக்கப்பட்டவை. உங்களால் எத்தனை நாள்கள் அதற்குத் தடை போட முடியும்? உங்கள் காதல் மனைவி பானுமதியை நீங்கள் கொண்டாடும் விதம் அபாரம். ரொம்ப காலம் உங்கள் வைராக்கியம் நீடிக்காது.’ என்கிற ரீதியில் தயாரிப்பாளர்கள் தங்கள் கருத்துகளை ராமகிருஷ்ணாவிடம் தெரிவித்தார்கள். அதை அவர் சட்டை செய்யாமல் தொடர்ந்து பிடிவாதம் காட்டினார்.

பட அதிபரும் இயக்குநருமான பி. என். ரெட்டி, ராமகிருஷ்ணாவைச் சந்தித்தார்.

அடுத்து எடுக்க இருக்கும் ‘ஸ்வர்க்க ஸீமா’ தெலுங்கு படத்தில் நாட்டுப்புறத்து சுப்புலட்சுமியாகவும் நாடக நடிகை சுஜாதாவாகவும் இரட்டை வேடங்களில் பானுமதி நடிக்க வேண்டும் என்றார். அவ்விரு கதாபாத்திரங்களிலும் பானுமதியைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது, தயவு செய்து ஸ்வர்க்க ஸீமாவை மட்டும் ஒப்புக் கொள்ளுமாறும் தொடர்ந்து வற்புறுத்தினார்.

இனம் புரியாத இயலாமையில் ராமகிருஷ்ணாவின் ரத்தம் கொதித்தது. மற்றவர்களைப் போல் இல்லாமல் பி.என். ரெட்டி மீண்டும் மீண்டும் தேடி வந்து நச்சரிப்பது எரிச்சலை உண்டாக்கியது.

ஒரு நாள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி விட்டது.

‘சொன்னால் புரிந்து கொள்ளுங்கள். எல்லாரும் என் சொல் பேச்சு கேட்டு வாயை மூடிக்கொண்டு போகும் போது நீங்கள் என்ன உசத்தி?’ என்றார் ராமகிருஷ்ணா காட்டமாக.

பொறுத்தது போதும் என்று ரெட்டி பொங்கி எழுந்து விட்டார். படைப்பாளிகளை அவமதிப்பவர்களைச் சும்மா விடுவதாவது?

‘பானுமதி ஒப்பற்ற நட்சத்திரமாக ஒளி வீச நான் மெனக்கெட்டு வற்புறுத்திச் சொல்கிறேன். மனைவி சினிமாவில் செல்வாக்கு பெறுவதை நிஜத்தில் சகித்துக் கொள்ள முடியாதவர் நீங்கள். எங்களிடம் தவறாக நடந்து கொள்கிறீர்கள். இது தானா உங்கள் புருஷ லட்சணம்?'

வறட்டு கவுரவம் அப்போதும் தீரவில்லை ராமகிருஷ்ணாவுக்கு.

‘சரி. சரி. நீங்கள் இத்தனை கெஞ்சிக் கேட்டதால் ஸ்வர்க்க ஸீமாவில் மட்டும் பானுமதி நடிக்க அனுமதி தருகிறேன்’ என்றார்.

‘பி.என். ரெட்டி வந்து ஸ்வர்க்க ஸீமாவில் நடிக்கக் கூப்பிட்டாரு. என் கணவர் அனுப்ப மாட்டேன்னு சொன்ன பிறகும் அவரை கம்பல் பண்ணி, சம்மதிக்க வெச்சு, என்னை நடிக்க வெச்சாரு.’- பானுமதி.

பானுமதியை பிறவி நடிகை எனலாம். அவர் ஏற்றுக் கொண்ட வேடங்கள் இன்றளவும் பேசப்படுவதற்கு அவரது கூடுதலான ஈடுபாடு முக்கிய காரணம். கதாபாத்திரங்களை மெருகேற்றுவதில் அவர் காட்டிய கடின உழைப்பும் கற்பனையும் அலாதியனவை. தொடக்கக் காலத்திலிருந்தே மிகச் சுதந்தரமான நடிகையாக பானுமதி தன்னை அடையாளம் காட்டியதால் அவருக்கு எதுவும் கை கூடியது.

ப்ளான்ட் அன்ட் சான்ட் ஆங்கில சினிமாவைத் தழுவி உருவானது ஸ்வர்க்க ஸீமா. அதில் மாறுபட்ட இரு பெண்களைத் தன் மனக்கண்ணில் கொண்டு வர பானுமதிக்கு உதவியது அதன் நாயகி ரீடாஹேவர்த். பானுமதியின் அபிமான ஹாலிவுட் ஸ்டார்.

ஏறக்குறைய ரீடாவின் பாதிப்பு பானுமதியின் அனைத்துப் படங்களிலும் பட்டுப் புடைவையின் ஜரிகையாக ஜொலித்தது. அதற்குப் பிள்ளையார் சுழி போட்ட முதல் வெற்றிச் சித்திரம் ஸ்வர்க்க ஸீமா.

பச்சையாகச் சொன்னால் ரீடாஹேவர்த்தை அப்பட்டமாக காபி அடித்தவர் பானுமதி. அதை அவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

‘ஸ்வர்க்க ஸீமாவில் நான் சிறப்பாக நடிக்கக் காரணம் ரீடா ஹேவரின் ப்ளான்ட் அன்ட் சான்ட் நடிப்புதான். உத்தம் குமாரைப் பார்த்து ஏ. நாகேஸ்வர ராவ் எனது கானல் நீர் படத்தில் நடிக்கவில்லையா...? ’ -பானுமதி.

ரீடா ஹேவர்த் ப்ளான்ட் அன்ட் சாண்டில் பாடிய பாடலைத் தன் இஷ்டத்துக்குப் படப்பிடிப்புத் தளத்தில் மெல்ல ஹம் செய்து கொண்டிருந்தார் பானுமதி.

‘ஒஹ்ஹோ... பாவுறமா’

ஒலித்த நொடிகளிலிருந்து ஸ்வர்க்க ஸீமாவின் ஹீரோ மற்றும் இசை அமைப்பாளர், பாடகரான சித்தூர் வி. நாகையாவுக்கு கேட்கத் திகட்டாத கானமாக தேனிசை பொழிந்தது. லவ் டூயட்டுக்கானப் பல்லவி கிடைத்து விட்டது என்றார்.

ஏராளமானப் பாடல்களைத் தன் சொந்தக்குரலில் பாடி சூப்பர் ஹிட் ஆக்கிய ஒரே நாயகி பானுமதி. அவை அத்தனையிலும் அவரது பங்களிப்பு இசை அமைப்பாளருக்குச் சமமாகவே இருக்கும். அதற்கான பூர்வாங்க வேலைகள் ஸ்வர்க்க ஸீமாவிலேயே தொடங்கி விட்டன.

பாவுறமா பாடலில் நாகையாவுடன் சேர்ந்து சரணங்களுக்கான மெட்டமைத்தவர் பானுமதி.

‘எனக்குப் பிடித்த இசையைப் பாடி நான் ஆரம்பிச்சு விடுவேன். மியூசிக் டைரக்டரை இன்ஸ்பைர் பண்ணுவேன். அவங்க வேறே ரூட்டுக்குப் போயிடாம என் ரூட்டுக்குத் திருப்பி விடுவேன். என்னோட வழி எப்பவும் சாஸ்திரீய இசை. ’ - பானுமதி.

அந்நாளில் பாவுறமாவைக் கேட்டுப் பைத்தியம் பிடித்தவர்கள் போல் அலைந்து திரிந்து, அந்த ஒரு பாடலுக்காகவே ஸ்வர்க்க ஸீமாவை தினமும் கண்டு களித்தவர்கள் சாட்சாத் தமிழர்கள். ஆந்திராவை விடத் தமிழ் நாட்டில் தான் ஸ்வர்க்க ஸீமாவுக்கு அமோக வசூல் என்று குறிப்பிட்டார் பி.என். ரெட்டி.

Story image

பி.என். ரெட்டியின் கருத்துக்கு வலிமை சேர்த்தது ‘குண்டூசி’ சினிமா பத்திரிகை ஆசிரியர் கோபாலின் ஸ்வர்க்க ஸீமா பட விமர்சனம்.

‘சுப்புலட்சுமி-சுஜாதா இருவருக்கும் தோற்றம். பேச்சு. நடை. உடை. பாவனைகள் ஆகியவற்றில் என்ன நேர்மாறான மாறுதல்!

இருவருமே பானுமதி என்றால் யாரும் நம்பக் கூட மாட்டார்கள். புறா நடனத்தை என்னவென்று வர்ணிப்பது!

பாவுறமா என்று புறாவைத் தடவிக் கொடுக்கும் போது குரலில் என்ன கொஞ்சல்! என்ன இனிமை! மற்ற எல்லா அம்சங்களையும் விட பாவுறமா பாட்டும் நாட்டியமும் தான் வெற்றி அளித்தது என்பது உண்மை.’

வாலிப இதயங்களில் பானுமதியைப் பச்சை குத்திக் கொண்டத் தமிழர்கள் அவரைத் தங்கள் தோள்களில் வைத்துக் கூத்தாடாத குறை. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!

இலட்சக்கணக்கான வாலிபர்களின் ஆசை வெள்ளம் முரட்டுத்தனத்தால் உருவான ராமகிருஷ்ணா என்கிற முள்வேலியை அடித்துச் சென்றது.

உச்சக்கட்டப் புகழில் இருந்தாலும் பானுமதிக்கு எப்போதும் சினிமாவை விட குடும்பம் மிக முக்கியம். காதல் கணவருடன் கனிவோடு இல்லறம் நடத்தி ஆண் குழந்தையைப் பெற்றார். பரணி என்று பெயர் சூட்டினார்கள்.

பானுமதி புத்திசாலி. தென்னகமெங்கும் அவருக்காக ஸ்டுடியோ அதிபர்கள் காத்திருந்தார்கள். தன்னை வைத்து மற்றவர்கள் காசு பண்ணுவதற்கு முன்பாக, நாமே ஒரு படக் கம்பெனி தொடங்கினால் என்ன என்று தோன்றியது. உடனடியாக பரணி பிக்சர்ஸ் உருவானது.

பிள்ளையும் பிறந்தாயிற்று. அவன் அப்பாவுக்கு உத்தியோகம் வேண்டாமா? ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். வீட்டில் புட்டிப் பால் கலக்கிக் கொண்டிருந்த ராமகிருஷ்ணாவை சினிமா டைரக்டர் ஆக்கினார்.

புருஷனும் பெண்டாட்டியும் சேர்ந்து பாடுபட்டதில் பரணி பிக்சர்ஸ் தெலுங்கில் நன்கு கால் பதித்தது. அதற்கு அவர்களது முதல் தயாரிப்பான ‘மதன மாலா’ படம் உதவியது. பானுமதி நடித்துத் தமிழகத்திலும் நன்றாக ஓடி வசூல் செய்தது.

தனக்குத் தமிழிலும் நல்ல வரவேற்பு இருப்பதை உணர்ந்தவர் பானுமதி. பரணி பிக்சர்ஸ் மூலம் நேரடியாக அறிமுகமாக விரும்பினார்.

1944 ஹரிதாஸில் பாகவதர் பெற்ற வெற்றிக்கு அடுத்து 1945ல் ஏவி.எம்.மின் ஸ்ரீவள்ளி தென்னாட்டை வசூலில் புரட்டிப் போட்டது. அதில் ஹீரோ டி.ஆர். மகாலிங்கம்.

பாகவதர், சின்னப்பாவை விட இளங்காளையான மகாலிங்கம் தனக்குக் கட்டுப்பட்டு நிற்பார் என்பது பானுமதியின் தீர்க்கமான முடிவு. 1952ல் ‘பராசக்தி’ சிவாஜி வரும் வரையில் தமிழ் சினிமாவை தன் பாடல்களால் நிரப்பியவர் டி.ஆர். மகாலிங்கம். அவருக்கு நல்ல கிராக்கி இருந்ததால் பரணி பிக்சர்ஸின் முதல் தமிழ்ப் படத்தில் அவரை நாயகனாக்கினார் பானுமதி.

பி.பானுமதி - டி.ஆர். மகாலிங்கம்

நடிக்கும்

பரணி பிக்சர்ஸ்

புலந்திரன்

அப்படியோர் விளம்பரத்தைப் பார்த்ததும் கோடம்பாக்கம் பரபரப்பானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.