47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வைஜெயந்தி மாலா: 2. சபாஷ் சரியான போட்டி...!

‘வாழ்க்கை’ சினிமாவில் வைஜெயெந்தி மாலாவின் வசந்த வருகை குறித்து, ஏவி.எம். எழுதியுள்ளவை.

News image
Updated On :19 மார்ச் 2016, 4:50 am

பா. தீனதயாளன்

‘வாழ்க்கை’ சினிமாவில் வைஜெயெந்தி மாலாவின் வசந்த வருகை குறித்து, ஏவி.எம். எழுதியுள்ளவை.

‘சாரங்கபாணியின் மகளாக  காலேஜ் பெண் வேஷத்தில் யாரைப் போடுவது என்று யோசித்தோம். ஒரு நாள் என்னுடைய அசோசியேட் டைரக்டர் எம்.வி. ராமன் அவர்கள், ‘விக்டோரியா பப்ளிக் ஹாலில் வசுந்தராவின் மகள் வைஜெயந்தி மாலா டான்ஸ் ஆடுகிறாள். போய்ப் பார்க்கலாம் வாருங்கள், ’ என்று அழைத்தார். 

வைஜெயந்தி மாலாவின் பெர்ஃபார்மன்ஸ் மிகவும் நன்றாக இருந்தது. அவருக்கு அப்போது பதினாறரை வயதிருக்கும்.

‘பார்வைக்கு இருபது வயது வளர்ச்சி...! ’

காலேஜ் பெண் வேஷத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். வாழ்க்கை படத்தில் அவரை ஹீரோயினாகப் போடலாம்,  ஜனங்களும் ஒப்புக் கொள்வார்கள்’ என்று தோன்றியது.

1949 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி. என்னால் மூன்று வருஷங்களுக்கு வைஜெயந்தி மாலா ஒப்பந்தம் செய்யப்பட்டார். மாதம் ரூ.2350 சம்பளம். இரண்டு நடன நிகழ்ச்சிகளை நடத்த அனுமதித்திருந்தேன்.

வைஜெயந்தி மாலா அதி புத்திசாலி! பத்துப் பதினைந்து நாள்களுக்குள் தம் வசனங்களை வரப் பண்ணி நடிக்கத் தயாராகி விட்டார்.

எங்களுக்கும் மூன்று மாதத்தில்  படப்பிடிப்பு முடிந்து படம் சென்சாருக்கும் போய் வந்துவிட்டது.

படத்தைப் போட்டுப் பார்த்தோம். எங்கள் எல்லோருக்குமே மிகவும் திருப்தியாக அமைந்தது. மிகுந்த மன நிறைவோடு 1949 டிசம்பர் 22ஆம் தேதி ரிலிஸ் செய்தேன்.

Story image

‘வாழ்க்கை’ படம் வைஜெயந்தி மாலா வாழ்விலும் ஒரு பெரிய முன்னேற்றத்தையும் மாறுதலையும் ஏற்படுத்தியது.  

சென்னை பாரகன் டாக்கீஸில் 25 வாரங்கள் ஓடியது. ஏவி.எம். ஸ்டுடியோ சென்னைக்கு வந்த பிறகு, வெளியான என்னுடைய முதல் மகத்தான வெற்றிப் படம் அது.

வாழ்க்கை என்பது ஆங்கிலத்தில் லைஃப். ‘ஏவி.எம். ஸ்டுடியோவுக்கே லைஃப் கொடுத்தது வாழ்க்கை என்கிற படம் தான்’.

பஹார் டெல்லியில் ரிலிசானது.  ‘வைஜெயந்தி மாலாவின்’ - கிராமியப் பாம்பாட்டி நடனக் காட்சி வரும் நேரம்.

வடக்கத்திய வழக்கப்படி  ஜனங்கள் மிக உற்சாகமாக  நாலணா, எட்டணா என்று காசுகளைத் திரையை நோக்கித் தூக்கி எறிந்தார்கள்.

அதை நேரில் பார்த்த வடநாட்டுப் பட முதலாளி ஒருவர், வைஜெயந்தி மாலாவிடம் காண்ட்ராக்ட் செய்து வைத்திருந்த  என்னிடம் வரவில்லை.

சென்னை வந்து வைஜெயந்தி மாலாவை நேரில் சந்தித்தார். ஒரு லட்சம் ரூபாய்க்கு  ஒப்பந்தம் பேசி, ஐம்பதாயிரத்தை உடனே கையில் கொடுத்து, தமது இந்திப் படத்தில் நடிக்க புக் செய்து கொண்டு போனார்.

ஆக வைஜெயந்தி மாலா வடநாட்டுப் பட உலகில் பிரபல்யமாவதற்கும் இந்தி பஹார்தான் காரணம்.

என் ஸ்டுடியோவில் இருந்த மூன்று ஆண்டு காலத்தில் அவர் ஒழுங்காக, குறித்த நேரத்துக்கு - காலை ஒன்பதரை அல்லது பத்து மணிக்குள் வந்து விடுவார். வசனம் மற்றும் நடன ஒத்திகை நடக்கும்.

பிற்பகல் வீட்டிலிருந்து சாப்பாடு ஸ்டுடியோவுக்கே  வந்து விடும். மாலை ஐந்தரை மணிக்குத்தான் வீட்டுக்குப் போவார்.

ஒரு காரியாலயத்துக்குச் செல்வது போலவே தினசரி வருவார்  போவார்.

எப்போதாவது ஏதாவது சினிமாவுக்குப் போக வேண்டும் என்று எண்ணினால், என்னிடம் வந்து சொல்லி என் அனுமதியுடன் சற்று முன்பாகப் புறப்படுவார்.

இங்கே என் ஸ்டுடியோவில் வைஜெயந்தி மாலா இருந்த மூன்று ஆண்டு காலத்தில் குதிரைச் சவாரியையும் பழகிக் கொண்டார்.

அவர் மீது எனக்கு எந்தவிதமான புகாரும் வந்ததில்லை.  

வைஜெயந்தி மாலாவின் திறமையைக் கண்டு பலமுறை வியந்து,

‘எதிர்காலத்தில் இவர் மிகச் சிறந்த நடிகையாக வருவார்’ என்பதை  என் சகாக்களிடம் பல முறை மனம் திறந்து சொல்லி இருக்கிறேன். ’ ஏ.வி.மெய்யப்பன்.

Story image

‘முதல் படமாக இருந்தாலும் வைஜெயந்தி மாலா வாழ்க்கையில் பிரமாதமாகக் கூச்சமின்றியே நடித்தார். நான் தான் காதல் காட்சிகளில் அவரோடு நடிக்கக் கூச்சப் பட்டேன். ’ – ‘ஹீரோ’  டி.ஆர். ராமச்சந்திரன்.

ஜெமினி ஸ்டுடியோவின் பிரமிப்பூட்டும் படைப்பு வஞ்சிக்கோட்டை வாலிபன். எம்.ஜி.ஆரை வைத்துத் தயாரிக்க வாசன் முடிவு செய்தார்.

நாடோடி மன்னனில் எம்.ஜி.ஆர். தீவிர கவனம் செலுத்திய நேரம். வாசனுக்கு அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை. ஜெமினிகணேசன் நாயகன் ஆனார்.

‘காதல் மன்னன்’ ஆக்ஷன் ஹீரோவானால்...!  ஜனங்கள் படம் பார்க்க வர வேண்டுமே. ஸ்பெஷல் எபெக்ட் தேவைப்பட்டது வாசனுக்கு.  

‘அகில இந்திய நாட்டிய நட்சத்திரங்கள் பத்மினி- வைஜெயந்திமாலா இருவரையும் முதலும் கடைசியுமாக ஒரே மேடையில்  போட்டி போட்டு நடனமாட விட்டார். ’

வஞ்சிக்கோட்டை வாலிபனின் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ என்கிறப் பாடலுக்கான நடனம் வைஜெயந்தியின்  கலைவாழ்வில் நிச்சயம் ஒரு காலப் பெட்டகம்!

ஏறக்குறைய ஒன்பது நிமிடங்கள் பத்மினியும்-வைஜெயந்தி மாலாவும் ஆடிய ‘சாதூர்யம் பேசாதடி என் சதங்கைக்குப் பதில் சொல்லடி’ நூற்றாண்டுகள் கடந்தும் ஜீவிக்கும்.

‘வாசன் சாருக்கு  என்னையும் பப்பியம்மாவையும் வைத்து, ஒரு போட்டி நடனம் எடுக்க வேண்டும் என்று  எப்படித் தோன்றியதோ தெரியாது.

இந்த விஷயம் எங்க ரெண்டு பேருக்கும் சொல்லப்பட்டதும், ரொம்பவே தீவிரமாக டான்ஸ் பயிற்சியில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தோம். ஓயாமல் ஒத்திகைகள். ஒவ்வொரு நாளும் புதுப்புது முத்திரைகள்...

இப்பவும் சிலர் என்னைக் காணும் போது இந்த நடனத்துக்காகவே, வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தை நாற்பது ஐம்பது தடவை பார்த்ததாகச் சொல்கிறார்கள்.

அதில் எனக்கு ஆச்சரியம் கிடையாது. காரணம் அப்பாடலுக்காக நாங்கள் உழைத்த உழைப்பு அப்படி.

எங்களுக்கான நாட்டியப் போட்டியில் யார் ஜெயிச்சாங்க என்கிற மாதிரி காட்சி இல்ல. ஆனா முழுப்பாடலுக்குள்ளும் இருவரது திறமையையும் வெளிப்படுத்தி, ரசிகர்களைக் கவர வேண்டும் என்பதே வாசன் சாரின் விருப்பம்.

அவரவர் துறையில் நானும் பத்மினியும் பேரோடும் புகழோடும் இருந்தோம். அப்ப உள்ளக் கலைஞர்களுக்குள் எந்த வித ஈகோவும் கிடையாது. அதனாலேயே அப்படியொரு அற்புதமான போட்டிப் பாட்டு அமைஞ்சது.

Story image

இன்னும் சொல்லப் போனால் போட்டா போட்டி நடனங்களே வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இருந்துதான் ஆரம்பித்தன.

நானும் பப்பிம்மாவும் சேர்ந்து ஆடினது ரெண்டு நாள்கள் மட்டுமே. மற்றபடி என் தனிப்பட்டக் காட்சியை  12 நாள்கள் எடுத்தார்கள்.

அதாவது தனித்தனி ஷாட்டுகள். ஒவ்வொரு நாளும் நம்மோட பார்ட்டை நல்லபடியா செஞ்சிடணும். பப்பியம்மா பண்ணினதை விடவும் பெட்டரா பண்ணணும்னு நினைச்சிக்கிட்டே டான்ஸ் மூவ்மெண்ட் கொடுப்பேன்.

ஒவ்வொரு நடன முத்திரையையும் பார்த்துப் பார்த்துத் தனி ஈடுபாடு காட்டி அக்கறையோட செய்தேன். அப்புறம் தான் தெரிஞ்சது, பப்பியம்மாவும் அதே  மனநிலையோடத் தன் பங்களிப்பைப் பண்ணினாங்கன்னு.

பாடல் காட்சியை ரஷ் போட்டுப் பார்த்ததுமே எங்கள் இருவருக்கும் ஒரே பாராட்டு. அப்பவே வஞ்சிக்கோட்டை வாலிபன் பேசப்படுகிற அளவுக்கு, சாதுர்யம் பேசாதடி பாடலும் அதன் காட்சியும் சூப்பர் ஹிட் ஆகும்னு எண்ணினேன்.

நடனத்தின் நடுவில் பி.எஸ்.வீரப்பா,  ‘சபாஷ் சரியான போட்டி’ என்று சொல்லுவார். எங்கள் நாட்டியம் சிலாகித்து பேசப்பட அதுவும் காரணமாகி விட்டது.’ - வைஜெயந்தி மாலா.

ஏறக்குறைய ஆட்டம் பூர்த்தியாகும் தருணம். பத்திரிகையாளர் ‘நாரதர்’ ஸ்ரீனிவாசராவிடம் நயமாகக் கூறப்பட்ட விஷயம்,

‘பத்மினி போட்டியின் முடிவில் தோற்பதாகக் காட்டக் கூடாது. நாரதர் ஸார்! உங்க பாஸ் கிட்டக் கண்டிப்பாச் சொல்லிடுங்க.

எங்க பப்பி எவ்வளவு பெரிய டான்ஸர் என்பது உங்களுக்கே தெரியும்.

அவள் தோல்வி அடைவதாகக் காட்டினால், அவளுடைய பெயர் கெட்டுப் போகும் ஆமா!

அவள் ஜெயிக்காமல் போவதாக நீங்கள் எடுப்பதானால், பப்பி ஷூட்டிங் வரமாட்டாள். ’

பத்மினியின் தாயார் சரஸ்வதி அம்மாள் சர்ச்சையைக் கிளப்பினார்.

சரஸ்வதி அம்மாளுக்குக் கொஞ்சமும் சளைத்தவரில்லை. வைஜெயந்தி மாலாவின் பாட்டி யதுகிரி. அவரும் தன் பேத்திக்காக உரிமைக்குரல் கொடுத்தார்.

‘எங்க பாப்பா தோற்பதாகக் காட்டக் கூடாது.’ 

நாரதர்  நடந்ததை முதலாளியிடம் விளக்கினார்.

இரண்டு நாள்கள் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டார் வாசன். பப்பி - பாப்பா  இருவரில் யார் வெற்றி பெற்றாலும் தனக்குச் சங்கடம் என்பது புரிந்தது. சமயோசிதத்துடன் காட்சி மாறியது.

பத்மினியும் வைஜெயந்தியும் ஆக்ரோஷமாக ஆடிடும் உச்சக்கட்டம். ‘ சபாஷ் சரியான போட்டி’ என்பார் பி.எஸ். வீரப்பா.

Story image

 யாருக்கு வெற்றி என்பது தெரிவதற்குள், ஜெமினி விளக்கை அணைத்து விடுவார்.

தென் இந்தியாவில் வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினியின் பெயரும், வடக்கில் அதன் இந்திப் பதிப்பான ‘ராஜ்திலக்’ கில்  வைஜெயந்தியின் பெயரும் டைட்டிலில் முதல் இடம் பிடித்தன.

‘மந்தாகினி’யாகத் தோன்றி அனைவரையும் மலைக்க வைத்த வைஜெயந்தி மாலாவை  ‘குமுதம்’ கொண்டாடியது.

‘ஜெமினி என்ற சொல்லுக்குத் திரை அகராதியில் பிரம்மாண்டம் என்று தானே பொருள்! அதை உறுதிப்படுத்த வந்திருக்கிறான் வஞ்சிக்கோட்டை வாலிபன்.

 ஜெமினி கணேசனின் ஜோடியான பத்மினியைக் காட்டிலும், வைஜெயந்தி மாலா குறிப்பிடத் தகுந்தாற் போல் நடித்திருக்கிறார்.

 ஜெமினி கணேசன், பத்மினியின் அழகை வர்ணிப்பதைக் கேள்வியுற்று, பொறாமையின் குமுறலில் மிக அமைதியாக, அதைத் தனக்குச் சொன்ன சேடியிடம்-  ‘ஓ சொன்னாரா... ’ என்று வைஜெயந்தி மாலா இழுக்கும் முறை மறக்க முடியாதது. ’

-------

ஜெமினியில் வைஜெயந்தியின் மற்றொரு இரு மொழி சாதனைச் சித்திரங்கள் : இரும்புத்திரை - பைகாம்.

இரும்புத்திரை 1960 தைத்திருநாளில் வெளியானது.

‘ஒரே சமயத்தில் நடிப்பின் இமயங்கள் சிவாஜி - திலீப்ஜி  இருவருடனும் மாறி மாறி நடித்தது மாறுபட்ட அனுபவம்.

ஜெமினி ஸ்டுடியோவில் முதலில் என்னையும் நடிகர் திலகத்தையும் வைத்து இரும்புத்திரையில் ஒரு காட்சியைப் படமாக்குவார் எஸ். எஸ்.வாசன். அடுத்து அதே சீனில் திலீப் குமாருடன் பைகாமில் நடிக்க வேண்டும்.

 தமிழ், இந்தி இரண்டிலும் நானே நாயகி என்பதால் எனக்கு எந்தப் பிரச்சனையும் எழவில்லை. ஒரே கேரக்டரைத் திரும்பத் திரும்ப தெற்கு - வடக்கு என்று வெவ்வேறு பண்பாட்டுக்கு ஏற்ப நடித்தேன்.

என் நடிப்பை இரண்டு ஹீரோக்களும் காட்சி முடிந்ததும், உடனடியாகப் பாராட்டுவார்கள் என்பதை எந்நாளும் மறக்க முடியாது.

பைகாம் ஓர் ஆண்டுக்கு மேல் வடக்கில் ஓடி என்னை மேலும் பிரகாசிக்கச் செய்தது. தமிழில் இரும்புத்திரை ஆறு மாதங்களைக் கடந்தது.

அத்தகைய அனுபவம் என்னைப் போன்ற நட்சத்திரத்துக்கு மிகப் பெரிய பாக்கியம்!  அது எனது தனிப்பட்ட மகிழ்ச்சி!’ -வைஜெயந்தி மாலா.

இரும்புத்திரையின் இன்னொரு விசேஷம் வைஜெயந்தி மாலாவின் தாயார் வசுந்தரா தேவி!

நிஜத்தில் பிரிந்து வாழ்ந்த தாயையும் மகளையும் தன் ஆளுமையால்,  திரை நிழலில் ஒன்றாக இணைத்தார் எஸ்.எஸ். வாசன்!

எஸ்.வி. ரங்காராவின் மனைவியாகவும், வைஜெயந்தி மாலாவின் அன்னையாகவும் இரும்புத்திரையில் இடம் பெற்றார் வசுந்தரா தேவி.

அதுவே வசுந்தராவின்  கடைசிப் படம். 1988ல் வசுந்தரா வைகுந்தன் அடி சேர்ந்தார்.

1959 மார்ச் 6ல் ஏ.நாகேஸ்வர ராவ் - வைஜெயந்தி மாலா ஜோடியாக நடித்து வெளியானது அதிசய பெண் அடையாளமின்றி போனது. தயாரிப்பு இயக்கம் எம்.வி. ராமன்.

1960ன் கோடை. எம்.ஜி.ஆர்.- வைஜெயந்தி மாலா இணைந்து நடித்த  ஒரே படம் பாக்தாத் திருடன். அரபு நாட்டுக் கதை. மே 6ல் வெளியானது. தோல்வியில் முடிந்தது.

Story image

‘எம்.ஜி.ஆருடன் ஒரே ஒரு படத்தில் நடித்தேன். அந்த ஒரு படமே அவருடைய சிறப்பான குணத்தை வெளிப்படுத்தி விட்டது.

என்னைத் தலைக்கு மேலாகத் தூக்கி அருகில் இருக்கும் தொட்டியில் போட வேண்டும். அதை எம்.ஜி.ஆர். ஒன்றுமே சொல்லாமல் எடுத்திருக்கலாம். ஆனால் அப்படி விட்டு விடவில்லை.

காட்சி படமாக்கப்படுவதற்கு முன்பாக,  என் பாட்டியை அழைத்து,

‘அம்மா... இப்படியொரு சீன் எடுக்கப் போகிறார்கள். நான் ரொம்பவும் கவனமாகவே நடிப்பேன். எனவே உங்கள் பேத்தியைக் கீழே போடுகிற மாதிரியான கட்டத்தைப் படமாக்கும் போது, நீங்கள் பயந்து அலற வேண்டாம். ’  என்று எச்சரித்தார்.

பாட்டிக்கு ஒரே ஆச்சரியம். இருந்தாலும், ‘ஜாக்கிரதையாகப் பண்ணுங்கோ. ’ என்று உஷாராகக் கேட்டுக் கொண்டார்.

நான் பாட்டியை விடவும் எம்.ஜி.ஆரை எண்ணி வியந்தேன். அவரிடமே வாய் விட்டுக் கேட்டு விட்டேன். 

‘பாட்டியிடம் அத்தனை பாதுகாப்பு உணர்வோடு அதைச் சொல்ல வேண்டுமா... ’ என்று!

‘நமக்கு வேண்டுமானால் அது படத்தில் வருகிற ஒரு சாதாரண சீனாகத் தோன்றலாம். உங்கள் பாட்டி நீங்கள் தொட்டியில் விழும் போது, என்னவோ ஏதோ என்று பதறக் கூடாது அல்லவா... விவரம் தெரிந்த நாமே, பெரியவர்களுக்கு சிறு அதிர்ச்சியையும் தரலாமா...? ’ என்றார்.

எதையும் மனிதாபிமானத்துடன் முன் கூட்டியே திட்டமிடுகிற அவரது ஆற்றல் புரிந்தது.

‘எப்பேர்ப்பட்ட அறிவாளி எம்.ஜி.ஆர்.! என்று தோன்றியது. ’- வைஜெயந்தி மாலா.

Story image

வைஜெயந்தி மாலா நடித்த ராஜபக்தியில் பானுமதி, பத்மினி, பண்டரிபாய் என்று நான்கு நாயகிகள். சிவாஜி நாயகன். அவரைக் காதலிக்கும் ‘மிருணாளினி’யாக வைஜெயந்தி மாலா தோன்றினார்.

மே 27ல் ரிலிசான ராஜ பக்தி ரசிகர்களைக் கவராமல் போனது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கல்கியின் ‘பார்த்திபன் கனவு’  ஜூன் 3ல் திரையிடப்பட்டது. மாமல்லராக எஸ்.வி.ரங்காராவும் அவரது அன்பு புத்திரி குந்தவியாக வைஜெயந்தி மாலாவும் நடித்தனர்.ஜெமினி ஹீரோ.

பழகும் தமிழே பார்த்திபன் மகனே,  இதய வானின் உதய நிலவே எங்கே போகிறாய், 

வேதாவின் இசையில் கேட்கக் கேட்க மறக்க முடியாத, ஜீவனுள்ள பாடல்கள் மட்டுமே பார்த்திபன் கனவு சினிமாவை நினைவில் நிறுத்துகின்றன.

மிகுந்தத் தரத்தோடு உருவாகியும், திரைக்கதை அமைப்பில் ஏற்பட்ட குழப்பத்தால்  பார்த்திபன் கனவு   வெற்றி பெறவில்லை.

‘வைஜெயந்தி மாலா நடித்து ஜனாதிபதி பரிசு பெற்ற ஒரே தமிழ்ப்படம் பார்த்திபன் கனவு’ என்கிற சிறப்பு சேர்ந்தது.

---------------

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.