மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

12. ஸ்வீட் எடு, கொண்டாடு! - 3

என் சின்னாப்பாவின் பெருவிரல் வெட்டப்பட்டதற்கும், துறைத் தலைவரின் பார்வை போனதற்கும் சர்க்கரை வியாதிதான் காரணம் என்று டாக்டர்கள் கூறினர். அதுதான் உண்மையா? தெரியாது. அவர்களுக்கு சர்க்கரை வியாதி இருந்தது. சில ஆண்டுகள் கழித்து ஒருவருக்கு விரல் வெட்டி எடுக்கப்பட்டது, இன்னொருவருக்குப் பார்வை போனது.

News image
Updated On :4 ஜூன் 2016, 6:03 pm

நாகூர் ரூமி

பொய் 4 – கண் குருடாதல், மாரடைப்பு, உறுப்பை வெட்டி எடுத்தல் போன்றவற்றுக்கு சர்க்கரை வியாதிதான் முக்கியக் காரணம்.

சர்க்கரை வியாதி வந்துவிட்டால், அதன் தொடர்ச்சியாக பல சிக்கல்கள் நிச்சயம் ஏற்படும். அதைத் தவிர்க்க முடியாது என்றே பலரும் நம்புகின்றனர். குறிப்பாக, மெத்தப் படித்தவர்கள்! சர்க்கரை வியாதி முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டால், மேலே சொன்ன சிக்கல்கள் நிச்சயம் வராது. ஆனால், சரியாகக் கவனிக்காமல் விடப்பட்ட சர்க்கரை வியாதிக்காரரர்களுக்கு இந்தச் சிக்கல்கள் வரும் வாய்ப்பு உண்டு என்கிறார் ரிவா.

Story image

ரிவா சொல்வது ஓரளவுக்கு உண்மைதான். ஏன், ஓரளவுக்கு? ஏனென்றால், எந்த நோயாக இருந்தாலும், நாம் அதை சரியாகக் கவனிக்காவிட்டால், அதன் விளைவுகள் அதிகரிக்கத்தானே செய்யும்? கண் பார்வை பாதிக்கப்படுதல், ரத்த ஓட்டம் நடைபெறாத பகுதியை, உதாரணமாக கால், கை விரல்களை வெட்டி எடுத்தல் போன்றவை நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன. என் சின்னாப்பாவுக்குக் கால் பெருவிரல், ரத்த ஓட்டமின்மையால் வெட்டி எடுக்கப்பட்டது. என் துறைத் தலைவராக இருந்த ஒருவருக்குக் கண் பார்வை போனது. ஆனால், என் சின்னாப்பாவின் பெருவிரல் வெட்டப்பட்டதற்கும், துறைத் தலைவரின் பார்வை போனதற்கும் சர்க்கரை வியாதிதான் காரணம் என்று டாக்டர்கள் கூறினர். அதுதான் உண்மையா? தெரியாது. அவர்களுக்கு சர்க்கரை வியாதி இருந்தது. சில ஆண்டுகள் கழித்து ஒருவருக்கு விரல் வெட்டி எடுக்கப்பட்டது, இன்னொருவருக்குப் பார்வை போனது.

இப்படியெல்லாம் ஒருவருக்கு ஆனால் நமக்கு பயம் வராதா என்ன? வரலாம். ஆனால், அச்சப்படுவதால் எந்தப் பிரச்னையும் தீராது. அச்சம், பிரச்னையை அதிகரிக்கவே செய்யும். ஆனால், மன ஆற்றல் எல்லா வியாதிகளையும் தீர்க்கவல்லது. சர்க்கரை வியாதிக்காரர் ஒருவருக்கு நம்பிக்கை நிகழ்த்திய ஒரு அற்புதம் பற்றி ரிவா தனது நூலில் கூறுகிறார்.

வார்ம் ஃபீட் தொழில்நுட்பம்

டயபட்டிஸ் இருந்த ஒருவருக்கு கால் பகுதியில் ரத்த ஓட்டம் சரியாகச் செல்லாததால், அவரது இரண்டு கால் பெருவிரல்களையும் வெட்டி எடுத்துவிடலாம் என்று டாக்டர்கள் முடிவு செய்தனர். அறுவை சிகிச்சைக்குச் சில நாட்களுக்கு முன்பு காலில் ஏற்பட்ட பயங்கர வலியின் காரணமாக, டாக்டரைப் பார்க்க அந்த நோயாளி வந்தார். அவருக்கு ரிலாக்சேஷன் செய்யச் சொல்லிக்கொடுத்த அந்த டாக்டர், ‘வார்ம் ஃபீட்’ (Warm Feet) என்ற ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பார்த்தார்.

அது என்ன தொழில்நுட்பம்? ஒன்றுமில்லை, நோயாளியின் உடலில் எந்தப் பகுதியில் உஷ்ணம் குறைவாக உள்ளதோ அந்தப் பகுதிக்குத் தேவையான உஷ்ணத்தைச் செலுத்து என்று தன் மனத்துக்கு உத்தரவு கொடுத்து, நோயாளியின் உடலின் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் அவரது எண்ணத்தை ஒருமித்து நிற்கவைத்து, மன ஆற்றல் மூலம் உஷ்ணத்தை அங்கே அனுப்புவது. அதாவது, தேவையான உஷ்ணம் அந்தப் பகுதிக்குப் பாய்வதாக டாக்டர் கற்பனை செய்வது! ஆமாம், கற்பனைதான். கற்பனை என்பது திரைபோடப்பட்ட உண்மையாகும். கற்பனை செய்யும்போது திரையை நீக்கிவிட்டுக் கற்பனை செய்யவேண்டும் என்று என் குருநாதர் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது!

அப்படி டாக்டர் செய்த கொஞ்ச நேரத்துக்கெல்லாம், நோயாளியின் உடலில் தேவையான உஷ்ணம் பரவியது. வலியும் நின்றுபோனது. நோயாளிக்கு ரத்த ஓட்டமும் தடையின்றிப் பாய ஆரம்பித்தது. ஆபரேஷன் கேன்ஸலானது! டயபட்டிஸ் மற்றும் பாதங்களுக்கான ஸ்பெஷலிஸ்ட் பிர்கிட்டா ரைஸ் என்பவர் இந்நிகழ்ச்சியை தன்னிடம் கூறியதாக ரிவா கூறுகிறார் (பக்கம் 76).

Story image

இதுபற்றிய விவரங்களை, www.warmfeetkit.com என்ற வலைத்தளத்தில் காணலாம். இந்த வலைத்தளத்தையும் அமைப்பையும் உருவாக்கியவரே பிர்கிட்டா ரைஸ்தான். மனத்தையும் உடலையும் தளர்ச்சியடையச் செய்தல் (relaxation), மூச்சுப் பயிற்சி மற்றும் காட்சிப்படுத்துதல் (visualization) – என்ற மூன்றையும் பயன்படுத்தித்தான் கால் வலியை, காலில் சர்க்கரை நோயால் ஏற்படுவதாக நம்பப்படும் புண்களையெல்லாம் இவர்கள் குணப்படுத்தியுள்ளனர். உதாரணமாக, வார்ம் ஃபீட் பயன்படுத்துவதற்கு முன் இருந்த கால் புண், அதைப் பயன்படுத்திய பிறகு எப்படி இல்லாமல் போனது என்பதையும் கீழே உள்ள படங்களில் காணலாம்.

Story image
Story image

ஆனால் மேலே சொல்லப்பட்ட, இன்னும் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கிற பொய்க்குக் காரணம், சர்க்கரை நோய் அல்ல. மாறாக, அதைக் கட்டுப்படுத்துகிறேன் என்ற பெயரில் கொடுக்கப்படும் ஆங்கில மருத்துவத்தால் சிபாரிசு செய்யப்பட்டு கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஊசிகள்தான் என்றால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை.

சரி, இனி சர்க்கரை நோய் என்று சொல்லி பயமுறுத்தப்படும் பிரச்னையின் பின்னால் உள்ள உண்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம். இதுவரை, அந்த நோய் பற்றி ஆங்கில மருத்துவத்தின் பார்வையில் சொல்லப்பட்டவற்றை சுருக்கமாக மீண்டும் பார்த்துவிடலாம்.

சர்க்கரை நோய், நீரிழிவு நோய், டயபட்டிஸ் மெலீட்டஸ் என்றெல்லாம் சொல்லப்படும் நோயானது, ஒரு பயங்கரமான நோயாகும். அதில் டைப் 1, டைப் 2, கெஸ்டேஷனல் டயபட்டிஸ் என்றெல்லாம் உண்டு. இந்த நோய் முற்றினால் அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். இதன் கடுமையின் காரணமாக, கண் பார்வை போகலாம், கை, கால் விரல்கள் போன்ற உறுப்புகளில் ரத்த ஓட்டம் நடைபெறாமல், அந்த உறுப்புகளை வெட்டி எடுக்க நேரிடலாம், சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம், செயலிழக்கலாம், இதய அடைப்பு ஏற்பட்டு இறக்கலாம், இன்னும் என்னென்னவோ நடக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால் அது பாண்டோரா பெட்டியைத் திறந்த மாதிரி. எல்லா நோய்ச்சனியன்களும் ஒவ்வொன்றாக வந்து கடைசியில் உயிரைக் குடித்துவிடும்.

ஆனால், ஆங்கில மருந்து மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டால், இன்சுலின் ஊசிகள் போட்டுக்கொண்டிருந்தால், உடற்பயிற்சிகள் செய்து உடல் குண்டாகாமால் பார்த்துக்கொண்டால், உணவில் கட்டுப்பாடு இருந்துகொண்டே இருந்தால், வாழும் நாளெல்லாம் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கலாம். ஆனால் இதைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ முடியாது.

உலகம் முழுவதும் ஆங்கில மருத்துவத்தின் பார்வை, அணுகுமுறை மற்றும் செயல்பாடு இதுதான். உலக மக்களில் பெரும்பாலோர் இதைத்தான் நம்புகிறார்கள். ஒரு நம்பிக்கை வெல்லும், ஒரு நம்பிக்கை கொல்லும் என்பதை நாம் அறிவோம். சர்க்கரை நோய் பற்றிய நம் நம்பிக்கை, ஆங்கில மருத்துவ உலகம் இந்த உலகுக்குக் கொடுத்திருக்கும் கொல்லும் நம்பிக்கையாகும்.

ஆங்கில மருத்துவம் எப்படி, எந்த அளவுக்குத் தவறானது என்பதற்கு, ஒரு நோயாளியின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை பார்க்கலாம். பிரபலமான ஒரு ஆங்கில மருத்துவர் எழுதிய நூலிலிலிருந்து எடுத்து இதை நான் மேற்கோள் காட்டுகிறேன். இதோ அந்த நோயாளி எழுதிய கடிதம்.

‘‘எனக்கு 58 வயதாகிறது. முப்பது ஆண்டுகளாக எனக்கு டயபட்டிஸ் இருக்கிறது என்று கண்டுபிடித்தார்கள். டெஸ்ட்டுகள் அனைத்தையும் முடித்து, இறுதியாக மருந்துகளை எழுதிக்கொடுத்த டாக்டர்கள், ‘இந்த நீரிழிவு மாத்திரைகளை நாள் தவறாமல் உட்கொண்டு வர வேண்டும். தவறினால் உயிருக்கு ஆபத்து’ என்று அறிவுரை கூறினார்கள். ஆகவே, தொடர்ச்சியாக மருந்துகளை உட்கொண்டு வந்தேன்.

‘‘மாதங்கள் செல்லச் செல்ல, மாத்திரைகளையும் மீறி, எனது டயபட்டிஸ் அதிகமாகியது. ஆரம்பத்தில், மாத்திரைகளின் அளவை அதிகரித்தார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஓரளவுக்குக் கட்டுப்பட்டது. அடுத்த ஓரிரு மாதங்களில் மீண்டும் சர்க்கரையின் அளவு அதிகமாகியது.

‘‘நான் முறையாகச் சாப்பிடவில்லை என்று கூறி, கடுமையான பத்தியத்தை என் மீது கட்டாயமாக்கினார்கள். நானும் என் உடல் நலத்தின் மீது அக்கறைகொண்டு, என்னுடைய நீரிழிவு சிறப்பு மருத்துவர் என்ன அறிவுரை கூறினாரோ, அதன்படி கடுமையான பத்தியத்தை மேற்கொண்டேன்.

‘‘ஒருநாள்கூட என் பசிக்குரிய ஆகாரத்தை என் வயிற்றுக்கு நான் கொடுக்கவில்லை. எப்போதும் அரைகுறை உணவுடனும், எந்த நேரத்திலும் பசியுடனும், பட்டினியுடனும்தான் என் வாழ்க்கையை நடத்தி வந்தேன்.

‘‘இவ்வாறாக, பத்துப் பதினைந்து ஆண்டுகள் கழிந்தன. ஆனாலும், டயபட்டிஸ் குறையவே இல்லை. மாத்திரைகள் மாற்றப்பட்டன. ஒன்றுக்கு மேல் பல மருந்துகள் சேர்க்கப்பட்டன. தொந்தரவுக்கு மேல் தொந்தரவுகள், என் உடலின் பல பாகங்களிலும் தோன்ற ஆரம்பித்தன.

‘‘பசி குறைய ஆரம்பித்தது. வயிற்றில் புண்கள் ஏற்பட்டன. அவ்வப்போது மார்பின் கனமும், படபடப்பும், இரவு நேரங்களில் தூக்கமின்மையும், கைகால்களில் வலியும், மதமதப்பும் தோன்றி என்னைப் பாடாய்ப்படுத்தின. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே மருந்துகளைக் கொடுத்தார்கள். என் நிலை முன்பைவிட மோசமாகியது. இப்போது, மருந்து மாத்திரைகள் போதாதென்று கூறி, இன்சுலின் ஊசியைப் பரிந்துரை செய்தார்கள்.

‘‘பத்து ஆண்டுகளுக்கு முன்பாக இன்சுலின் ஊசி போட ஆரம்பித்தேன். நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் கூறிய அத்தனை அறிவுரைகளையும் உடல் நலம் காத்துக்கொள்ளவேண்டி இதுநாள்வரையிலும் கருத்துடன் பேணி வந்தேன்.

‘‘உடற்பயிற்சி செய்யச் சொன்னார்கள். பத்தியத்தையும் அதிகப்படுத்தினார்கள். இவ்விரண்டும் என்னை மிகவும் சோர்வுக்குள்ளாக்கியதால், ‘மிகவும் பலவீனமாக உணர்கிறேன்’ என்று டாக்டரிடம் சொன்னபோது, ‘நீங்கள் கண்டிப்பாக பத்தியத்தையும் விடக்கூடாது, உடற்பயிற்சியையும் விடக்கூடாது. இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதையும் விட்டுவிடக்கூடாது. தொடர்ச்சியாக அதைப் போட்டுவர வேண்டும். தொடர்ச்சியாக ‘செக்அப்’புக்கும் வர வேண்டும். ஏனென்றால், உங்களை அறியாமல் டயபட்டிஸ் அதிகமாகும்போது, இன்சுலின் மருந்துகளை மாற்றவும் நேரிடலாம். அதிகப்படுத்த வேண்டியும் ஆகலாம்’ என்று கூறினார்.

‘‘ஆகவே, டாக்டர்கள் அறிவுரைப்படியே என் வாழ்க்கையை வெகு சிரமத்துக்கு இடையே வாழ்ந்துகொண்டிருந்தேன். ஐந்து ஆண்டுகள் இவ்விதம் கழிந்தன. என் இடது காலில் ஒரு புண் ஏற்பட்டது. உடனே டாக்டரிடம் காண்பித்தேன். மாத்திரைகள் எழுதிக்கொடுத்தார். புண் ஆறவில்லை. மேலும் பெரிதாக ஆரம்பித்தது. ‘டயபட்டிஸ் நோயின் தீவிரத்தினால் இப்படி ஆகியிருக்கிறது. காலை வெட்டிவிட வேண்டும். இல்லையென்றால் உயிர் போய்விடும்‘ என்று பயமுறுத்தினார்கள்.

‘‘நான் அவர்களிடம் கேட்டேன். ‘எனக்கு டயபட்டிஸ் வந்து கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகின்றன. நோய் ஆரம்பித்ததில் இருந்து உங்களிடம்தான் காட்டிக்கொண்டிருக்கிறேன். மருந்து மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும், இல்லையென்றால் உயிர் போய்விடும் என்று அன்றும் சொன்னீர்கள். பின்பு மாத்திரைகளை அதிகப்படுத்தி உணவில் பத்தியத்தையும் தீவிரப்படுத்தச் சொன்னீர்கள். ‘எனக்கு அதிகமாக பசிக்கிறது’ என்று சொன்னபோது, ‘அப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது, டயபட்டிஸ் முற்றிவிடும், உயிர் போகலாம்’ என்று சொன்னீர்கள். அந்தக் கடுமையான பசியையும் தாங்கிக்கொண்டேன்.

‘‘அப்படியும் என் டயபட்டிஸ் குறையாமல் இருக்கவே, நான் உங்களிடம் அதுபற்றிக் கேட்டபோது, ‘டயபட்டிஸ் நோயை கட்டுப்பாட்டில் மட்டும்தான் வைக்கமுடியும். குணப்படுத்த முடியாது’ என்று சொன்னீர்கள்.

‘‘என்னுடைய டயபட்டிஸ் கட்டுப்பாட்டில்கூட இல்லையே என்று கேட்டபோது, நான் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டுமென்றும், அப்போதுதான் சர்க்கரை குறையும் என்றும் கூறினீர்கள். கடுமையான பத்தியத்தினால் ஏற்பட்ட சோர்வையும் மீறி நான் உடற்பயிற்சிகளைச் செய்தேன்.

‘‘பின்னரும் நோய் அதிகமானது. அந்த நிலையில்தான் காலில் புண் ஏற்பட்டது. அப்போது இன்சுலின் ஊசியை அதிகப்படுத்தி, புண்ணுக்கான மருந்துகளையும் கொடுத்தீர்கள். பத்தியத்தை மேலும் அதிகப்படுத்தினீர்கள். ஏறக்குறைய நான் இறக்கும் நிலைக்கு வந்துவிட்டேன். இப்போது என் இடது காலை வெட்டாவிட்டால் நான் இறந்துவிடுவேன் என்று சொல்கிறீர்கள்.

‘‘நான் இப்போது உங்களிடம் தெளிவாகக் கேட்கிறேன். என்னைக் குணப்படுத்த முடியுமா முடியாதா?’’

‘‘இந்த நோய் இப்படித்தான் முடியும். வேறு வழியில்லை. காலை வெட்டிவிட்டால் இன்னும் கொஞ்ச நாளைக்கு வாழலாம். அவ்வளவுதான் சொல்லமுடியும் என்று கூறினார்.

‘‘என் இடது காலும் வெட்டப்பட்டது. என்னுடைய நிலை முன்னேறவே இல்லை. கடுமையான பத்தியம், பலவீனம், ஒரு கால் இழப்பு – இவற்றின் காரணமாக ஒரு மாதத்துக்கு முன்பாக நான் கீழே விழுந்துவிட்டேன். டாக்டரிடம் சொன்னபோது வலி மாத்திரைகளைத்தான் எழுதிக்கொடுத்தார்.

‘‘வலி மாத்திரைகளைச் சாப்பிட ஆரம்பித்த இரண்டு நாட்களில் எனக்கு சிறுநீர் பிரிவதில் கோளாறு ஏற்பட்டது. சிறுநீர் போவது குறைந்துபோனது. கால்கள், கைகள், முகம் யாவும் வீங்கிவிட்டது. வயிறும் பானைபோல் உப்பிவிட்டது.

‘‘நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர் என்னைப் பரிசோதித்துவிட்டு, என் சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்துவிட்டதாகச் சொன்னார்! ‘டயபட்டிஸுக்காக இன்சுலின், மருந்து மாத்திரைகள் எடுக்கும்போதும் இது தவிர்க்க முடியாதுதான். யாருக்கு எந்த நேரத்தில் சிறுநீரகங்கள் பழுதாகும் என்று சொல்லமுடியாது. ஆனால் நிச்சயம் பழுதாகும். உங்களுக்கு இதயமும் மிகவும் பலவீனமாக இருக்கிறது. அதுவும் எந்த நேரமும் செயலிழந்துபோகலாம். எனவே ஒரு கார்டியாலஜிஸ்ட் உங்களைப் பரிசோதிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, உடனடியாக உங்களுக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும். இன்றே நீங்கள் அட்மிட் ஆக வேண்டும்’ என்று அவர் கூறியபோது, உயிர் போய்விடும், உயிர் போய்விடும் என்று பயமுறுத்தியே கொல்கின்றனரே என்று ஆங்கில மருத்துவத்தையே வெறுத்தேன். உங்களுடைய வைத்தியமே வேண்டாம் என்று வீட்டுக்கு வந்துவிட்டேன்.

‘‘மூன்று மாதங்களாகிவிட்டன. மருந்து, மாத்திரைகள், ஊசிகள் அனைத்தையும் முழுமையாக விட்டுவிட்டேன். சிறுநீர் பிரிந்துகொண்டிருக்கிறது. கால்களில் வீக்கமும், வயிறு உப்புசமும் இன்னும் குறையவில்லை.

‘‘ஆனாலும் இந்த மூன்று மாதங்களும் வைத்தியத்தில் இருந்தபோது எந்த நிலையில் இருந்தேனோ, அதைவிட உடல் நிலையிலும், மனநிலையிலும் நிச்சயமாகத் தேறி இருக்கிறேன். மருந்து, மாத்திரை, ஊசிகளின் பக்கவிளைவுகளில் இலிருந்து விடுபட்டுவிட்டதன் காரணமாகவே நான் தேறியிருக்கிறேன் என்று கருதுகிறேன். ஏனென்றால், இப்போதெல்லாம் குமட்டல், வாய்க்கசப்பு ஏதும் இல்லை. உணவைப் பார்த்தாலே வெறுப்பு என்ற நிலை மாறி, உணவை விரும்பி, ருசித்து சாப்பிட்டு வருகிறேன். என் உடல் நிலை மோசமாகிக்கொண்டிருந்தாலும், என மனநிலை ஆரோக்கியமானதாகவே இப்போது இருக்கிறது’’ என்று அவர் கடிதத்தை முடிக்கிறார் (பக்கம் 84-88)!

இந்தக் கடிதம் ஒரு சாம்பிள்தான். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்கில மருத்துவத்தால் இன்னும் நிறைய (தீமைகளைச்) செய்யமுடியும்! இதைப் படிக்கும் சர்க்கரை நோயாளிகள் தங்கள் அனுபவத்தை இக்கடிதத்தில் சொல்லப்பட்டவற்றோடு நிச்சயம் பொருத்திப் பார்க்க முடியும்.

ஆங்கில மருத்துவராக வாழ்வைத் தொடங்கி, பின்னர் அதை வெறுத்து ஒதுக்கி, அதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி, இந்திய அக்குபங்சர் மருத்துவத்தின் தந்தை என்ற புகழ்ப்பெயருக்கு உரியவரும், தற்போது இறைவழி மருத்துவத்தின் மூலம் நோயாளிகளை குணப்படுத்தி வருபவருமான டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மானின் BP, டயாபடிஸ் நோயாளிகளே, உங்கள் நலனுக்காக என்ற நூலில் இருந்துதான் இக்கடிதம் எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

Story image

நோயாளியின் பெயரையும், அவருக்கு மருத்துவம் பார்த்த பிரபல மருத்துவமனையின் பெயரையும், டாக்டர் பெயரையும்கூட ஃபஸ்லுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். தனி மனித எதிர்ப்போ, தனியொரு மருத்துவமனை மீதான எதிர்ப்போ நமக்குக் கிடையாது. ஆனால், உலகெங்கும் புகழ்பெற்ற ஆங்கில மருத்துவத் துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த அனுபவங்கள் நிச்சயம் உதவும்.

ஆங்கில மருத்துவத்தை ‘சமூக துரோக மருத்துவம்’ என்றும், ‘குற்றவாளி மருத்துவம்’ என்றும் டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் வர்ணிக்கிறார். ரௌத்ரம் பழகு என்று பாரதி சொன்னதுபோல, அவருடைய கோபத்தில் ஒரு நேர்மையும் சமுதாய அக்கறையும் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக உண்மையும், அதைச் சொல்லும் துணிச்சலும் இருக்கிறது. அவரைப்போலவே உலகப் புகழ்பெற்ற பல ஆங்கில மருத்துவர்களும் சமீபமாக ஆங்கில மருத்துவத்துக்கு எதிராகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர்கள் சொல்வது இருக்கட்டும். டயபட்டிஸ் பற்றி ஆங்கில மருத்துவம் சொல்பவையெல்லாம் அறியாமையில் விளைந்த பொய்களே என்பதை இதுவரை புரிந்துகொண்டிருப்பீர்கள். உண்மையில், டயபட்டிஸ் என்பது என்ன மாதிரியான நோய், அது ஏன் ஏற்படுகிறது, எப்படி ஏற்படுகிறது, கணையம், மண்ணீரல், சிறுநீரகங்கள், வயிறு ஆகியவற்றுக்கும், உணவு ஜீரணமாவதற்கும் டயபட்டிஸுக்கும் உள்ள தொடர்பு என்ன, இது எப்படி ஒரு நோயே அல்ல, அல்லது இது வந்துவிட்டதாக நிச்சயமாகத் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும், இது வராமலே தடுப்பது எப்படி, வந்தால் நிரந்தரமாகவும் பரிபூரணமாகவும் குணப்படுத்துவது எப்படி என்பதையெல்லாம் இனி பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.