எழுதி அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. எழுதியவரும் காலமாகி முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. சர்ச்சைகளும் கோபதாபங்களும் மறைந்து, புண் ஆறியது போல் ஆறி, வடுவும் காணாமலாகி அந்த இடத்தில் புதுத் தோல் வளர்ந்து விட்டது. ‘அம்மா வந்தாள்’ அது வெளிவந்த காலத்தில் எப்பேர்ப்பட்ட அதிர்ச்சியையும் அசூயையும் எதிர்ப்பையும் உண்டாக்கியிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். இவ்வளவுக்கும் அதில் எழுதப்பட்ட இடங்கள் நிஜம்; பாத்திரங்களின் மூலகங்களும் எதார்த்த வாழ்க்கையில் தென்படுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் அதை எழுதியவருக்கு என்ன ஆக்கினையெல்லாம் நடந்திருக்கும் என்பதை இப்போது யூகிக்க முடிகிறது. தி.ஜா.வின் ‘மோகமுள்’ நமக்குள் உன்னதமான உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதனால் தி.ஜா. உன்னதங்களைப் பற்றி மட்டுமே எழுதினார் என்று அர்த்தமல்ல. ‘மோகமுள்’ அவரது எழுத்து வாழ்வில் ஒரு புள்ளி. மற்றபடி அவருடைய எழுத்தும் வாழ்க்கையும் முழுக்க முழுக்க பெரும் கலகமாகவே இருந்திருக்கிறது. ஏன் வாழ்க்கையையும் சேர்த்துக்கொண்டேன் என்றால், இந்தப் பத்தியில் இதுவரை எழுதப்பட்ட முன்னோடிகளின் வாழ்க்கையிலிருந்து அவர்களின் எழுத்தைப் பிரிக்க முடியாமலிருக்கிறது. இதற்கு ஆதாரமாக சிலரது கருத்துக்களைப் பார்ப்போம். கரிச்சான் குஞ்சுவின் கட்டுரையில் உள்ள விபரம் இது:
‘அம்மா வந்தாள்’ நாவலில் வரும் பாடசாலை – அதை ஏற்படுத்திய அம்மாள் – அங்கு ஒரு பெண் இருந்தது முதலிய அம்ஸங்கள் நிஜமானவை. ஜானகியின் அண்ணா அந்தப் பாடசாலையில் வேதக்கல்வி கற்றதும் முற்றும் உண்மை. ஆனால் அவன் செய்யும் கதைக்கும் இந்த மூலங்களுக்கும் துளிக்கூட சம்பந்தமில்லை. அந்த நாவலைப் படித்து அவனுடைய தமையனார் மிகவும் வருத்தப்பட்டார். எனக்கும் அதைப் படிக்கும்போது வருத்தம்தான். (ஒருமுறை நான் உயர்திரு. கி.வா.ஜ.வுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஜானகிராமனுக்கு ஏன் ஸாஹித்ய அகாடமி அங்கீகாரம் இல்லை என்று கேட்டு விவாதித்தேன். எல்லாருமே ‘Bad taste’ என்று கூறினார்கள் என்றார்.) ‘அம்மா வந்தாள்’ என்னுள் ஏற்படுத்திய உணர்வும் இத்தகையதே. அந்த நாவலைப் பற்றியும், அவன் தமையனார் அடைந்த வருத்தத்தைப் பற்றியும், புனிதமான ஒரு பாடசாலை, வேதாத்யயனம், தர்மம் செய்த ஓர் அம்மாள் போன்ற விஷயங்களை அவன் தூய்மை கெடுத்துவிட்டான் என்ற என் கருத்தையும் அவனுக்குக் கடிதம் எழுதினேன். கோபமாகப் பதில் எழுதினான். ஆனால் அவன் எழுதிய ஒரு வாக்கியம், உண்மையிலேயே அவனுடைய குற்ற உணர்ச்சியைக் காட்டுகிறது. ‘நான் ஒரு பாசாண்ட எழுத்தாளன் ஆகிவிட்டேன். என் அண்ணாவும், உன்னைப் போன்ற ஜடங்களும் என்னிடம், என் எழுத்தைப் பற்றி, அதன் ஏன், என்ன என்பது பற்றிக் கேட்பது தவறு; வாயை மூடிக்கொள்’ என்பதே அந்த வாக்கியம். பிறகு பலகாலம் கழித்து ‘மரப்பசு’ வந்தது. அண்ணாக்காரர் அதைப் படிக்கவே மறுத்துவிட்டார். பிறகு படித்துப் புரிந்தும் புரியாமலும் கண்டபடி பேசி துயருற்றார். நான் அதிர்ந்து போனேன். அதைப் படித்து அம்மணி என்ற பாத்திரம், இன்னும் நூறு வருஷங்கள் ஆன பிறகும் அந்தச் சுழலில், குடும்பத்தில், அதுவும் கும்பகோணத்தில் அருகில் உள்ள கிராமத் தொடர்பில் பிறக்கவே முடியாது என்று கடுமையாக விமர்சித்து எழுதினேன். பதிலே எழுதவில்லை. அவன் பிறகு திடீரென்று அவன் குடும்பத்தில் நேர்ந்த ஒரு எதிர்பாராத விளைவுக்குப் பிறகு எழுதினான். ஏதோ ஒரு ஹிந்திப்படத்தைத் தன் மாப்பிள்ளையோடு பார்த்ததாகவும், அண்ணா, நான் போன்ற போலிகள் அதைப் பார்த்துத் திருந்த வேண்டும் என்றும் எழுதினான்.’
கரிச்சான் குஞ்சுவின் இந்த வார்த்தைகளிலிருந்து தி.ஜா. எப்பேர்ப்பட்ட எதிர்ப்பை சமாளித்திருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். கரிச்சான் குஞ்சு சொல்வது போல் தி.ஜா.வுக்கு ஒன்றும் குற்ற உணர்ச்சி ஏற்படவில்லை. ஒரு முழுமையான மூட சமூகத்துக்கு எழுதிக் கொண்டிருக்கிறோமே என்ற வேதனையும் துயரமும் கோபமும்தான் அவரது கடிதத்தில் வெளிப்படுகிறது. தி.ஜா.வை அவரது சமூகம் ஜாதிப் பிரஷ்டம் செய்து வைத்தது என்றே நம்மால் இன்று யூகிக்க முடிகிறது.
இன்னொரு சம்பவம் கோயம்பத்தூரில் நடந்த முதல் எழுத்தாளர் மாநாட்டுக்கு கரிச்சான் குஞ்சுவும், தி.ஜா.வும் போயிருந்தபோது நடந்தது. மாநாட்டுத் தலைவர் கல்கி. ஒவ்வொரு எழுத்தாளரும் மேடைக்கு வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். தி.ஜா., கரிச்சான் குஞ்சுவையும் மேடைக்கு அழைத்துக்கொண்டு போய், நாங்கள் புதிய எழுத்தாளர்கள்; விரைவில் தமிழகத்தின் பெர்னார்ட்ஷாவாக மலரப் போகிறவர்கள் என்று சொல்லியிருக்கிறார். அப்போதுதான் கல்கி அண்ணாத்துரையை தமிழகத்தின் பெர்னார்ட் ஷா என்று சொல்லியிருந்தார். மேலும் கல்கியைத் தாக்கும் விதமாக, நாங்கள் ஒரிஜினலாக சிந்தித்து எழுதப் போகிறோம் என்றும் சொல்லியிருக்கிறார் தி.ஜா. அதாவது, கல்கி அலெக்ஸாந்தர் துய்மா, சர் வால்டர் ஸ்காட் போன்றவர்களைக் காப்பி அடித்து எழுதுவதாக புதுமைப்பித்தன் ‘ரஸ மட்டம்’ என்ற பத்தியில் எழுதியிருந்தார். அதைத்தான் மாநாட்டில் சுட்டிக் காட்டி கல்கியைத் தாக்கினார் தி.ஜா. இது பற்றி கல்கி மிகவும் பாதிக்கப்பட்டுப் பேசியதாக எழுதுகிறார் கரிச்சான் குஞ்சு.
இந்த மேற்கோள்கள் எல்லாமே 1982-ல் வெளிவந்த ‘யாத்ரா’ என்ற இலக்கியச் சிறு பத்திரிகையின் தி.ஜா. நினைவுச் சிறப்பிதழில் இடம் பெற்றவை. அக்கட்டுரைகள் யாவும் ‘சொல்வனம்’ இணைய இதழில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சொல்வனம் நண்பர்களுக்கு என் பிரத்தியேக நன்றி. அதே ‘யாத்ரா’வில் தி.ஜா.வின் கல்லூரி நண்பரும் ‘மோகமுள்’ நாவலில் பாபுவின் கல்லூரி நண்பனாக வருபவருமான எம்.வி. வெங்கட்ராம் எழுதுகிறார். எம்.வி.வி.யும் தி.ஜா.வும் 1936-லிருந்து 1940 வரை கும்பகோணம் அரசினர் கல்லூரியில் சக மாணவர்களாக இருந்திருக்கிறார்கள். ‘மோகமுள்’ நாவலிலும் இதே காலகட்டம்தான் வருகிறது.
‘கல்லூரிப்படிப்பு முடிந்ததும், அவரைப் போல் எனக்குக் கட்டுக்கோப்பான வாழ்க்கை அமையவில்லை. அவர் அய்யம்பேட்டையில் பள்ளி ஆசிரியரானார். நான் மிலிடரி அக்கவுண்ட்சில் சேர பூனாவுக்குப் போய்விட்டேன். அங்கே இருப்புக் கொள்ளாமல் 1943-ல் நான் திரும்பியபோது கும்பகோணம் ஓர் இலக்கிய க்ஷேத்திரமாகி இருந்தது. துறையூரிலிருந்து வெளிவந்த ‘கிராம ஊழியன்’ ஆசிரியராக கு.ப.ரா. கும்பகோணத்தில் இருந்தார். அவரைச் சுற்றிலும் ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, சாலிவாகனன், திரிலோக சீதாராம், இன்னும் பல எழுத்தாளர்கள். என்னுடைய வருகையால் கு.ப.ரா. மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். புதிதாய்ப் பத்திரிகை தொடங்க விரும்பிய என்னைத் தடுத்து தமது பத்திரிக்கையைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கூறினார். இந்தக் கால கட்டத்தில் ஜானகிராமனுக்கும், எனக்கும் இருந்த நெருக்கம் மிகுந்தது. கு.ப.ரா., ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, நான் ஆகிய நால்வரும் கும்பகோணம் தொண்டர் ஷாப்பிலோ, கு.ப.ரா. வீட்டு மாடியிலோ, கணபதி விலாஸ் ஹோட்டலிலோ கூடிப் பேசிக் கழித்த மாலைகளும், இரவுகளும் எத்தனை!’
‘அப்போது ‘மாதம் ஒரு புத்தகம்’ வெளியீடுகள் பிரபலமாக இருந்தன. நான் அப்படி ஒரு வெளியீடு தொடங்க வேண்டும் என்று கரிச்சான் குஞ்சு சொல்லிக்கொண்டிருந்தார். ஜானகிராமனைக் கலந்தபோது மாதப் பத்திரிகையாக நடத்தலாம் என்று கூற, அப்படியே முடிவு செய்தோம். ‘தேனீ’ இப்படித்தான் ஆரம்பமாயிற்று. கரிச்சான் குஞ்சு உள்ளூர்க்காரர். எனக்குத் துணையாக இருந்தார். ஜானகிராமன் அய்யம்பேட்டையில் இருந்தார். விடுமுறை நாளன்று எங்கள் வீட்டில்தான் இருப்பார். ‘தேனீ’க்காக நான் போட்ட திட்டத்தைவிட, அவர் போட்ட திட்டம் மகாப் பெரிது.
‘தேனீ’க்காக விளம்பரம் சேகரிப்பதற்கென்று நான் ஜானகிராமனை அழைத்துக்கொண்டு பம்பாய் போனேன். வழியில், புனாவில் அவருடைய மாமனார் - ராணுவத்தில் காப்டன் – பங்களாவில் தங்கினோம். ‘தேனீ’யில் மணிக்கொடி எழுத்தாளர்கள் பலரின் ஒத்துழைப்பு இருந்தது. புதுமைப்பித்தனையும் எழுத வைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அவர் தியாகராஜ பாகவதரின் ‘ராஜமுக்தி’ என்ற படத்திற்கு வசனம் எழுதப் பூனாவுக்குப் போயிருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் அவருடைய முகவரி எங்களுக்குக் கிடைக்கவில்லை. நாங்கள் இருவரும் பூனாவில் சுற்றி அலைந்து புதுமைப்பித்தன் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்தோம். எங்களுடைய துர்பாக்கியம், இரண்டு நாளுக்கு முந்திதான் அவர் முற்றிய நோயாளியாகத் திருவனந்தபுரம் சென்றுவிட்டதாகத் தெரிந்தது. பிறகு, நாங்கள் பம்பாய்க்குச் சென்று சில நாட்கள் தங்கி விளம்பர நிறுவனங்கள் சிலவற்றை அணுகினோம். நாங்கள் இருவருமே இத்துறைக்குப் புதியவர்கள். யாருடைய ஆலோசனையும் கேளாமல் களத்தில் இறங்கியிருந்தோம். எங்களுக்கு விளம்பரம் கிடைக்கவில்லை. எங்களை விளம்பரம் செய்ய எங்களிடமே பணம் பறிக்க முயன்றார்கள். எல்லா வகையிலும் பம்பாய்ப் பயணம் படுதோல்வி. ஊருக்குத் திரும்பிவிட்டோம்.
‘தேனீ’ பன்னிரண்டு இதழ்களே வெளிவந்தன. ஒவ்வொரு இதழிலும் அவருடைய கதைகள் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அவ்வாறே எழுதிக் கொடுத்தார். ‘தேனீ’யில் ஸீரியஸான கதைகள் வருகின்றன. லைட்டாக ஏதாவது எழுதுங்கள் என்றேன். அவரால் முடியாது என்பது என் எண்ணம். ஆனால், அழகான நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதிக்கொண்டு வந்து என்னைத் திகைக்க வைத்தார். ‘தேனீ’யில் நான் எழுதியது கொஞ்சம். ஜானகிராமனின் கைவண்ணம்தான் அதிகம்.’
இவ்வளவு விரிவான இந்த மேற்கோள்களுக்குக் காரணம், இந்திய தேச விடுதலைக்காகப் போராடிய தியாகிகளின் அதே தீவிரத்துடனும் தியாகத்துடனும் போராடியிருக்கிறார்கள் அந்தக் காலத்து எழுத்தாளர்கள். அவர்களுடைய அந்தப் போராட்டத்தினால்தான் உலகில் எந்த மொழியிலுமே இல்லாத அளவுக்கு வளமான இலக்கியம் தமிழில் உண்டாகியிருக்கிறது. ஒரு மொழியில் ஒரு காலகட்டத்தில் ஒன்றிரண்டு சாதனையாளர்கள் தோன்றுவதுதான் உலக இயற்கை. ஆனால் தமிழ் இலக்கியத்தில் ஒரே சமயத்தில் டஜன் கணக்கில் மாபெரும் எழுத்தாளுமைகள் உருவானார்கள் என்றால் அதற்குக் காரணம், நமது முன்னோடி எழுத்தாளர்களின் போராட்டமும் தியாகமும்தான்.
இந்தப் போராட்டக்காரர்களில் முதன்மையான கலகக்காரராக தி.ஜானகிராமனைச் சொல்லலாம். சொல்வனத்தில் வெளியாகியுள்ள தி.ஜா. பற்றிய அசோகமித்திரனின் நேர்காணலில் அவர் குறிப்பிடும் ஒரே ஒரு விஷயம் போதும், தி.ஜா.வின் கலகம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள. கணையாழியில் தி.ஜா.வின் ‘மரப்பசு’ வெளியாகிக் கொண்டிருந்த நேரம். (பொதுவாக பதிப்பாளர்கள் ஒரு எழுத்தாளரின் குறிப்பிட்ட நூல் முதல் முதலாக எந்த ஆண்டு எழுதப்பட்டது/வெளியிடப்பட்டது என்ற முக்கியமான தகவலை விட்டு விடுகிறார்கள். மிகுந்த சிரமப்பட்டே மரப்பசு கணையாழியில் 1972-73-ல் வெளிவந்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.) அப்போது பொள்ளாச்சி நா. மகாலிங்கம் கணையாழியின் சந்தாவையே ரத்து செய்து விட்டதாக அசோகமித்திரன் அந்த நேர்காணலில் குறிப்பிடுகிறார். அந்த அளவுக்கு சனாதனிகளைக் கோபப்படுத்தியிருக்கிறது தி.ஜா.வின் எழுத்திலுள்ள கலகம். ஆனால் தனிப்பட்ட முறையில் தி.ஜா. ஒரு ஞானியைப் போல் இருந்திருக்கிறார்.
‘ஜானகிராமன் யாரையும், எதனையும் மிகைப்படுத்தி வருணிப்பார். போற்றுவதும் அப்படித்தான், தூற்றுவதும் அப்படித்தான்.
கு.ப.ரா.வைப் போல் ஜானகிராமனுக்கும் சன்னக்குரல். இருவருமே சற்றே நாசி வழியாகப் பேசுவது போல் இருக்கும். இருவருமே குரலைத் தூக்கிப் பேசியதை நான் கேட்டதில்லை. ஆனால் இருவருடைய பேச்சிலும் மென்மை இருந்தாலும் அழுத்தம் இருக்கும்’ என்கிறார் எம்.வி. வெங்கட்ராம். .
தி.ஜா. பற்றிய சிட்டியின் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:
‘தன்னைக் கடுமையாகத் தாக்கியவர்களை அவர் மிகப் பெரியவர்களென்ற முறையில்தான் நோக்கினார்.’
‘எழுத்தாளராகவோ, இலக்கியகர்த்தாவாகவோ நடந்து கொள்ளத் தெரியாத ஜானகிராமனிடம் காணப்பட்ட பெருங்குறை, அவர் தம்முடைய படைப்புகளைப் பற்றிப் பேசாததுதான். பொதுவாக, தம்முடைய எழுத்தைப் பற்றி பேட்டிகளிலோ, கூட்டங்களிலோ பேசும் வாய்ப்புகள் அல்லது நிர்ப்பந்தங்கள் ஏற்படும்போதெல்லாம் எப்படியாவது இலக்கியப் பொதுமையைப் பற்றிப் பேசிவிட்டுத் தன்னுடைய சாதனையைக் குறிப்பிடாமல் விட்டுவிடுவது அவருக்குக் கைவந்த கலை. அவர் சென்னை ரேடியோவில் கல்வி ஒலிபரப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, அவருடன் நெருங்கிப் பழகியதில் அவரை ஒரு இளைய சகோதரனாகப் பாவிக்கும் உணர்வு ஏற்பட்டதும் அவருடைய பரிவினாலும் அன்பினாலும்தான். அவர் மயிலையின் வடகோடியில் வசித்துவந்தார். நான் மந்தைவெளியில் மாலை வேளைகளில் வீட்டுக்கு வந்து அளவளாவி விட்டுச் செல்பவரை வழியனுப்ப லஸ் வரை பேசிக்கொண்டே போவோம். அங்கிருந்து நான் விடைபெறும்போது என்னை வழியனுப்ப அவர் திரும்பவும் கூட வருவார். கடைசியில் கபாலி தெப்பக் குளக்கரை படிகளில் உட்கார்ந்து இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருப்போம். இது பெரும்பாலும் நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சி, இலக்கியப் படைப்பில் என்னென்ன சாதிக்க வேண்டும், மற்ற ஐரோப்பிய மொழிகளில் எவ்வாறு சிறந்த படைப்புகள் தோன்றியுள்ளன என்பதே பேச்சின் பொருள்.
அப்பொழுதுதான் அவருடைய மனதில் ‘மோகமுள்’ உருவாகிக் கொண்டிருந்தது. உண்மையான காதல் பக்திக்குச் சமம் என்பதைப் பற்றி அவர் விளக்க முயன்றதால் ஏற்பட்ட சர்ச்சையில் பொழுது பொன்னாகத்தான் போகும்.’
***
I Saw The Devil என்று ஒரு தென்கொரியப் படம். இதுவரையிலான என் சினிமா அனுபவத்திலேயே இந்தப் படத்தில் வருபவனைப் போன்ற ஒரு குரூரமான பாத்திரத்தை நான் பார்த்ததில்லை. இளம்பெண்களைக் கடத்திக் கொண்டு போய் வன்கலவி செய்து, அவர்களது உடல் உறுப்புகளை வெட்டித் தின்று விடுகிறான் அவன். இது அவனுக்குப் பெரும் இன்பத்தைத் தருகிறது. இலக்கியத்தில் உதாரணம் சொல்ல வேண்டுமானால் மார்க்கி தெ சாத். ஆனால் அந்தக் கொரிய சினிமாவிலும், மார்க்கி தெ சாத்-இன் பாத்திரங்களும் அசாதாரணமான மனநிலை கொண்டவர்களாக, மனநிலை பிறழ்ந்தவர்களாக இருப்பார்கள். இப்படி அசாதாரண மனநிலையில் அல்லாமல், சராசரியோடு சராசரியாய் – ஆனால் மேற்கண்ட சினிமாவிலும் எழுத்திலும் நாம் பார்த்த வன்முறை, வக்கிரம் ஆகியவற்றையெல்லாம் தூக்கியடிக்கின்ற விதத்தில் ஒரு ஆளுமை இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் ‘செம்பருத்தி’யில் வரும் பெரிய அண்ணி பாத்திரம். தி.ஜா.வின் எழுத்து கருணையை வெளிப்படுத்துகிறது என்றே எல்லோரும் சொல்கிறோம். இந்தக் கட்டுரையிலும் கூட அதுவேதான் சொல்லப்பட்டது. ஆனால் தி.ஜா.வை அப்படி ஒரு சட்டகத்தில் அடைக்க முடியாது என்று தோன்றுகிறது. தி.ஜா.வின் புகழ் பெற்ற நாவல்களை விட ‘உயிர்த்தேன்’, ‘மலர் மஞ்சம்’, ‘செம்பருத்தி’யெல்லாம் நன்றாக இருக்கும் என்று நேர்காணலில் அசோகமித்திரன் சொல்வது உண்மைதான். ‘செம்பருத்தி’ ஒரு அதிதீவிரமான இருண்மையைப் பேசும் பிரதி. கதையின் நாயகன் சட்டநாதன் எதிர்கொள்ளும் மூன்று பெண்களும் வன்மத்தின் மொத்த குறியீடாகவே இருக்கிறார்கள். (அதில் ஒருத்தி – சட்டநாதனின் மனைவி புவனா சில ஆண்டுகள் அப்படி இருக்கிறாள். பிறகு கடைசியில் திருந்தி விடுகிறாள். இருந்தாலும் தான் ஒரு காலத்தில் கொண்டாடிய தன் கணவனை அவள் படுத்தும் பாடு கொடூரமானது.) தன் எழுத்து பூராவும் பெண்மையைக் கொண்டாடிய தி.ஜா. ‘செம்பருத்தி’யில், நான் மேலே குறிப்பிட்ட கொரிய சினிமாவின் வன்முறை தன் அருகில் கூட நெருங்க முடியாது என்ற அளவில் ஒரு பெண்ணை உருவாக்குகிறார்.

சட்டநாதன் படித்துக் கொண்டிருக்கும் பருவத்தில் அவனது ஆசிரியர் தாண்டவ வாத்தியாரின் மகள் குஞ்சம்மாளைக் காதலிக்கிறான். அவளுக்கும் அவன் மீது பிரியம் உண்டு என்பதையும் தெரிந்து கொள்கிறான். இவ்வளவுக்கும் இவர்களுக்குள் ஒரு வார்த்தைப் பரிமாற்றம் கூட ஏற்படுவதில்லை. இதற்கிடையில் மளிகைக் கடை வைத்திருக்கும் சின்ன அண்ணன் முத்துசாமிக்கும் குஞ்சம்மாளுக்கும் திருமணம் ஆகிறது. காதலித்தவளே அண்ணியாக வரும் அவலத்தை மௌனமாக ஏற்றுக் கொள்கிறான். குஞ்சம்மாளும் பழசை மறந்து விட்டவளாகவே தெரிகிறாள். அறம் சார்ந்த மதிப்பீடுகளிலும் மனித மாண்புகளிலும் தீவிர நம்பிக்கை கொண்டு அதையே தன் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வரும் சட்டநாதன் அவளைத் தன் அன்னையின் ஸ்தானத்தில் வைத்து வணங்குகிறான். திடீரென்று சின்ன அண்ணன் இளம் வயதிலேயே இறந்து போக, குஞ்சம்மாள் ஒரு பெண் குழந்தையோடு விதவையாகிறாள். வீட்டின் முழுப் பொறுப்பும் சட்டநாதனின் மேல் விழுகிறது. படிப்பை விட்டு விட்டு சின்ன அண்ணனின் மளிகைக்கடையை எடுத்து நடத்துகிறான். குஞ்சம்மாளையும் அவள் குழந்தையையும் பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்கிறான். கூடவே அவனுக்கும் திருமணமாகி மனைவி புவனாவும் வந்து சேர்கிறாள். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் ஆகிறது. இதற்கிடையில் பெரிய அண்ணன் ஒரு சாட்சிக் கையெழுத்துப் போட்டு தன் சொத்தையெல்லாம் இழந்து ஓட்டாண்டியாக நான்கு குழந்தைகளுடனும் மனைவியுடனும் சட்டநாதனிடம் வந்து சேர்கிறார். அம்மா, குஞ்சம்மாள், அவள் மகள், புவனா, தன்னுடைய ஐந்து குழந்தைகள், பெரிய அண்ணன், பெரிய அண்ணி, அவர்களின் நான்கு குழந்தைகள் ஆக பத்து குழந்தைகள், ஆறு பெரியவர்கள் ஆகிய இந்தப் பெரிய குடும்பத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் ஒற்றை ஆளாகத் தாங்கிக் கரை சேர்க்கிறான்.
இந்த நாவலில் இரண்டு ஜோடி motifs ஒன்றையொன்று எதிர்த்தபடியே கதையை இழுத்துச் செல்கின்றன. ஒன்று, காமம் – அறம்; இரண்டு, நன்மை – தீமை. தி.ஜா. பெண்மையைப் போற்றியவர் என்றே நாம் இதுவரை பேசி வந்திருக்கிறோம். ஆனால் ‘செம்பருத்தி’யில் சட்டநாதன் எதிர்கொள்ளும் மூன்று பெண்களில் இருவர் தீமையின் மொத்த வடிவமாக இருக்கிறார்கள். முத்துசாமி இறந்ததுமே குஞ்சம்மாள் சட்டநாதனை வெளிப்படையாக மோகிக்கத் துவங்குகிறாள். அதுவரையிலும் கூட அவள் சட்டநாதனை மனதில் வரித்துக் கொண்டுதான் அங்கே இருந்திருக்கிறாள் என்று தெரிகிறது. சட்டநாதன் ஏன் எல்லோரிடமும் வெளிப்படையாகச் சொல்லித் தன்னைத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற தீராத கோபமும் ஆற்றாமையும் அவளுக்குள் தீயாய் எரிகிறது. பெரிய அண்ணனின் குழந்தைகள் வளர்ந்ததும் பெரிய அண்ணனின் குடும்பம் தனி வீட்டுக்குச் செல்கிறது. சட்டநாதனின் தாயும் இறந்து போகிறாள். அப்போது கிடைக்கும் தனிமையில் குஞ்சம்மாள் சட்டநாதனோடு உறவு கொள்ள முயல்கிறாள். ஒரே ஒருமுறை எனக் கெஞ்சுகிறாள். அதுவும் முடியாமல் போக வலுக்கட்டாயமாக அவனைக் கட்டி அணைக்கிறாள். இதுவே போதும்; என் வாழ்நாளை ஓட்டி விடுவேன் என்கிறாள். தன் மனைவி புவனாவிடம் எதையுமே மறைத்திராத சட்டநாதன் இதையும் அவளிடம் சொல்லி விடுகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் குஞ்சம்மாளிடம் அவன் இதைத் தெரிவிக்க நேர்கிறது. புவனாவிடம் தான் எதையுமே மறைத்ததில்லை என்கிறான். அதிர்ந்து போகும் குஞ்சம்மாள் இனி உன் முகத்திலேயே விழிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டுத் தன் மகள் வீட்டுக்குப் போய் விடுகிறாள்.
குஞ்சம்மாளின் குழந்தையைத் தன் குழந்தையாகவும், குஞ்சம்மாளைத் தன் தாயாகவும் எண்ணி வளர்த்த சட்டநாதனுக்குக் குஞ்சம்மாளின் வன்மத்தைத் தாங்க முடியாமல் போகிறது. இதே சமயத்தில் இதுவரையிலும் சட்டநாதனுக்கு மிகப் பெரும் ஆதரவாக இருந்த புவனாவும் தீமையின் வடிவாய் மாறுகிறாள். உனக்கும் குஞ்சம்மாளுக்கும் இடையில் என்ன நடந்தது என்று கேட்டுக் கேட்டு அனுதினமும் சட்டநாதனைக் குதறி எடுக்கிறாள். அந்தக் காலகட்டத்தில் சட்டநாதன் ஒரு மகாத்மாவைப் போல், ஒரு ஞானியைப் போல் பொறுமையுடனும் கருணையுடனும் புவனாவை நடத்துகிறான்.
குஞ்சம்மாள், புவனா ஆகிய இருவரிடமும் செயல்படும் வன்மம், தீமை என்பதெல்லாம் துச்சம் என்பது போல் தீமையின் மொத்த வடிவமாகவே இருக்கிறாள் பெரிய அண்ணி. ஒரு சிறிய மளிகைக் கடையை வைத்துக் கொண்டு, தன்னுடைய ஐந்து குழந்தைகளோடும், சின்ன அண்ணனின் குடும்பத்தையும், பெரிய அண்ணனின் குடும்பத்தையும் பராமரித்து, அண்ணனின் நான்கு குழந்தைகளையும் படிக்க வைத்து, பெண் குழந்தைகளுக்குத் திருமணமும் செய்து வைத்து ஒரு தியாகியாகவே வாழும் சட்டநாதனுக்கு அவள் கொடுத்ததெல்லாம் வன்மமும் தீராப் பகையும்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் நரகத்தையே அவன் கண் முன்னே காண்பிக்கிறாள் அவள்.
தி.ஜா. பற்றி இவ்வளவு எழுதியும் இன்னும் ஆரம்பிக்காதது போலவே உள்ளது. தி.ஜா.வின் இருண்மையைப் பற்றிப் பார்த்து விட்டு அடுத்த எழுத்தாளருக்குச் செல்வோம். தி.ஜா. பல நாடுகளுக்கும் பயணம் சென்று வந்தவர். பயண நூல்களையும் எழுதியவர். அதையெல்லாம் சேர்த்தால் தனிப் புத்தகமாகப் போய் விடும் என்பதால் அவற்றை நான் இந்தத் தொடரில் எடுத்துக் கொள்ளவில்லை.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

