க.நா.சு. பற்றிய தஞ்சை ப்ரகாஷ் எழுதிய நூல் இன்னமும் என் கைக்குக் கிடைக்கவில்லை. ஆனால் எம். கோபாலகிருஷ்ணன் க.நா.சு. பற்றி எழுதியுள்ள கட்டுரையில் ப்ரகாஷின் நூலிலிருந்து ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார்:
க.நா.சு குறித்த legendary கதைகள் நிறைய புழக்கத்தில் உண்டு. ‘க.நா.சு வாழ்நாளில் தீர்மானித்துக் கொண்ட ஒரு முக்கியமான சட்டம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 பக்கங்களையாவது தமிழில் சுயமாக எழுதுவது. 15 பக்கங்களேனும் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பது. 10 பக்கங்களேனும் குறைந்தது ஆங்கிலத்திலேயே புதியதாகப் படைப்பது.’ இதை 70 வயதுக்குப் பிறகும்கூட அவர் விடாது பின்பற்றினார் என்றே அவருடன் பழகிய பல எழுத்தாள நண்பர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். அதேபோல ருசியான உணவுப் பதார்த்தங்களை அதற்கென்ற விசேஷமான கடைகளுக்கு தேடிச் சென்று சாப்பிடுவார் என்றும் பல கதைகள் உண்டு. தனது 70 வயதிலும் கூட சென்னை பத்திரிகை அலுவலகங்களுக்கு எழுதிய கைப்பிரதிகளோடு அவர் நடந்து சென்றிருக்கிறார். சென்னையில் அவர் கால்படாத நூலகங்களே கிடையாது என்று சொல்ல வேண்டும். தஞ்சை ப்ரகாஷ் தரும் க.நா.சுவின் சித்திரம் சுவாரஸ்யமானது. ‘சரியாக வாராத முள்ளம்பன்றித் தலைமுடி. அறிவின் விசாலத்தை எடுத்துக்காட்டும் மேடுபள்ளங்களற்ற விரிந்த நெற்றி. படித்துப் படித்து கண்ணாடி மாற்றி மாற்றி பார்வை கூர்மை மங்கிப்போய் சுழிக் கண்ணாடி அணிந்து அணிந்து வரிவரியாகக் காணப்படும் கண்கள். சரியாக வேட்டி கட்டத் தெரியாது. எங்காவது சென்னைத் தெருக்களில். ஏதாவது ஒரு பதிப்பகத்தை நோக்கி நடந்தே அயராத கால்கள். வேர்த்துக் காதோரம் வழியும் வேர்வையுடன் கற்பனை ரதத்தில் நடந்துகொண்டேயிருக்கும். உச்சிவேளையில் எங்காவது ஒரு மரநிழலில் மௌண்ட் ரோட்டில் ஏதாவது ஒரு வேப்ப மர நிழலில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலும் நடக்கும் க.நா.சு.’
பின்வருவது அசோகமித்திரன் க.நா.சு. பற்றி எழுதியது:
‘நான் அவரை 1966 முதற்கொண்டு அறிவேன். சென்னையிலும், டில்லியிலும் அவருடைய வீட்டுக்குப் பலமுறை போனதில் பல விஷயங்கள் கேட்காமலே தெரிந்தன. ஒன்று, தினமும் தமிழிலோ, ஆங்கிலத்திலோ அவர் பத்து பக்கமாவது எழுதுவது. இரண்டாவது, அவருடைய பல ஆங்கிலக் கட்டுரைகளை சன்மானமே சாத்தியமில்லாத பத்திரிகைகளுக்கு எழுதியது. மூன்றாவது, அவருடைய பல படைப்புகள் திரும்பி வந்திருப்பது. நான்காவது, அவருடைய கையெழுத்துப் பிரதிகள் ஏராளமானவை தொகுக்கப்பட்டிருக்கின்றன. பல பகுதிகள் கொண்ட அவருடைய சுயசரிதைக் கையெழுத்துப் பிரதியை இலக்கியப் பத்திரிகை என்று அறியப்பட்டதொன்று தொலைத்துவிட்டதாகக் கூறியது. ஒரு சொல் வருத்தம் தெரிவிக்கவில்லை. அது போனது போனதுதான்.’
முந்தைய அத்தியாயங்களில் க.நா.சு. தன் புனைகதைகளை ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் பாவ்லோ கொய்லோ அளவுக்கு உலகமெங்கும் பிரபலமாகியிருப்பார் என்று எழுதியிருந்தேன். அதற்கு நிரூபணமாக அசோகமித்திரனின் கட்டுரை:
‘ஆங்கில மொழியில் க.நா.சுப்பிரமணியம் ஏராளமான கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அநேகருடைய படைப்புகளை அவர் (தமிழிலிருந்து) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவர் அமெரிக்கப் பதிப்பகம் ராண்டம் ஹவுஸ் நடத்திய ஒரு போட்டிக்காக ‘அவதூதர்’ நாவலை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியிருக்கிறார். அவருடைய நாவல் பரிசு பெறவில்லை. ஆனால் சில மாற்றங்கள் செய்தால் பிரசுரம் செய்யச் சம்மதம் என்று ராண்டம் ஹவுஸ் கடிதம் எழுதியிருந்தது. (அதை நான் பார்த்தேன்). க.நா.சு முடியாது என்று எழுதியிருக்கிறார்.’
க.நா.சு. பற்றிய இன்னொரு முக்கியமான நூல் ‘எழுதிக்கொண்டே இருந்த க.நா.சுப்பிரமணியம்’. எழுதியவர் கி.அ.சச்சிதானந்தம் – வானதி பதிப்பகம். இந்த நூலும் இப்போது கிடைக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. இந்த நூலின் பின்னிணைப்பில் க.நா.சு. எழுதிய ‘என்னைப் பாதித்த புத்தகங்கள்’ என்ற கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. அதில் அவர் குறிப்பிடும் எழுத்தாளர்கள் மற்றும் புத்தகங்கள்: நீட்ஷே, வால்ட் விட்மன், Jack London-இன் Martin Eden, James Joyce-ன் Dubliners, Ezra Pound-ன் விமரிசனங்கள், Fraud-ன் Psycho Analysis, Kipling-ன் Kim, Thomas Mann, Romain Rolland, Antole Francis, Selma Lagerlof, Vemer Von Heivenstan, Knut Hamsun, Franz Kafka, William Saroyan, Maxim Gorky, Dostoevsky, Lady Murasaki, கவிகளில் தாந்தே மற்றும் ஆங்கிலக் கவிகள், Paul Valery, Rainer Maria Rilke, Garcia Lorca. நாடகாசிரியர்களில் Benevente, Ibsen, Luigi Pirandello. இவர்களையெல்லாம் க.நா.சு. தன் கல்லூரிக் காலத்திலும் கல்லூரியை முடித்த உடனேயும் படித்து முடித்தார்.
க.நா.சு. உலக இலக்கியங்களை ஏராளமாக மொழிபெயர்த்திருக்கிறார். அவருடைய மொழிபெயர்ப்பின் தேர்வில் ஒரு முக்கியமான விஷயம் அடங்கியிருந்தது. உலக மொழிகளில் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் அவர் அமெரிக்கா, இங்கிலாந்து என்ற நாடுகளில் அப்போது பிரபலமாக இருந்தவர்களை மொழிபெயர்க்கவில்லை. கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஸ்காண்டிநேவிய நாடுகளிலிருந்துதான் அதிகம் மொழிபெயர்த்தார். அவர் மொழிபெயர்த்தவர்களில் சிலர்:

Grazia Deledda (1926-ல் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய நாவலாசிரியை), Selma Lagerlof (1909-ல் நோபல் பரிசு பெற்ற ஸ்வீடிஷ் எழுத்தாளர்), Pär Lagerkvist (1951-ல் நோபல் - ஸ்வீடிஷ் எழுத்தாளர்), Katherine Anne Porter : புலிட்ஸர் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர், ஜார்ஜ் ஆர்வெலின் இரண்டு நாவல்கள் (1984, விலங்குப் பண்ணை), Roger Martin du Gard (1937-ல் நோபல் பரிசு - ஃப்ரெஞ்ச் நாவலாசிரியர், André Gide (1947-ல் நோபல் பரிசு - ஃப்ரெஞ்ச் நாவலாசிரியர்), Knut Hamsun (1920-ல் நோபல் பரிசு – நார்வே). க.நா.சு. மொழிபெயர்த்தவர்களின் பட்டியல் மிகவும் பெரியது. காவ்யா பதிப்பகம் வெளியிட்ட 1000 பக்கங்கள் கொண்ட க.நா.சு.வின் மொழிபெயர்ப்பு நூலின் முதல் தொகுதியைப் படித்தபோது அவரது மொத்த மொழிபெயர்ப்புகள் குறைந்த பட்சம் 15000 பக்கங்கள் இருக்கும் என்று தோன்றியது. இது தவிர அவரது ‘இலக்கிய வட்டம்’ பத்திரிகையில் சுமார் 60 சர்வதேச எழுத்தாளர்களைக் குறித்து அறிமுகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
க.நா.சு.வின் மொழிபெயர்ப்பு பற்றி ஜி. குப்புசாமி இவ்வாறு கூறுகிறார்:
‘க.நா.சு. மொழிபெயர்த்த பேர்லாகர் க்விஸ்ட்டின் ‘பாரபாஸ்’, ‘அன்பு வழி’ மற்றும் ஸெல்மா லாகர்லெவ்வின் ‘மதகுரு’ போன்ற நாவல்கள் தமிழ் எழுத்தாளர்கள் பலருக்கும் பெரும் ஆதர்சமாக இருந்திருக்கின்றன. வண்ணநிலவன் தனது முதல் நாவலான ‘கடல்புரத்தில்’ முன்னுரையில் ‘அன்பு வழி’யைப் போன்றதொரு நாவலைத் தன் வாழ்நாளில் எழுதிவிட முடிந்தால் . . . என்று ஏங்குகிறார். ‘மதகுரு’ நாவலை கிருஷ்ணன் நம்பி பாராயணமே செய்துவந்ததாக சுந்தரராமசாமி கூறுகிறார். நட் ஹாம்சனின் ‘நிலவளம்’ தனது பள்ளிப் பிராயத்திலேயே எத்தகைய ஆக்கிரமிப்பை ஏற்படுத்தி உலக இலக்கியத்தின்பால் தன் கவனத்தைத் திருப்பியது என்று எஸ். ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார். ரோமன் ரோலந்தின் ‘ஜீன் கிருஸ்தஃபர்’, மார்டின் து கார்டின் ‘தபால்காரன்’, வில்லியம் ஸரோயனின் ‘மனுஷ்ய நாடகம்’, அண்டோனியோ பாகஸாரோவின் ‘கடல் முத்து’ போன்ற இலக்கியத்தின் புதிய சிகரங்களைத் தொட்ட கலைப் படைப்புகளைத் தமிழ் வாசகருக்கு க.நா.சு. அறிமுகம் செய்து ஒரு மொழிபெயர்ப்பு மரபையே தமிழில் உண்டாக்கினார்.’
இவ்வளவு மொழிபெயர்ப்பையும் க.நா.சு. ஏன் செய்தார் என்றால் தமிழில் சர்வதேசத் தரம் வாய்ந்த இலக்கியம் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான். அதே சமயம் வாசகர் இல்லாவிட்டால் எழுத்து எப்படி உருவாகும்? எனவே வாசிப்பு என்பதும் ஒரு கலை என்பதைத் தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு கட்டுரைகளின் வாயிலாக அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். இலக்கியத்தை சிருஷ்டிப்பதில் எத்தனை சிரமம் இருக்கிறதோ அவ்வளவு இல்லாவிட்டாலும் அதில் ஒரு கால்வாசியாவது சிரமம் எடுத்துத்தான் படிக்க வேண்டும். உலகத்தின் சிறந்த இலக்கியத்தைத் தேடித் தேடிப் படிப்பதன் மூலம் இலக்கியத்தை வாசிக்கும் பயிற்சி ஏற்பட்டு விடும் என்றார் க.நா.சு.
தரமான இலக்கியமும் தரமான வாசிப்பும் எப்படி சாத்தியம்? முதலில் வணிகரீதியான, லகுவான எழுத்துக்கும் இலக்கியத்துக்குமான வேறுபாடு தெரிய வேண்டும். லகுவான எழுத்து இலக்கியத்தை விட அதிகமாகத்தான் எங்கும் விலை போகும். தவறு அதில் இல்லை. தவறெல்லாம் வணிக எழுத்துதான் இலக்கியம், விலை போவதுதான் நல்ல எழுத்து, தொடர்கதைகள்தான் நாவல்கள் என்று எண்ணிக் கொள்வதில்தான் இருக்கிறது. இப்படி எண்ணிக் கொள்வதற்கு – வியாபாரிகள் உணவில் கலப்படம் செய்து பணம் சம்பாதிப்பது போல சம்பாதிப்பதற்கு மட்டுமென்று தோன்றி பின்னர் சமய சந்தர்ப்பத்தால் எழுத்துத் துறையில் நிலைத்து விட்டு, இலக்கியத்துக்குச் சேவை செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் பெரும் பத்திரிகைகள்தான் காரணம் என்கிறார் க.நா.சு. (‘இலக்கிய வட்டம்’ தலையங்கம் 5.6.1964)
‘ஷேக்ஸ்பியரை நினைத்துப் பார்க்கிறேன். வாசகர்களில் எந்த வகுப்பினருக்காக அவர் எழுதினார்? வாசகர்கள் அவரைத் தேடிச் சென்றார்களா அல்லது அவர் வாசகர்களைத் தேடிச் சென்றாரா? இந்தக் காலத்து எழுத்தாளர்கள் வாசகர் – ஆசிரியர் உறவைத் தலைகீழாக மாற்றி விட்டார்கள். இலக்கியாசிரியன் தன்னில் உள்ளதற்கேற்ப எழுதுகிறான். வாசகன் பொறுமையுடன் தனக்குப் பிடித்தமான, உகந்த ஆசிரியனைத் தேடிப் படிக்கிறான். இதுதான் நியாயமான முறை. அதை விட்டு ஒரு வாசகக் கும்பலை நாடி எழுதுவது அவ்வளவாக இலக்கியத்துக்கு ஏற்காத விஷயம்.’ (‘இலக்கிய வட்டம்’ தலையங்கம் 12.2.1965)
சமகாலத் தமிழ் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்? இதற்கு க.நா.சு. பதில் சொல்கிறார்:
‘தமிழில் எழுதப் படுவதெல்லாம் உலக இலக்கியம் என்று சொல்லக் கூடிய ஒன்றின் வாரிசாகவே இருக்க வேண்டும். உலகில் எந்த மூலையில் ஒரு சிருஷ்டி தோன்றியிருந்தாலும் அதன் வாரிசாகவே, அதை அறிந்த பிரக்ஞையுடனேயே, அதற்கு மேலே செல்வதாகவே தமிழில் எழுதப்படுவதும் அமைய வேண்டும். அதேபோலத் தமிழில் எழுதப்படுவதில் சிறந்தது உலகுக்குக் கிடைக்க வேண்டும். அதற்கு வழிவகைகள் செய்யக் கூடியவர்கள் இலக்கியாசிரியர்களே ஆவார்கள். பேராசிரியர்களாலும் பெரும் பத்திரிகைக்காரர்களாலும் செய்ய முடியாத காரியம் இது.’ (‘இலக்கிய வட்டம்’ தலையங்கம் 6.11.1964)
எவ்வளவு முயன்றும் க.நா.சு. பற்றி தஞ்சை ப்ரகாஷ் எழுதிய முக்கியமான நூல் கிடைக்காததால் க.நா.சு.வின் வாழ்க்கைக் குறிப்புகளாக எழுதப்பட்டவற்றைத் தேடிய போது அவர் ‘குங்குமம்’ வார இதழில் எழுதிய இலக்கியச் சாதனையாளர்கள் என்ற நூல் கிடைத்தது. அதில் அவர் தான் சந்தித்த ஆளுமைகள் பற்றி எழுதியிருக்கிறார். ராஜாஜி பற்றி அவர் எழுதியவற்றை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். அந்தத் தொகுப்பில் அவர் ஃப்ரான்ஸில் 11 மாதங்கள் தங்கியிருந்தது பற்றி ஒரு சின்னஞ்சிறிய கட்டுரை எழுதியிருக்கிறார். அதுவும் அவர் தங்கியிருந்தது எங்கே தெரியுமா? ஆல்பெர் கம்யூவின் இல்லத்தில். அந்தக் கட்டுரையைப் படித்தபோது நாம் எப்பேர்ப்பட்ட ஒரு மேதையின் அருமை தெரியாமல் இருந்திருக்கிறோம் என்று தோன்றியது. அந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகிறேன். வங்காளிகள் தாகூரை குருதேவ் என்கிறார்கள். பாரதிக்குப் பிறகான நம்முடைய குருதேவர் க.நா.சு. என்பதை நாம் புரிந்து கொள்ளும் போது தமிழ் இன்னும் சிறக்கும். பாரதியோடு க.நா.சு.வை ஒப்பிடுவது பற்றி சிலர் ஆச்சரியம் அடையக் கூடும். க.நா.சு. பாரதி அளவுக்கு தமிழ் மொழியை நவீனப்படுத்தியவர் அல்ல. மொழியில் பரிசோதனை முயற்சிகள் அவருக்கு ஆகாது. ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய நனவோடை உத்தியைப் (stream of consciousness) பற்றி எழுதும்போதே ‘அதெல்லாம் எனக்கு ஒத்து வராது’ என்று எழுதுகிறார் க.நா.சு. ஆனால் அவரிடம் இரண்டு நூற்றாண்டுகளின் கதை இருந்தது. மற்றும், உலக இலக்கியத்தையே தன் கை விரல்களில் வைத்திருந்தார். மற்றபடி மொழியின் நவீனத்துவ முயற்சிகளில் அவர் இறங்கியதில்லை. ஆனாலும் க.நா.சு. ஏன் பாரதி அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறார் என்றால் அவர் ஒருவர்தான் மேற்குலகுக்கும் தமிழுக்கும் பாலமாக இருந்தார். அதற்காகவே வாழ்நாள் முழுவதும் படிப்பு, பயணம், மொழிபெயர்ப்பு என்று இருந்தார்.
அவர் காலத்திய மற்ற எழுத்தாளர்களும்தான் மேற்கின் இலக்கியத்தைப் படித்தார்கள். கு.ப.ரா. அந்த நாளிலேயே - அதாவது 1920களிலேயே - கும்பகோணத்தில் ஷேக்ஸ்பியர் க்ளப் வைத்திருந்தார். புதுமைப்பித்தனின் கொண்டாடப்பட்ட சிறுகதையான ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ T. F. Powys என்ற பிரிட்டிஷ் எழுத்தாளரின் Mr. Weston's Good Wine என்ற நாவலின் அப்பட்டமான தழுவல். எதற்குச் சொல்கிறேன் என்றால் மேற்கத்திய இலக்கியம் இங்கே பரவலாக வாசிக்கப்பட்டது என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான். ஆனாலும் க.நா.சு.வின் மேற்கத்திய இலக்கிய வாசிப்பு மற்ற எழுத்தாளர்களிடமிருந்து வித்தியாசப்பட்டது. எப்படி?
இங்கே ஒரு விஷயத்தை நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். கு.ப.ரா. பிறந்த ஆண்டு 1902; புதுமைப்பித்தன் 1906; க.நா.சு. 1912. ஔவையார் என்றாலே நமக்கு ஒரு கிழவியின் உருவம் ஞாபகம் வருவது போல க.நா.சு. என்றாலே நமக்கு ஒரு தாத்தாவின் உருவம்தான் ஞாபகம் வருகிறது. காரணம், அவரது நீண்ட ஆயுள் மட்டும் அல்ல; சிலரது உருவத் தோற்றமே அப்படித்தான். ஆனால் சிலருக்கு எத்தனை வயது ஆனாலும் கிழத் தோற்றம் வராது. தஞ்சை ப்ரகாஷ் இறக்கும்போது அவர் வயது 57. ஆனால் பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றத்தில் 30 வயது இளைஞனைப் போல் இருப்பார். கோபி கிருஷ்ணனும் சாகும் வரை இளைஞனைப் போலவே இருந்தார். சுந்தர ராமசாமியையும், அசோகமித்திரனையும் நீங்கள் தாத்தா என்றே நினைத்துப் பார்க்க இயலாது. சுஜாதா மற்றொரு ஆச்சரியம். 72 வயதிலும் இளைஞனைப் போல் இருந்தவர். இப்படி சிலருக்குத்தான் அமையும். க.நா.சு.வின் தோற்றம் இதற்கு எதிரானது. 50 வயதிலேயே முதியவர் தோற்றம் வந்து விட்டது. ஆனால் கு.ப.ரா.வும் புதுமைப்பித்தனும் ஏதோ சொல்லி வைத்ததுபோல் 42 வயதில் இறந்து போனார்கள். அவர்கள் இருவரும் க.நா.சு.வை விட மூத்தவர்கள். அதிலும் க.நா.சு. புதுமைப்பித்தனை கிட்டத்தட்ட தனது குருவாகவே ஏற்றிருக்கிறார்.
‘சில்பியின் நரகம் என்கிற அவர் (புதுமைப்பித்தன்) கதை மணிக்கொடியில் வெளிவந்த சில மாதங்களில் நான் அவருக்கு அறிமுகமானேன். ஒரு பத்து வருஷங்கள் அவருடைய அமைதி தராத நட்பு எனக்குக் கிடைத்தது. தமிழில் எழுத ஆரம்பித்திருந்த நான் தொடர்ந்து எழுதுவது என்கிற விஷயம் அவர் பாதிப்பினால்தான் ஏற்பட்டது என்று சொல்ல வேண்டும்… என் முதல் கதைத் தொகுப்பான ‘அழகி’ வெளிவந்ததும் ‘குருவினிடமிருந்து சிஷ்யனுக்கா, சிஷ்யனிடமிருந்து குருவுக்கா?’ என்று கேட்டுக் கையெழுத்திட்டு அவரிடம் ஒரு பிரதியைக் கொடுத்தேன். அந்தப் பக்கத்தைக் கிழித்தெறிந்து விட்டு புத்தகத்தை வைத்துக் கொண்டார்.
‘சூறாவளி’ என்று என் முதல் பத்திரிகைக்குப் பெயர் வைத்தது அவர்தான். மணிக்கொடி நின்று போன பிறகு அவருக்கு எழுத ஒரு பத்திரிகை வேண்டும் என்கிற காரணத்துக்காகவே பத்திரிகை உலகுக்குப் புதியவனான நான் ஆரம்பித்த பத்திரிகை அது. தினமணியில் முழுநேர எழுத்தாளராக அவர் 35, 40 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். ‘சூறாவளி’யில் வாராவாரம் எழுத அவருக்கு நான் மாதத்துக்கு 50 ரூபாய் தந்தேன். ஆனால், ஆறே மாதங்கள்தான் தர முடிந்தது.’
இதற்குப் பிறகு வருவதுதான் முக்கியமான விஷயம். ‘தஞ்சாவூரில் நான் அய்யன் குளத்துக்கு எதிர் வீட்டில் மேலவீதியில் குடியிருந்த போது, திருநெல்வேலி போத்திக் கடை அல்வா என்று சொல்லி அரை வீசை அல்வா வாங்கி வந்திருந்தார். நான் அவருக்கு அம்பி அய்யர் கடை அல்வா வாங்கித் தந்தேன். பருப்பும் சோறும்தான் தனக்கு அவசியம் என்று உரிமையுடன் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார். புதுமைப்பித்தன் மிகச் சுத்த சைவம். ஓர் இரவு அகாலத்தில் வேறு ஒரு ஹோட்டலும் திறந்தில்லாததால் நண்பர் ஸ்ரீநிவாஸ ராகவனும், அவரும், நானும் ஒரு ஓர் அசைவ ஹோட்டலுக்குள் போனோம். சொ.வி. எதுவும் சாப்பிடவில்லை. என்னையும் சாப்பிடவிடவில்லை. ஸ்ரீனிவாஸராகவன் மட்டும் ஏதோ சாப்பிட்டார் என்று நினைவு.’
இந்த இடத்தில் க.நா.சு.வின் சர்வதேசியத்தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். அவர் அசைவ உணவு விடுதிக்குப் போனாலும் சைவம்தான் உண்பார். ஆனால் அந்த இடம் அவருக்குப் பிரச்சினையாக இருக்காது. அதனால்தான் அவரால் ஃப்ரான்ஸில் 11 மாதங்கள் தங்கியிருக்க முடிந்திருக்கிறது. க.நா.சு.வுக்கு மதுவிலோ புகை பிடிப்பதிலோ நாட்டம் இல்லை. ஆனால் அதைச் செய்வதில் அவருக்கு எந்த மன உளைச்சலும் இல்லை. ஏனென்றால், சுந்தர ராமசாமி சொல்வது போல் அவர் காலத்திய மற்ற எழுத்தாளர்களெல்லாம் ஆச்சார சீலர்களாக இருந்தபோது க.நா.சு.விடம் மட்டும் பழமையின் களிம்பே ஒட்டவில்லை. ஆச்சாரம் மட்டும் அல்ல; ஒட்டு மொத்தமான வாழ்வியல் நோக்கிலேயே க.நா.சு. சர்வதேசத் தன்மை கொண்டவராக இருந்தார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

