புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

க.நா.சு. பகுதி - 3

பொதுவாகத் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் மனிதர்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் அந்த மனிதர்கள் வசிக்கும் இடத்துக்குக் கொடுக்கப்படுவதில்லை.

Updated On :26 செப்டம்பர் 2015, 9:17 am

பொதுவாகத் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் மனிதர்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் அந்த மனிதர்கள் வசிக்கும் இடத்துக்குக் கொடுக்கப்படுவதில்லை. சினிமாவை வைத்து இதைச் சற்று எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஆயிரக்கணக்கில் எடுக்கப்பட்டாலும் தமிழ் சினிமாவில் இதுவரை சென்னை என்ற நகரமே வந்ததில்லை. ஆரண்ய காண்டம், மெட்ராஸ் என்ற இரண்டு படங்கள் மட்டுமே விதிவிலக்கு. அதிலும் வட சென்னை தான் வந்தது. தில்லி-6 என்ற படத்தில் பழைய தில்லி என்ற நகரமே - ஜிலேபி சாப்பிடும் மனிதர்கள், பழைய தில்லியின் குறுக்குச் சந்துகள் மற்றும் அந்நகரின் கலாச்சாரமே - அதில் ஒரு பாத்திரமாக வரும். இலக்கியத்தில் பெரூவைச் சேர்ந்த மரியோ பர்கஸ் யோசாவின் (Mario Vargas Llosa) நாவல்களில் ஒவ்வொரு கதையும் அது எந்த நிலப்பகுதியில் நடக்கிறதோ அந்த நிலமே ஒரு பாத்திரமாக மாறி விடுவதைப் பார்க்கலாம். அவருடைய முக்கியமான நாவல்கள் Green House, Conversation in the Cathedral, Feast of the Goat. Green House-ல் வருவது பெரூவின் வடமேற்குக் கடற்கரையில் உள்ள ப்யூரா (Piura) என்ற ஊர். 1920-லிருந்து 1960 வரையிலான ப்யூராவை நாம் அந்த நாவலில் காணலாம். கதீட்ரல் நாவலைப் படித்து விட்டால் நீங்கள் பத்து இருபது ஆண்டுகள் பெரூவின் தலைநகர் லீமாவிலேயே வாழ்ந்தது போன்ற அனுபவத்தைப் பெறலாம். Feast of the Goat-ல் கரீபிய நாடான டொமினிகன் ரிபப்ளிக் தான் களம். இந்த நாவலை வாசித்தவர்களுக்கு அதன் தலைநகரான ஸாந்த்தோ தொமிங்கோ (Santo Domingo) சொந்த ஊரைப் போல் மாறி விடும்.

ஒரு ஊர் இலக்கியமாக மாற முடியும் என்பதற்கு இன்னொரு உதாரணம், ஓரான் பாமுக்கின் ‘இஸ்தாம்பூல்’ மற்றும் ‘என் பெயர் சிவப்பு’. இஸ்தாம்பூல் என்ற நகரத்தை பாமுக் எந்த அளவுக்கு இலக்கியமாக மாற்றியிருக்கிறார் என்றால் அந்த நூலைப் படித்த அடுத்த கணம் நான் இஸ்தாம்பூல் கிளம்பி விட்டேன். பாமுக்கின் இஸ்தாம்பூலில் பார்த்த தெருக்கள், கடைகள், பாலங்கள், கடல், பூனை, நாய், திருப்பங்கள், சதுக்கங்கள், மசூதிகள் என்று ஒவ்வொன்றாக ஸ்பர்சித்தேன். இப்போது நான் கண்ட இஸ்தாம்பூல் ஒரு ஐநூறு பக்க நூலாக என் நாட்குறிப்புகளில் அடங்கியிருக்கிறது. இதேபோல் ‘என் பெயர் சிவப்பு’ நாவலில் வரும் கார்ஸ் நகரம். குளிர்காலத்தில் பனி பொழியும்போது பார்க்கலாம் என்று என் பயணத்தில் கார்ஸ் நகரைச் சேர்க்கவில்லை. ஆனால் உலகில் வேறு எந்த நாவலிலும் ஒரு ஊரைப் பற்றி இவ்வளவு விரிவாக எழுதப்பட்டதில்லை என்று சொல்லலாம். நாவல் முழுவதும் கார்ஸ் தான். அந்த ஐநூறு பக்க நாவலில் பனி பற்றியே நூறு பக்கங்கள் வரும் என்று நினைக்கிறேன். அந்தக் கொடும்பனியில் கார்ஸ் எப்படி இருக்கும்? ‘என் பெயர் சிவப்பு’ நாவலைப் படித்த பல வாசகர்கள் உலகெங்கிலும் இருந்து கார்ஸ் நகரைக் காண்பதற்காக வந்து கொண்டிருக்கிறார்கள். இப்படியாக உலக இலக்கிய வாசகர்களின் புனித நகராக மாறியிருக்கிறது கார்ஸ்.

இதே போன்ற இலக்கியச் சாதனையை செய்திருக்கிறார் க.நா.சு. பக்கம் பக்கமாக, நாவல் நாவலாக சாத்தனூரைப் பற்றி எழுதிக் குவித்திருக்கிறார். சாத்தனூர் நாவல்கள் என்றே அவற்றை அவர் குறிப்பிடுகிறார். மேற்கோள்கள் காட்டினால் இதுவே தனிப் புத்தகமாக நீண்டு விடும் என்பதால் அவருடைய அத்தனை நாவல்களையுமே வாசகர்கள் படித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.*

***

க.நா.சு.வின் நாவல்களை வாசிக்கும்போது கிட்டத்தட்ட ஒரு கால எந்திரத்தில் ஏறி நூறு நூற்றைம்பது ஆண்டுகள் பின்நோக்கிச் செல்வதுபோல் உணர்கிறோம். பித்தப்பூவில் வரும் ‘பத்து’ என்கிற பத்மநாபய்யரின் குடும்பது இது:

‘பத்துவின் முதல் மனைவி மூலமாகப் பிறந்த குழந்தைகள் மூன்றும் பெண்கள். அவற்றில் இரண்டு கல்யாணத்திற்கிருந்தன. மூத்த மகளுக்குக் கல்யாணமாகி ஒரு பெண்ணும் பிள்ளையும் இருந்தன. பத்துவின் இளைய மனைவிக்கு மொத்தம் எட்டு குழந்தைகளும் பையன்கள். முத்தவன் ராஜா தான் மற்ற குழந்தைகளையெல்லாம் தூக்கி வளர்த்துப் பெரியவனாக்கியவன். இளையாளுக்கு வீட்டு வேலைகள் ஏராளம். இரண்டு கட்டு வீடு. வாசலில் ஒரு கிணறு. கொல்லையில் ஒரு கிணறு. தினமும் வீட்டுப் பேர்வழிகள் பத்துப் பன்னிரண்டு பேருடன் சேர்த்து – சாப்பிடுவதற்கு தெருவோடு போகிறவர்கள், தெரிந்தவர்கள், தேடி வந்தவர்கள் என்று யாரையாவது நாலு பேரைக் கூட்டிக் கொண்டு வந்து விடுவார் பத்து. இத்தனை பேருக்கும் சமைக்க வேண்டிய கடமை பத்துவின் மனைவிக்கானது.’

‘அது 1933-ம் வருஷம். ராஜா கும்பகோணம் காலேஜில் இண்டர்மீடியட் இரண்டாவது ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். கடைசிக் குழந்தைகள் மூன்றையும் கவனித்து, காலையில் தூக்கி வைத்துக் கொண்டிருந்து விட்டு, பரக்கப் பரக்க அரை வயிறு சாப்பிட்டுவிட்டு, ஐந்து மைல்கள் நடப்பதற்கு ஒரு மணி நேரம் என்று வைத்துக்கொண்டு ஒன்பது மணிக்குக் கிளம்பி காலேஜ் போவான். நடைதான். சைக்கிள் இல்லை.’ (பித்தப்பூ)

‘அன்று சாத்தனூரில் காவேரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. சர்வமானிய அக்ரஹாரத்துப் படித்துறையில் அதிகாலையிலிருந்து தருமத்தோணி விடுவார்கள். சாதாரண நாட்களில் தருமத்தோணியில் பகலில் போகிறவர்கள் மிகக் குறைவு. சாயங்காலம் போகிறவர்கள் மாங்குடி கள்ளுக்கடையில் தண்ணி போடப் போகிறவர்கள். சாத்தனூரில் அப்போதெல்லாம் கள்ளுக்கடை கிடையாது.’ (பித்தப்பூ)

தஞ்சை ப்ரகாஷ் எழுத்தில் எந்த அளவுக்குப் பிரதானமான இடத்தைப் பெண்கள் பிடித்திருந்தார்களோ அதே அளவுக்குப் பெண்களைப் பற்றி எழுதியிருக்கிறார் க.நா.சு. சிலரைப் பற்றிப் பார்ப்போம்:

க.நா.சு.வின் பெண்களில் முக்கியமானவர் ‘அக்கா.’ க.நா.சு.வின் தந்தை நாணா ஐயரின் (‘பித்தப்பூ’வின் ரிடையர்டு போஸ்ட்மாஸ்டர்) அம்மா. அந்தப் பாட்டியை எல்லோரும் அக்கா என்றுதான் அழைப்பது வழக்கம். க.நா.சு.வின் முதல் நாவலான ‘சர்மாவின் உயிலை’ அவர் அந்த ‘அக்கா’வுக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறார். இந்த நாவலை அவர் 1938-ல் சேலத்தில் ஒரு ஹோட்டலில் தங்கி முதல் பாடத்தை 15 நாள்களிலும் பிறகு திருத்திய பாடத்தை 21 நாள்களிலும் எழுதியிருக்கிறார். பின்னர், எஸ். பாஷ்யம் சாண்டில்யனின் சிபாரிசினால் இது சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் தொடராக வந்துள்ளது. 1948-ல் கலைமகள் காரியாலத்தின் மூலம் (அதிபர் ரா. நாராயணஸ்வாமி ஐயர்) வெளியிடப்பட்டது. இதுவும் க.நா.சு.வின் குடும்பக் கதைதான். ஆனால் 100 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையின் சித்திரம். இது குறித்து க.நா.சு. முன்னுரையில் சொல்கிறார்:

‘நம்மாத்துக் கதையையே எழுத வேண்டுமா?’ என்று சித்தப்பா கேட்டதும், ‘வேறு என்ன எழுத முடியும்?’ என்று அப்பா பதிலளித்ததும் நினைவிருக்கிறது.

எங்கள் குடும்பத்தை இரண்டு தலைமுறைகளுக்கும் அதிகமாக ஒருமையை உணரச் செய்தவள் பாட்டி. தமிழ்ப் புலவர்கள் குலத்தில் உதித்தவள். அவளிடம் கேட்டுக் கேட்டு என் கதை சொல்லும் திறமையை (?) வளர்த்துக் கொண்டேன் நான் என்று சொல்லலாம். ஒன்பது வயதில் சிவகங்கையிலிருந்து சுவாமிமலைக்கு மணப்பெண்ணாக வந்து 88 வயது வரையில் (இடையில் சில காலம் லாகூர், கல்கத்தா, காசி என்பதாக) சுவாமிமலையிலேயே வாழ்ந்தவள்.’

சர்மாவின் உயிலில் சானுப் பாட்டி என்று ஒரு அத்தியாயம் வருகிறது. முப்பது ஆண்டுகளுக்கு மேல் விதவையாகவே வாழும் பெண்மணி சானுப் பாட்டி. (பாட்டியாவதற்கு முன் ஜானகி; இந்த சானுப் பாட்டி தான் க.நா.சு. குறிப்பிடும் ‘அக்கா’.) ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய பிராமணப் பெண்களின் வாழ்க்கையை அந்த அத்தியாயத்தில் எழுதியிருக்கிறார் க.நா.சு. அதில் சில பத்திகளை மேற்கோள் காட்டுகிறேன்:

‘அதென்னவோ சானுப் பாட்டியின் பேரன் அகமுடையாள் சுவாமிமலையில் அந்த வீட்டில் அதற்கு முன் தங்கிய போதெல்லாம் ரகளையாகவே போய் விட்டது. அப்படிப் போனதுக்குக் காரணம் தன் பெண் மங்களமும் அங்கிருந்ததுதான் என்று சானுப் பாட்டி எண்ணினாள். மங்களம் ஒரு விதவை; அவளுக்குப் பிள்ளைகள் இல்லை; இரண்டே இரண்டு பெண்கள்தாம். அந்த இரண்டு பெண்களும் – அவர்கள் அதிர்ஷ்டம் – விதவைகள்தாம். மூத்தவள் – அவள் பெயர் சாவித்திரி – கொஞ்ச காலம் தன் கணவனுடன் வாழ்க்கை நடத்தி விட்டு விதவையானவள். இளையவள் - அவள் பெயர் பவானி – வாழ்க்கை இன்பத்தையே அறியாதவள். அவளுடைய பன்னிரண்டாவது வயதில் கல்யாணம் ஆயிற்று. கல்யாணமான ஏழெட்டு மாதங்களுக்கெல்லாம் அவள் கணவன் சென்னையில் ஏதோ ஒரு விபத்தில் அகப்பட்டு மாண்டு விட்டான்.’

‘சானுப் பாட்டி அவளுடைய நீண்ட ஆயுளில் ஒரு நாளாவது தலைவலி என்று கூடப் படுத்துக் கொண்டதில்லை. அப்படிப் படுத்து விட அவளுக்குப் பொழுதே கிடைத்ததில்லை. சதா யாராவது பெண்ணின் பெண்ணோ, பிள்ளையின் பெண்ணோ, மாட்டுப் பெண்ணோ வந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்குச் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து முடித்து நாலைந்து மாசம் வைத்துக் கொண்டிருந்து விட்டு ஊருக்கு அனுப்புவதற்குள் சிசுருக்ஷைக்கு வேறு யாராவது வந்து விடுவார்கள்.’

‘பட்டாபிராமனின் மனைவி விசாலம் தங்கமான பெண். சானுப் பாட்டிக்கு மிகவும் பிடித்திருந்த மாட்டுப் பெண். அவள் ஒரே ஒரு பிள்ளையையும் ஒரு பெண்ணையும் பெற்று வைத்து விட்டு, முப்பது முப்பத்திரண்டு வயசு ஆவதற்கு முன்னரே அகாலத்தில் மரணமடைந்து விட்டாள். அந்தப் பிள்ளைதான் சிவராமன். சானுப் பாட்டிதான் சிவராமனை எடுத்து வளர்த்ததெல்லாம்.’

‘சர்மாவின் உயில்’ சானுப் பாட்டிக்கு நேர் எதிரான பாத்திரம் ‘அவதூதரி’ல் வரும் அலமு. ராமசந்திர ஐயரின் மனைவி. சாமர்த்தியக்காரி. சாத்தனூர் பெரிய மனிதர்களைத் தனக்கு வேண்டப்பட்டவளாக ஆக்கிக் கொண்டவள். அவளை அடையப் பலர் காத்திருந்தார்கள் என்றாலும் அவள் தனக்கும் தன் கணவனுக்கும் யாராலெல்லாம் அனுகூலம் உண்டோ அவர்களுக்கு மட்டுமே கிடைத்தாள். ஆனால் அவளுடைய அத்தனை வருட ‘அந்த மாதிரி’ வாழ்க்கையில் அவள் எந்தத் தீண்டப்படாதவனையும் தன்னிடத்தில் அண்டவிட்டதேயில்லை என்ற வதந்தி ஊரில் பெருமையாகப் பேசப்பட்டது. சாத்தனூருக்கு வந்த புதிதில் வாடகை வீட்டில் குடியிருந்த ஐயர் விரைவில் சொந்த வீடு வாங்கி விட்டார்.

Story image

‘அவதூதர்’ கதை நடப்பது 1950களில். அலமு சாத்தனூருக்கு வந்தது 1880-ல். அப்போது அலமுவை அடைய வேண்டி இரண்டு பிராமணர்களுக்குள் போட்டி இருந்ததாகவும், அந்தப் போட்டியைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அலமு அவர்கள் இருவரையும் நடுத்தெருவில் கைகலப்பில் இறங்க வைத்தாள் என்றும், இருவருமே அவளுடைய ‘அன்பைப்’ பெறுவதற்காகப் போட்டி போட்டுக் கொண்டு அவளுக்கு வீடு கட்டுவதில் உதவி செய்ததாகவும், கடைசியில் அவள் அந்த இருவரையுமே விட்டு விட்டு மூன்றாவதாக ஒரு பிராமணனுக்குத் தன்னைத் தந்து விட்டதால் அந்த முன்னிரண்டு பிராமணர்களும் பகை நீங்கி அலமுவுக்கும் அவள் கணவனுக்கும் சூன்யம் வைத்து விட்டதாகவும் ஒரு கதைப் பாடல் உண்டு என்று சொல்கிறார் க.நா.சு.

ஐம்பதுகளின் சாத்தனூர் எப்படி இருந்தது? அங்கிருந்த முகமதிய சமூகம் தலைநிமிர ஆரம்பித்தது. இடைநிலைச் சாதியினர் வசித்த மேட்டுத் தெருவும் வளர்ச்சி காணத் துவங்கியது. ஆனால் பிராமணர்களின் ஸ்திதி படிப்படியாகச் சரிந்தது. அவலம் என்னவென்றால், அந்த சரிவை அவர்கள் உணரக் கூட இல்லை. சாத்தனூர் பிராமணர்களில் சரிபாதி தங்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாதபடி அகதிகள் நிலைக்கு வந்து விட்டனர். இந்த இடத்தில் சங்கிலிப் பாட்டி என்ற பெண்ணின் கதையைக் கூறுகிறார் க.நா.சு. கணவன் இறந்து நாற்பது ஆண்டுகள் ஆகிறது. ஒரு பசுமாடு வளர்த்து அதன் பால், அதிலிருந்து உண்டாகும் தயிர், நெய் முதலியவற்றை விற்று அதன் மூலம் சௌகரியமாக வாழ்ந்து வந்தாள். அவளுடைய ஒரே நோக்கம், தன் பேரன் டபீர் கிட்டு படித்து முன்னேற வேண்டும் என்பதுதான். ஆனால் டபீர் கிட்டுவோ அவள் காசையெல்லாம் சிகரெட், வெற்றிலை, சீட்டாட்டம், பெண்கள் போன்றவற்றில் தொலைத்தான். படிப்பில் நாட்டம் இல்லை. கடைசியில் சங்கிலிப் பாட்டி தன் மாட்டையும் விற்று விடுகிறாள் என்று போகிறது கதை.

க.நா.சு.வின் மேலும் சில பெண்கள்:

‘சாமா சித்தப்பாவுடைய மனைவி, நான் தமிழ் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்த ஆறு மாதத்தில், ஒரு மாதம் இறந்து விட்டாள். சாமா அவசர அவசரமாக இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டு, இரண்டு பிள்ளைகள் பிறந்ததும், பெண்டாட்டியுடன் அதே அவசரத்துடன் சண்டை பிடித்துக் கொண்டு பிள்ளையையும் விட்டு விட்டுப் போய் விட்டான்.’ (பித்தப்பூ)

‘ராமுடு வழக்கம்போல் கோயிலுக்குப் போகக் கிளம்பும்போது, ‘பண்ணுகிற கல்மிஷத்தையெல்லாம் பண்ணிக்கொண்டு உனக்கென்னடா கோயில்?’ என்று தடுத்தார் ராமச்சந்திர சாஸ்திரிகள். ‘நீ யாரடா?’ என்று ராமுடு கேட்டதற்கு, கபடமில்லாமல் சிரித்துக் கொண்டு ‘உன் வப்பாட்டியின் புருஷன்!’ என்று உரக்கச் சொல்லிக் கலகலவென்று சிரிக்க ஆரம்பித்து விட்டது பைத்தியம். ராமுடு தன் வீட்டிற்குப் போனவர் கையில் ஒரு உருண்டையான பிளக்காத சவுக்குக்கட்டையை எடுத்துக் கொண்டு வந்து சாஸ்திரிகளை அடித்து விட்டார். இரண்டு கைகளையும் தலையில் வைத்து அழுத்திக் கொண்டு, ரத்தம் பீறிட்டடிக்க, தரையில் சாய்ந்து விட்டார் சாஸ்திரிகள். அப்போதுதான் ‘அடப்பாவி, அவரைக் கொன்னுட்டியே’ என்று அலறிக் கொண்டு ஓடி வந்தாள் அவர் மனைவி சீதாலக்ஷ்மியம்மாள்.’ (பித்தப்பூ)

‘என் சித்தி உடுக்கத் துணியில்லாமல், இருக்க ஓர் ஓட்டைக் குச்சு வீடு தவிர வேறு எதுவும் இல்லாமல், பாதி நாள் உண்ணப் போதிய உணவு இல்லாமல், இரண்டு வருஷத்துக்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, நாலு வருஷத்துக்கு ஒன்றைப் பறி கொடுத்துக் கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள்.’ (ஆட்கொல்லி)

Story image

சர்மாவின் உயில், பொய்த் தேவு, அவதூதர், அசுர கணம் போன்ற உலகத் தரமான நாவல்களின் வரிசையில் வரக் கூடியதே ஒருநாள் என்ற நாவலும். கதை நடப்பது 1946-ல். நாவலை எழுதியதும் அதே ஆண்டுதான். ஆனால் எழுதி முடிக்கவில்லை. பின்னர், நாலைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை யுனிவர்சிடி லைப்ரரியில் உட்கார்ந்து இரு மாலை நேரங்களில் எழுதி முடித்ததாக இதன் முன்னுரையில் எழுதுகிறார் க.நா.சு. மேலும், ‘ஒருநாள் – நான் எழுதிய நாவல்களில் ஒன்பதாவது என்று எண்ணுகிறேன். பிரசுரமாவதில் ஐந்தாவது. சாத்தனூர் நாவல்களில் நான்காவது’ என்று குறிப்பிடுகிறார்.

நாவல் முழுக்கவே ஹிட்லரின் நாஜிப் படையில் போர் புரிந்து விட்டு இந்தியாவுக்குத் திரும்பிய மூர்த்தி தன்னுடைய பூர்வீக ஊரான சாத்தனூர் வந்து தங்கும் ஒருநாளில் நடக்கும் நிகழ்ச்சிகள்தாம். ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் ஒரு நாளில் என்ன நடந்து விடப் போகிறது? அங்கே வசிக்கும் ஒரு சிலரைப் பற்றி மூர்த்தி கேட்டு அறிந்து கொள்கிறான். நாவலின் முதல் அத்தியாயத்தில் பங்கஜம் என்ற பதினெட்டு வயதுப் பெண்ணின் ஒரு காலை நேரம் விவரிக்கப்படுகிறது. எத்தனையோ பெண்ணியவாதிகளின் எத்தனையோ எழுத்துக்கள், நாவல்கள், கவிதைகள் பெண் உடலின் வாதையை, நூற்றாண்டுகளாய் அடக்கப்பட்டதன் அரசியலைப் பேசியுள்ளன. அதையெல்லாம் விட இந்த சாத்தனூர் பங்கஜம் 1946-ம் ஆண்டின் ஒரு அதிகாலை வேளையில் தன் வாழ்வைப் பற்றி எண்ணிப் பார்க்கும் ஒருசில கணப் பொழுதுகள் வீர்யமானவை. இந்த உலகில் பெண்ணாகப் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் வாசித்தே ஆக வேண்டிய ஒரு பகுதி இது. தான் ஒருத்திதான் இந்தத் தெருவிலேயே துயரம் மிகக் கொண்டவளா என எண்ணுகிறாள் பங்கஜம். இல்லை. அவளை விடவும் பெருந்துயர் அடைந்த கல்யாணிப் பாட்டி பக்கத்து வீட்டிலேயே இருக்கிறாள். பெயர் தான் கல்யாணிப் பாட்டி. அவள் காரியங்களெல்லாம் கல்யாணமல்லாதவைதான். கணவன் பார்த்துக் கல்யாணம் செய்து கொண்டது ஏழாவது வயதில். அறுத்துக் குளித்து விட்டு வீட்டுக்கு வந்தது ஒன்பதாவது வயதில். இப்போது அவள் வயது அறுபதுக்கு மேல். ஐம்பது வருஷங்களில் அவள் உள்ளம் மரத்து விட்டதோ? ஐம்பது வருஷங்களில் தன் உள்ளமும் இப்படியேதான் மரத்து விடுமோ?

பின்குறிப்பு: க.நா.சு.வின் பத்து நாவல்கள் நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.