புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஆதவன் (1942 – 1987)

17 வயதிலிருந்து 25 வயது வரை எனக்கு ஆதவன் பைத்தியம் பிடித்திருந்தது. ஏனென்றால் அவர் எழுதிய இளைஞன் என்னைப் போலவே இருந்தான்.

Updated On :20 பிப்ரவரி 2016, 9:23 am

17 வயதிலிருந்து 25 வயது வரை எனக்கு ஆதவன் பைத்தியம் பிடித்திருந்தது. ஏனென்றால் அவர் எழுதிய இளைஞன் என்னைப் போலவே இருந்தான். அவருடைய எல்லாக் கதைகளிலும் நாவல்களிலும் வந்த இளைஞன் நான்தான் என்று எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. எழுபதுகள். கணினி, அலைப்பேசி போன்ற நவீன சாதனங்கள் வராத காலம். பெண்கள் அப்போதுதான் லேசாக வெளியிலே வர ஆரம்பித்திருந்தார்கள். ஓர் ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டாலே அதில் ஏதோ ஒரு ‘ரொமான்ஸ்’ இருப்பதாக ஆண்களும் கொஞ்சம் பெண்களும் நம்பியிருந்த காலம். சினிமாவின் நாயகிகள் நாயகர்களை இன்னும் ‘டா’ போட ஆரம்பிக்கவில்லை. கவர்ச்சிக்காக சிஐடி சகுந்தலா போன்ற நடிகைகள் தனியாக இருந்தார்கள். நாயகிகள் மீது அந்தச் ‘சுமை’ இன்னும் விழுந்திருக்கவில்லை. கணினி இல்லாததால் இளைஞர்களுக்கு நடைபாதைக் கடைகளில் கிடைக்கும் பழுப்புக் காகிதங்களில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள்தான் ‘போர்னோ’ இலக்கியம்.

Story image

இப்படியான காலகட்டத்தில் larger than life கதாபாத்திரங்களை வெகு அனாயாசமாக உருவாக்கிப் பகடை ஆடிக்கொண்டிருந்தார் ஆதவன். ஆதவனைப் புரிந்து கொள்ள எழுபதுகளின் காலம் எப்படி இருந்தது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளியிலும் கல்லூரியிலும் (கொஞ்ச காலம்) படித்த நான் என்னுடைய 21 வயது வரை என் தாயார், பெரியம்மா, சின்னம்மா, அத்தை, சகோதரிகள், தெருவில் உள்ள அக்காக்கள் ஆகியோரைத் தவிர வேறு எந்தப் பெண்களோடும் ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை. இவ்வளவுக்கும் பள்ளியும் கல்லூரியும் ஆண் பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கும் முறையில் அமைந்தவை. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும். அப்போதைய பள்ளிக் கல்வியில் பதினோரு ஆண்டுகள் உண்டு. அந்தப் பதினோரு ஆண்டுகளும் என் வகுப்பில் இருந்த பதினைந்து பெண்களிடமும் நானும் சரி, என் வகுப்பில் இருந்த மற்ற பையன்களும் சரி, ஒரு வார்த்தை பேசியதில்லை. அப்படியே மீறிப் பேசினால் அறிவழகன் காஞ்சனா என்ற இரண்டு பெயர்களும் இதயம் – அம்புக்குறி படத்தோடு பள்ளிச் சுவர்களிலும் கழிப்பறைகளிலும் இடம் பெறும். அந்தப் பெண்ணை அத்தோடு பள்ளியிலிருந்து நீக்கி விடுவார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் ‘லார்ஜர் தேன் லைஃப்’ பாத்திரங்களைப் படிக்கும் ஓர் இளைஞனுக்கு எப்படி இருக்கும்? அது என்ன ‘லார்ஜர் தேன் லைஃப்’ பாத்திரங்கள்?

‘ஒரே விதமான ஓசைகளின் மத்தியில், ஒரே விதமான மனிதர்களின் மத்தியில், ஒரே விதமான வேலையைச் செய்துகொண்டு – சே! இதில் பிரமாதமான கெடுபிடியும் அவசரமும் வேறே. ‘மிஸ் நீலா! டெபுடேஷன் ஃபைல் கடைசியாக யார் பெயருக்கு மார்க் செய்யப்பட்டிருக்கிறது?’, மிஸ் நீலா! ஆர்.வி. கோபாலன் டிரான்ஸ்பர் ஆர்டர் டிஸ்பாச்சுக்குப் போய் விட்டதா?’, ‘மிஸ் நீலா! பி.என். (பென்ஷன்) தலைப்பில் புதிய ஃபைல் திறக்க அடுத்த நம்பர் என்ன?’, கேள்விகள், கேள்விகள், கேள்விகள். அவர்கள் தன்னைக் கேட்காதபோது, அவள் தன்னையே கேட்டுக் கொள்வாள் – மிஸ் நீலா! நீ எதற்காக இந்த அறையில், இந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாய்? – மிஸ் நீலா! உனக்கும் இந்த மனிதர்களுக்கும் என்ன சம்பந்தம்?’ (’சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்…’)

‘ஒருவிதத்தில் என் எழுத்துக்கள் யாவுமே நுட்பமான, நேர்மையான சம்பாஷணை முயற்சிகளென்றுதான் சொல்லவேண்டும். சாதாரண face to face சம்பாஷணையின் கெடுபிடி, பெளதிக நிர்ப்பந்தங்கள், பரஸ்பர தாட்சண்யங்கள், வேஷங்கள், நமக்கே புரியாத சில குரோத அலைகள் ஆகியவற்றினூடே என் எண்ணங்களைக் கோர்வைப்படுத்த முடியாத ஒரு தாபம்தான் என்னை மீண்டும் மீண்டும் எழுத்துக்கு விரட்டுகிறது. அதாவது, நேரடிச் சந்திப்புகளின்போது என் வார்த்தைகள், அவற்றின் அர்த்தங்களுக்கு அப்பாற்பட்டு, என் பெளதிக ஆகிருதி, முகத்தின் தன்மை ஆகியவைகூட எதிராளியிடம் சாதக, பாதக விளைவுகளை ஏற்படுத்திய வண்ணமிருக்கின்றன. முதல் பார்வையில் ஒருவரிடம் இனிய சகோதர பாவத்தைக் கிளறுகிற என் மூஞ்சி, இன்னொருவரிடம் முதல் பார்வையில் பகைமை உணர்வுகளையும் வெறுப்பையும் தூண்டுவது ஏன் என்பது என்னை எப்போதும் அலைக்கழிக்கிற ஒரு பிரச்சினை. இந்த 'பரஸ்பர பிம்பங்களின்' tension இலிருந்து விடுபட்டு என்னையும் என்னைச் சுற்றியுள்ள உலகத்தையும் பற்றிய நிதானமான, ஆழமான சம்பாஷணையில் ஈடுபடும் ஒரு சாதனமாகவே எழுத்தை நான் பயன்படுத்துகிறேனென்று நினைக்கிறேன். எந்த சம்பாஷணையையும்போல இந்த சம்பாஷணைக்கும் ஒரு மறுபக்கம் உண்டு. நீங்கள்தான் அந்த மறுபக்கம்; உங்கள் எதிரொலிகளே இச்சம்பாஷணைக்கு முழுமை தரவேண்டும். எத்தனைக்கெத்தனை இந்த எதிரொலிகள் முதிர்ச்சியும் நுட்பமும் மிக்கனவாயிருக்கின்றனவோ, அத்தனைக்கத்தனை நம்மிருவருக்குமே மகிழ்ச்சியும் பயனும் தரக்கூடியதாக இந்த முழுமையின் தேடல் அமையும்.’ (‘காகித மலர்கள்’ நாவலுக்கு தி.க.சி. எழுதிய மதிப்புரைக்கு ஆதவன் எழுதிய பதில். திசைகள் இதழில் வெளிவந்தது.)

மேற்கண்ட இரண்டு பத்திகளிலும் நாம் காண்பது சமூகத்தின் போலித்தனம், எந்திரத்தனம் போன்றவற்றிலிருந்து விலகிய அல்லது விலக விரும்புகின்ற இளைஞர்களின் மனம். இவன்தான் ஆதவனின் இளைஞன். உதாரணமாக, ‘இரவுக்கு முன்பு வருவது மாலை’ என்ற குறுநாவலை எடுத்துக் கொள்வோம். ராஜசேகரன் என்ற இளைஞன் தில்லியில் உள்ள நாற்சந்தி ஒன்றில் சிக்னல் விளக்குகளைப் பார்த்துக்கொண்டு சாலையைக் கடக்காமலே நின்று கொண்டிருக்கிறான். இது மட்டுமே மூன்று பக்கங்கள் போகிறது. திடீரென்று கவனிக்கிறான். அவனைப் போலவே எதிர்த்திசையில் ஒரு பெண், பாதசாரிகள் பாதையில் வாகனங்களுக்கு சிவப்பு விளக்கு விழுந்த பிறகு கூட சாலையைக் கடக்காமல் நின்று கொண்டே இருக்கிறாள். அவனைப் போலவே தனித்தன்மை வாய்ந்த, சமூகத்துடன் ஒத்துப் போகாத, ஒரு பிரகிருதியாக இருப்பாளோ என எண்ணுகிறான்.

சிறிது நேரம் கழித்து அவள் சாலையைக் கடந்து இவனை நோக்கி வருகிறாள். புன்னகைக்கிறாள். அவனிடம் தோற்று விட்டதாக அறிவிக்கிறாள். ஆம். எதிர்ச்சாரியில் நின்று கொண்டு, பரபரப்புடன் இங்குமங்குமாக விரைந்து கொண்டிருக்கும் மனிதர்களை ஒரு கர்வத்துடன், ஒரு கேலியுடன், அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் இவன் மட்டும் நகராமல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறான். அது அவளுடைய தனித்தன்மையை மறுக்கும் ஒரு சவால் போல அவளுக்குத் தோன்றுகிறது. யார் இந்தக் கேரக்டர்? இவன் நகர்ந்த பிறகுதான் நான் நகர வேண்டும். ஆனால் அவள் தீர்மானம் தோற்று விடுகிறது.

‘எனக்கு இன்று அதிர்ஷ்டமான நாள். வார பலனில் போட்டிருந்தது’ என்கிறான் இவன். ‘செலவுள்ள தினமென்றும் போட்டிருக்குமே?’ என்கிறாள் அவள். பந்தயத்தில் வென்றவன் ஆதலால் அவன் அவளுக்குப் பார்ட்டி கொடுக்க வேண்டும்! மெல்லிய தென்றல். லேசான மாலை வெயில். நீண்ட நிழல்கள். தில்லியின் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கிறார்கள். யாருமே இதை ரசிப்பதில்லை என்பதை நினைத்து வருத்தப்படுகிறார்கள். வாழ்க்கை எந்திரத்தனமாகி விட்டது. பொருளாதார ரீதியான பயன்பாடு இல்லாமல் யாரும் எதுவும் செய்வதில்லை. அஸ்தமனத்தைப் பார்க்கும் நேரத்தில் ஓவர் டைம் செய்தால் காசு கிடைக்குமே என்பதுதான் சராசரி மனிதனின் எண்ணம். பேசிக்கொண்டே நடக்கிறார்கள். எப்படிப்பட்ட பேச்சு?

அவள் சொல்கிறாள்: ‘யார் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் நான் கவலைப்படுகிறவள் அல்ல. ஒவ்வொரு கணத்திலும் எனக்கு விருப்பமானதை நான் செய்கிறேன், செய்வேன்.’

‘அப்படித்தான் இருக்கவேண்டும். நானும் அப்படியிருக்க முயற்சி செய்கிறவன்தான். ஆனால் இருக்க முடிகிறதா அப்படி எப்போதும்? எல்லா விஷயங்களிலும்? இந்தக் கணத்தையே எடுத்துக் கொண்டால் கூட, நான் நானாகவும் நீங்கள் நீங்களாகவும் பரிபூர்ணமாக, பின்னப்படாதவர்களாக, ஒருவரையொருவர் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகச் சொல்ல முடியுமா? நான் காண்பதும் கேட்பதும் உங்களையல்ல. நீங்கள் எனக்குக் காட்ட விரும்பும் உங்களின் ஒரு பகுதியை, ஒரு அம்சத்தை, நான் இன்னொரு ஆசாமி என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு பெண்ணாக இருந்திருந்தால், நீங்கள் இன்னொரு ரூபத்தில் உங்களைக் காட்டியிருப்பீர்கள் அல்லவா?’

இந்த உரையாடல்தான் ஆதவனின் விசேஷம். இதுதான் ‘லார்ஜர் தேன் லைஃப்’ பாத்திரங்கள்.

பிறகு இருவரும் கோக் அருந்துகிறார்கள். பிறகும் முன்போலவே நடக்கிறார்கள். அப்போது அவன் நினைக்கிறான்.

‘எனக்கு இவளைப் பிடிக்கிறது; இவளுடைய புன்னகை பிடிக்கிறது; இவளுடைய நடை பிடிக்கிறது; இவளுடைய வளைவுகள், அசைவுகள், பாவங்கள், பாவனைகள் – எல்லாமே என்னுள்ளே ஒரு பூரிப்பையும் எழுச்சியையும் ஏற்படுத்துகின்றன. எங்கேயோ, எப்போதோ இவளைப் பார்த்திருப்பது போல, இவளுடன் பழகியிருப்பது போல தோன்றுகிறது. எப்போதோ தொலைந்த பொருளொன்று மீண்டும் கிடைத்தது போல, கலைந்த சுருதி சேர்ந்தது போல, மறந்திருந்த ராகம் நினைவு வந்தது போல, முன்பு சில நாட்கள் குடியிருந்து பிறகு காலி செய்து விட்ட ஒரு வீட்டின் சுற்றுப்புறங்கள், ஓசைகள், மணங்கள் இவற்றால் திடீரெனத் தாக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. விநோதமானதொரு கிளர்ச்சியும் உன்மத்தமும் தவிப்பும் உண்டாகிறது. மகிழ்ச்சியும் வருத்தமும் ஒருங்கே உண்டாகின்றன. இவளைச் சந்தித்ததில் மகிழ்ச்சி; இவ்வளவு தாமதமாக ஏன் சந்தித்தேனென்ற வருத்தம். மனதில் அபூர்வமானதொரு அமைதி, கூடவே ஒரு பயம், ஒரு வெறி, ஒரு தாபம், ஒரு கோபம், ஒரு படபடப்பு. இவளும் இந்தக் கணமும் இந்த உணர்வுகளும் பொய்யாகி விடக் கூடாதென்ற பயம். நழுவிப் போய் விடாமல் இவளை இறுகத் தழுவி அணைத்துக் கொள்ள வேண்டும், இவளுடன் ஒன்றிச் சங்கமித்து என்னுடைய ஒரு பகுதியாகவே இவளை ஆக்கிக் கொண்டு விட வேண்டுமென்ற வெறி. இவ்வளவு வருடங்கள் இவள் என்னைக் காக்க வைத்துவிட்டாள் பார்த்தாயா என்ற தாபம். இவ்வளவு வருடங்கள் பிடித்திருக்கின்றனவே எனக்கு இவளைக் கண்டு பிடிக்க என்று என் மேலேயே கோபம். இத்தனை வருடங்களாகக் காத்திருந்ததுக்கும் தவித்திருந்ததுக்கும் காக்க வைத்ததுக்கும் தவிக்க வைத்ததற்கும் இப்போதே இந்தக் கணமே ஈடு செய்ய வேண்டுமென்ற பரபரப்பு, இவளைத் தண்டித்து நானும் இவளால் தண்டிக்கப்பட வேண்டுமென்ற செல்லமான எண்ணம்.’

‘என்ன யோசிக்கிறீர்கள்?’ என்றாள்.

இதுதான் ஆதவன். இதற்கு மேல் என்ன ஆகிறதென்றால், அவள் ஒரு டான்ஸர். அந்தச் சாலையிலேயே நடனம் ஆடுகிறாள். எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்கள். இவனுக்குக் கோபம் வந்து விடுகிறது. ஒரு டாக்ஸியை வரவழைத்து அவளை அதில் இழுத்துப் போட்டுக்கொண்டு போகிறான். அவளும் அவன் கோபத்தை ரசிக்கிறாள்.

ஏதோ ஹாரி பாட்டர் கதை படிக்கிறாற்போல் இருக்கிறதல்லவா? அதுதான் ஆதவனின் லார்ஜர் தேன் லைஃப் பாத்திரங்கள்.

1978-ம் ஆண்டு, என் 25-வது வயதில் நான் தில்லி சென்றதற்குக் காரணமே ஒருவகையில் ஆதவன்தான். ஆதவன் தவிர கணையாழி ஆசிரியர் குழு மற்றும் க.நா.சு. உட்பட ஒரு எழுத்தாளர் படையே தில்லியில்தான் இருந்தது. ஆனால் ஆண்ட்டி க்ளைமாக்ஸாக நடந்தது என்னவென்றால், தில்லியில் போய் நான் யாரையுமே பார்க்கவில்லை. காரணம், அங்கே இருந்த ஒரு இலக்கிய மந்திரவாதியிடம் மாட்டிக் கொண்டு விட்டேன். அவரிடம் மாட்டினால் அவ்வளவுதான். தி. ஜானகிராமனைத் தவிர மற்ற அத்தனை பேரும் வீண் என்பார். தி.ஜா.வையோ அப்போது எனக்குப் பிடிக்காது. முடிந்தது கதை. யாரையுமே பார்க்கவில்லை. மந்திரவாதியின் மெஸ்மரிஸ வளையத்திலிருந்து வெளியே வந்த போது இ.பா. போலந்து போய் விட்டார். க.நா.சு. தமிழ்நாடு. ஆதவன் பெங்களூருக்கு மாறி விட்டார். மாறின கையோடு சிருங்கேரியில் உள்ள துங்கா நதியின் சுழலில் சிக்கி இறந்து விட்டார். இறந்தபோது அவர் வயது 45. ஜூலை 19-ம் தேதி 1987.

ஒன்றிரண்டு முறை ஆதவனை தில்லி பிரகதி மைதானில் உள்ள காதம்பரி அரங்கில் சந்தித்திருக்கிறேன். ஆண்களில் அப்படி ஒரு அழகும் வசீகரமும் வெகு அபூர்வம். காந்தத்தைப் போல் ஈர்க்கும் கண்கள். ரோஜா நிற உதடுகள். சாமுத்ரிகா லட்சணத்துக்கேற்றவாறு சிருஷ்டிக்கப்பட்ட பெண்களுக்கு உள்ளது போல் வரைந்தது போன்ற நீண்ட புருவம். சுருள் சுருளாக முடி. மீசை இல்லாத முகம். நல்ல உயரம். நான் அண்ணாந்துதான் பேச வேண்டியிருந்தது. எப்போதும் புன்னகை தவழும் முகம். இவருக்குக் கோபமே வந்திராதோ, அதிர்ந்தே பேசத் தெரியாதோ என்பது போன்ற குரல். கூர்ந்து கேட்டால்தான் புரியும் என்பது போன்ற மிக மென்மையான பேச்சு.

அவரே ஒரு கதையில் குறிப்பிடுவது போல, வெட்கத்தில் தாழ்ந்திருக்கும் அவள் பார்வை சற்றே நிமிரும் சமயங்களில் அவளை உவகையிலும் சிலிர்ப்பிலும் ஆழ்த்தும் உயரம்; மீசை தாடி இல்லாமல் மழுமழுவென்று க்ஷவரம் செய்யப்பட்ட சுத்தமான, மாசு மருவற்ற முகம்.

தில்லியில் ஒரு காலகட்டத்தில் ஆசிரியர், மாணவர் என்று மூன்று தலைமுறை எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார் இந்திரா பார்த்தசாரதி. தி. ஜானகிராமனின் மாணவன் இ.பா., இ.பா.வின் மாணவர்கள் ஆதவனும் எஸ். சம்பத்தும். இது குறித்து இ.பா. மேலும் கூறுகிறார்:

அவன் நேஷனல் புக் ட்ரஸ்டில் வேலை பார்த்தபோது அநேகமாக வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை என் வீட்டுக்கு வருவான். என் வீடு அவன் அலுவலகத்தினின்றும் மிகத் தொலைவில் இல்லை. அவன் என் வீட்டில் இரண்டு மணி நேரம் இருந்து ‘பேசிக் கொண்டிருந்தான்’ என்றால், அவன் பேசிய வாக்கியங்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையில்தான் இருக்கும். அவன் உரையாடலில், பொருள் பொதிந்த மௌனங்களும் புன்னகையும்தான் அதிகமாக இருக்கும். ஒரு தடவை அவன் என் மனைவியிடம் சொன்னான், ‘டைம் போனதே தெரியலே, மூணு மணி நேரமா பேசிண்டேயிருந்துட்டோம்’ என்று. என் மனைவி சிரித்துக் கொண்டே, ‘ஏன் pluralலெ சொல்றீங்க?’ என்றதும், மறுபடியும் புன்னகைதான் அவன் பதில்.

(தொடரும்)

இணைப்பு
ஆதவன் சிறுகதைகள்
http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0396.pdf

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.