திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கட்டாய கல்விச் சட்டம்- இனியும் தாமதம் வேண்டாம்

இந்திய அரசியல் சாசன திருத்தம் மூலம் இலவச கட்டாயக் கல்வி, குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக்குவதற்கான ஒரு சட்டப்பூர்வமான முயற்சியாகு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:29 am

இந்திய அரசியல் சாசன திருத்தம் மூலம் இலவச கட்டாயக் கல்வி, குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக்குவதற்கான ஒரு சட்டப்பூர்வமான முயற்சியாகும்.

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு வழிகாட்டுதல் மாதிரி விதிகளைத் தயாரித்து வெளியிட்டுள்ளது மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம்.

குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் மாதிரி விதிகளில் அரசாங்கம், உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் பெற்றோரின் கடமைகள், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்புகள் உள்பட பல்வேறு அம்சங்கள் கூறப்பட்டுள்ளன.

மாதிரி விதிகளில் வரவேற்கத் தக்க அம்சங்கள்

மாதிரி விதிகளில் அருகமை பள்ளிகள் குறித்து வரையறை செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி ஒரு கிலோ மீட்டருக்குள்ளும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி 3 கிலோ மீட்டருக்குள்ளும் அமைந்திருக்க வேண்டும் மேலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்புகளையும் உள்ளடக்கி மாநில அரசு தரம் உயர்த்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.  வகுத்துரைக்கப்பட்ட தொலைவுக்குள் ஒரு அருகமைப்பள்ளி இல்லையென்றால் மாநில அரசு இலவச போக்குவரத்து வசதி மற்றும் உறைவிட வசதிகளுக்கான உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பது இந்த மாதிரி விதிகளில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அருகமை பள்ளிகளை உருவாக்குவதற்கான ஒரு விரிவான பள்ளி வரைபடத்தை உருவாக்குமாறு மாநில அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். இதில் சாதி, மதம், இனம் அடிப்படையில் பாகுபாடு பார்க்கக் கூடாது. இந்த 25 சதவீத இடங்களுக்கான கட்டணத்தை மட்டும் அரசு அப் பள்ளிகளுக்கு திரும்பச் செலுத்தும். பள்ளி சேர்க்கைக்கான காலம் கல்வியாண்டு தொடங்கப் பெற்ற நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யலாம்.

பள்ளி வளாகம் கல்விப் பணியைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது. அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும். இதில் 75 சதவீதம் உறுப்பினர்கள் பெற்றோர், மீதமுள்ள 25 சதவீதத்தில்- மூன்றில் ஒரு பங்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர், மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்கள்  மற்றும் மூன்றில் ஒரு பங்கு உள்ளூர் கல்வியாளர்களைக் கொண்டு அமைக்கப்பட வேண்டும்.

பள்ளியின் வகுப்பு வாரியான சேர்க்கை ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டுமானத் தேவைகள், அதற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று ஆண்டுகளுக்கான ஒரு பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாநில அரசும் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதற்கு இடைப்பட்ட காலத்தில் கல்வி உரிமை பாதுகாப்பு ஆணையத்தை அமைத்துக் கொள்ளலாம்.

மாநில ஆலோசனைக் குழுவே குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதை கண்காணிப்பதற்கான உயர்ந்த அமைப்பாகும் என இந்த மாதிரி விதிகளில் கூறப்பட்டுள்ளது.

குடிமை அமைப்புகளின் கோரிக்கை:

அருகமை பள்ளியின் பரப்பளவை மட்டும் வைத்து நிர்ணயிக்கக் கூடாது. மக்கள் தொகை அடிப்படையிலும் சேர்த்து வரையறுக்க வேண்டும். ஒரு பகுதியில் 35-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் ஒரு பள்ளி தொடங்கப்பட வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு, மாணவர்களின் கற்றல் வெளிப்பாடுகள் மற்றும் ஆசிரியர் திறன்களை மதிப்பீடு செய்யவும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு சேவைக்கான செலவினங்ளைத் திரும்பிச் செலுத்த வழி காண வேண்டும்.

பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதற்கான விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு அரசு பள்ளிகளையும் உட்படுத்தினால்தான் அரசுப் பள்ளிகளின் தரம் உயரும்.

தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் நலிவுற்ற வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் யார் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. எப்படி அந்த குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள்? அவர்களுக்கான கல்விச் செலவை அரசு திரும்பச் செலுத்தும் முறை இவற்றை அரசு எவ்வாறு கண்காணித்து உறுதி செய்யும்? இதுபோன்ற பல கேள்விகளுக்கு தெளிவான விளக்கமேதுமில்லை.

வாய்ப்பு மறுக்கப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவில் ஊனமுற்ற குழந்தைகள், உள்ளூரிலேயே வேறு இடத்தில் குடியமர்வு செய்யப்பட்டவர்கள் புலம்பெயரும் தொழிலாளர்களின் குழந்தை, சிறப்புத் தேவையுள்ள குழந்தை போன்ற குழந்தைகளை சிறப்பாக குறிப்பிடப்பட வேண்டும்.

மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஒன்றினை உடனடியாக தமிழக அரசு அமைத்திட வேண்டும்.

எட்டாம் வகுப்பு வரை குழந்தைகள் ஆண்டுதோறும் தேர்ச்சி அடையப் பெறுவதாக கூறப்பட்டுள்ளது. அவர்களின் கற்றல் திறன் நிலையை பொறுத்து அல்ல இந்த தேர்ச்சி. எனவே கற்றலில் பின்தங்கிய குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தகுந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களின் திறமை குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒருமுறை மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கு ஏற்றவாறு முறையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

மாதிரி விதிகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரியிலேயே வெளியிட்டும் தமிழக அரசு இந்த சட்ட விதிகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அரசின் மெத்தனப் போக்கினால் அடிப்படைக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் பின்தங்கிய மக்களுக்கு எட்டாக்கனியாகும் நிலையே நீடிக்கிறது.

எனவே தாமதமாகும் கல்வி உரிமையை உறுதி செய்வதற்கு அரசு இச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான விதிகளை காலதாமதம் செய்யாமல் உடனடியாக வெளியிட்டு பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் கல்விக் கண்களைத் திறக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.