சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

இலவச டிராக்டர் உழவுத் திட்டம்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்'' என்றார் பாரதி. நாட்டின் உற்பத்தி விகிதமே ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான மகா சக்தி. இந்த உற்பத்தி விகிதத்தில் கணிசமான அளவு முக்கிய பங்கு வகிப்பது வி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:00 pm

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்'' என்றார் பாரதி. நாட்டின் உற்பத்தி விகிதமே ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான மகா சக்தி. இந்த உற்பத்தி விகிதத்தில் கணிசமான அளவு முக்கிய பங்கு வகிப்பது விவசாயமே. இதை நாம் மேம்படுத்தும்போது உள்நாட்டு உற்பத்தி விகிதம் அதிகரிக்கும்.

விவசாயி வாழ்க்கைச் சூழலானது இன்றைக்கு வங்கிக்கடன் சுமை, வானம் பார்த்து நிற்கும் நிலைமை மற்றும் பாடாய்ப்படுத்தும் வறுமை ஆகியவையே. இந்த நிலை சற்று மாறுவதற்கு ஒரு சில நல்ல விஷயங்களைச் செய்து தர அரசு முன்வர வேண்டும். இங்கே குறிப்பிடப்படும் "டிராக்டர் உழவு' முறையானது விவசாயத்தின் அடிப்படைத் தேவையான விளை நிலங்களை உழுது தரும் திட்டமாகும். இதற்காக நம் அரசு செய்ய வேண்டிய செயல்பாடு, நடைமுறை மற்றும் கடைப்பிடிக்க வேண்டியவை பின்வருமாறு:

தமிழ்நாட்டின் அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகளின் (விஏஓ) ஆளுமையின் கீழ் தலா 1 டிராக்டர் வீதம் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு டிராக்டர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியின் ஆளுகையின்கீழ் "டிராக்டர் டிரைவர்' நியமிக்கப்பட வேண்டும்.

உழவு செய்ய டிராக்டர் தேவைப்படும் விவசாயி அதற்கான கடிதத்தை, கிராம நிர்வாக அதிகாரியிடம் (விஏஓ) கொடுத்து, நிலத்தின் உழவு ஒப்புகை கையெழுத்துப் பெற்று, டிராக்டரை எடுத்துச் செல்ல வேண்டும்.

மேலும் டிராக்டர் உழவுக்குத் தேவைப்படும் நேரம் மற்றும் உழவு நிலத்தின் அளவு (எத்தனை குழி அல்லது மா அல்லது ஏக்கர்) என்பதைக் குறிப்பிட வேண்டும். இதை சரியானதா எனக் கணக்கிட்டு கிராம நிர்வாக அதிகாரி ஒப்புகை அளிக்க வேண்டும்.

தேவையான அளவு உழவு செய்ததற்கான ஒப்புகையை விவசாயியிடம் இருந்து கிராம நிர்வாக அதிகாரி பெற வேண்டும்.

டிராக்டருக்குத் தேவையான டீசல் செலவை மட்டும் விவசாயியே ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்ற செலவான உணவு, கூலி, வண்டி தேய்மானம் போன்றவற்றை அரசே ஏற்றுக்கொள்ளலாம்.

இதில் பயன்பெறும் பயனாளிக்கு அதிகபட்ச விவசாய நிலம் ஒரு ஏக்கருக்கு மிகாமல் இருக்க வேண்டும். இது சம்பந்தமான உண்மைத் தகவலை கிராம நிர்வாக அதிகாரி கவனித்துக் கொள்ள வேண்டும். இதில் பயன்பெறும் பயனாளி எக்காரணம் கொண்டும் சொந்த டிராக்டர் உள்ளவராக இருக்கக்கூடாது.

இதில் பயன்பெறும் விவசாயி சொந்த ஆழ்குழாய் பாசன வசதி உள்ளவராக இருக்கக்கூடாது.

மேற்கூறிய வகையில் இந்தத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தலாம். இந்தத் திட்டத்தால் ஏழை விவசாயிகள் நல்ல பலன் பெறுவார்கள். ஏனெனில் இன்று நடைமுறையில் ஒரு நாள் உழவு (மாடு பூட்டி உழுவது) குறைந்தது ரூ.400-500 ஆக உள்ளது. மேலும் டிராக்டர் மூலம் நிலத்தை உழவு செய்ய மணிக்கு மணி பணம் என்ற நிலை உள்ளது. இந்தக் காரணத்தால் சில விவசாயிகள் நிலத்தை உழவு செய்யவே சிரமப்படும் இந்த நேரத்தில் நாட்டின் உற்பத்தியை அதிகப்படுத்தவும், விவசாயத்தின் சிரமத்தைப் போக்கவும் அரசானது இலவச டிராக்டர் உழவுத் திட்டம் கொண்டுவருவது மிக்க பயன்தருவதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.